திருச்சி சிவா வீட்டில் கே.என்.நேரு; பூசலை பேசித் தீர்த்தனர்!

திருச்சி சிவா வீட்டில் கே.என்.நேரு
திருச்சி சிவா வீட்டில் கே.என்.நேரு

திமுக எம்பி திருச்சி சிவா வீட்டுக்கு அமைச்சர் கே.என்.நேரு நெரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலை அடுத்து, தங்கள் மத்தியிலான பூசலை இருவரும் பேசித் தீர்த்தனர்.

நேற்று முன்தினம் அமைச்சர் கே.என்.நேருவின் ஆதரவாளர்கள் சிலர், மாநிலங்களவை திமுக எம்பியான திருச்சி சிவாவின் வீட்டில் தாக்குதல் நடத்தினர். வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள், வாகனங்கள், பிளாஸ்டிக் இருக்கைகள் என பலதும் இதனால் சேதமடைந்தன. மேலும் அமர்வு நீதிமன்ற காவல்நிலையத்தில் புகுந்து, அங்கிருந்த சிவா ஆதரவாளர்கள் சிலரையும் தாக்கினர்.

அன்றைய தினம் சிவா வீடு அமைந்திருக்கும் பகுதியில் திறப்பு விழா காணும் ஒரு உள்விளையாட்டரங்கத்தின் கல்வெட்டில் அவர் பெயர் இல்லாதது பிரச்சினையின் தொடக்கமாக அமைந்தது. இது தொடர்பாக சிவா ஆதரவாளர்கள் அமைச்சர் நேருவின் காரை மறித்து விளக்கம் கேட்க முற்பட்டபோது, நேரு - சிவா ஆதரவாளர்கள் மத்தியில் மோதல் நிகழ்ந்தது. இதன் தொடர்ச்சியாகவே திருச்சி சிவாவின் வீட்டிலும், காவல்நிலையத்திலும் தாக்குதல்கள் நடந்தேறின.

கட்சியின் தொண்டர்கள் குண்டர்களாக செயல்பட்ட விதம் சிசிடிவி கேமராக்கள் உபயத்தால், எதிர்க்கட்சிகள் நகைக்க வழி செய்தன. திருச்சி திமுகவைப் பொறுத்தவரை கே.என்.நேருவின் ஆதரவாளர்கள் தங்களது கோட்டையாக கருதினாலும், நாடறிந்த பாராளுமன்றவாதியாக வட இந்தியா வரை திருச்சி சிவாக்கு செல்வாக்கு உண்டு. இதனால் கே.என்.நேரு ஆதரவாளர்கள் கட்டவிழ்த்த அடாவடிகள் தேசிய ஊடகங்களிலும் வெளியாயின.

அதற்குள், திருச்சி திமுக விவகாரத்தை விசாரித்த கட்சித் தலைமை, அடாவடியாக நடந்து கொண்ட நேருவின் ஆதரவாளர்களை சஸ்பெண்ட் செய்தது. அலுவல் நிமித்தம் வெளிநாட்டுப் பயணத்திலிருந்து வீடு திரும்பிய திருச்சி சிவா, ’மிகுந்த மனவேதனை அடைந்திருக்கிறேன். தனிநபரைவிட இயக்கமே முக்கியம்’ என முதிர்ச்சியாக தனது தரப்பை வெளிப்படுத்தினார்.

இதனிடையே முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியதை அடுத்து, திருச்சி சிவா வீட்டுக்கு இன்று அமைச்சர் கே.என்.நேரு விரைந்தார். சிவா - நேரு இடையே நீடித்த பேச்சுவார்த்தையை அடுத்து, தங்கள் இடையிலான சுமூகத்தை ஒருமித்த பேட்டியாக இருவரும் வெளிப்படுத்தினர். அப்போது நேரு பேசுகையில் ‘தகவல் பரிமாற்றத்தில் எழுந்த பிரச்சினையே அனைத்துக்கும் காரணம். நடந்த சம்பவம் குறித்து ஆரம்பத்தில் எனக்கு எதுவும் தெரியாது. நடந்ததில் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. தற்போது முதல்வர் கூறியதன் பேரில், சிவாவை நேரில் சந்தித்தேன். இருவரும் சில விஷயங்களை மனம்விட்டு பேசினோம். இனி இதுபோல் எதுவும் நடக்காது” என்றார்.

தொடர்ந்து பேசிய திருச்சி சிவா, “நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும். நடப்பவை நல்லவையாக இருக்கட்டும். முதல்வரின் மனம் சங்கடப்படக்கூடாது என்பதில் மிகுந்த அக்கறையோடு இருக்கிறோம். கழக வளர்ச்சிக்காகவே எங்களது வருங்கால செயல்பாடு அமைந்திருக்கும்” என்று இறுக்கமான குரலில் முடித்துக்கொண்டார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in