
திமுக முதன்மைச் செயலாளரும், தமிழக நகர்ப்புற நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேரு, பங்காரு அடிகளாரின் காலடியில் தரையில் உட்கார்ந்திருக்கும் புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகியிருக்கிறது. காஞ்சி சங்கராச்சாரியார் நாற்காலியில் இருக்க, பாஜகவின் பொன்.ராதாகிருஷ்ணனோ, தமிழிசை சவுந்திரராஜனோ கீழே தரையில் அமர்ந்திருந்தால் அதைக் கடுமையாக விமர்சித்தவர்கள் திமுகவினர். மனிதனுக்கு மனிதன் மரியாதை கொடுக்காதது ஆரியப் பண்பாடு என்று திமுகவினர் காட்டமாக விமர்சித்தார்கள். இப்போது, திமுகவின் முதன்மை செயலாளரே தலையில் அமர்ந்திருக்கிறாரே, இதுதான் திராவிடக் கலாச்சாரமா என்று பாஜக ஆதரவாளர்கள் திமுகவைக் கடுமையாக விமர்சித்துவருகின்றனர்.
இந்தப் புகைப்படம் உண்மைதானா என்று திருச்சி மாவட்ட திமுகவினரிடம் கேட்டபோது, "அமைச்சர் கே.என்.நேருவின் தம்பியும், மறைந்த தொழிலதிபருமான ராமஜெயத்தின் மகன் திருமணம் வருகிற 16-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது. இதற்காக கடந்த 2 வாரமாக அவர், தமிழகம் முழுவதும் முக்கியப் பிரமுகர்களைச் சந்தித்து அழைப்பிதழ் கொடுத்துவருகிறார். அதற்காக அவர் மேல்மருவத்தூர் சென்று பங்காரு அடிகளாரைச் சந்தித்திருக்கலாம்.
அமைச்சருக்கு 70 வயதாகிறது. இந்த வயதில் அவர் ஏன் சிரமப்பட்டு தரையில் உட்கார்ந்தார் அல்லது அடிகளாரின் உதவியாளர்கள்தான் அமைச்சரை அப்படி உட்கார வைத்தார்களா என்று தெரியவில்லை. இந்த புகைப்படத்தை பாஜகவினருடன் சேர்ந்து, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் ஆதரவாளர்களும் பரப்புவதுதான் வேதனை தருகிறது" என்றனர்.
எப்படியோ, பாஜகவினரின் வாய்க்கு அவல் கொடுத்திருக்கிறார் கே.என்.நேரு.