`அமைச்சர் நேரு ஒருமையில் பேசவில்லை; உரிமையில் பேசினார்'- சர்ச்சைக்கு சென்னை மேயர் பிரியா முற்றுப்புள்ளி

`அமைச்சர் நேரு ஒருமையில் பேசவில்லை; உரிமையில் பேசினார்'- சர்ச்சைக்கு சென்னை மேயர் பிரியா முற்றுப்புள்ளி

அமைச்சர் கே.என்.நேரு என்னை ஒருமையில் பேசினாரா என்பது குறித்து சென்னை மேயர் பிரியா விளக்கம் அளித்துள்ளார்.

தலைமைச் செயலகத்தில் அண்மையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, சென்னையில் ஒரு சில இடங்களில் மழைநீர் தேங்கி நின்றால் ஒரே நாளில் அது அப்புறப்படுத்தப்படும் என்றும் மழைநீர் வடிகால் பணிகளை எவ்வளவு விரைவாக முடிக்க முடியுமோ அவ்வளவு விரைவாக முடிக்குமாறு ஒப்பந்ததாரர்களை அழைத்து அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார். தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் சொல்லிக் கொண்டேயிருந்த அமைச்சர் கே.என்.நேரு, திடீரென 'ஏம்மா சொல்லும்மா' எனவும், இங்க வந்து நில்லுமா எனவும் மேயர் பிரியாவை பார்த்து பேசினார். மேயர் பிரியாவிடம் சற்று கடுமையாக பேசியது போல் வெளியான வீடியோ சமூக வலைதளங்களில் சர்ச்சையானது.

தற்போது மேயர் பிரியா விளக்கம் அளித்துள்ளார். அதில் "அமைச்சர் என்னை செய்தியாளர்களை சந்திக்கச் சொன்னது சாதாரண ஒரு நிகழ்வு தான். அமைச்சர் கே.என்.நேரு என்னை மிரட்டவோ, இல்லை கடுமையான வார்த்தைகளால் பேசவோ இல்லை. எல்லா இடங்களிலும் என்னை மதிக்கக்கூடியவர். நல்ல முறையில் அவருடைய பொண்ணு போல் என்னை பார்த்துக் கொள்வார்.

அமைச்சர் ஒருமையில் பேசியதாக நினைப்பதை விட உரிமையில் பேசியதாக தான் நான் நினைக்கிறேன். கட்சியில் மிகவும் மூத்தவர் என்பதோடு எங்கள் துறையின் அமைச்சர் அண்ணன் கே.என் நேரு. அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. மேயர் ஆகிய நாளிலிருந்து சென்னை மாநகராட்சி தொடர்பாக நான் எந்த பணியை முன்னெடுத்துச் சென்றாலும் மிகுந்த ஆதரவோடு இருக்கிறார் அமைச்சர் கே.என்.நேரு. இதுவரை நான் கேட்டு எதுவும் வேண்டாம் என்று சொன்னதில்லை" என கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in