சாதியைச் சொல்லி திட்டினார் அமைச்சர் ராஜ கண்ணப்பன்!

முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பரபரப்பு புகார்
ராஜ கண்ணப்பன்
ராஜ கண்ணப்பன்

"போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.ராஜகண்ணப்பன் என்னை சாதியைச் சொல்லித் திட்டியதுடன், மாவட்டம்விட்டு மாவட்டம் மாற்றிவிடுவேன் என்றார். இந்த 57 வயதில் இப்படியொரு அவமானத்தைச் சந்தித்ததில்லை" என்று முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் புகார் தெரிவித்திருப்பது அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையாகி இருக்கிறது.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) ராஜேந்திரன், முதுகுளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், போக்குவரத்துத்துறை அமைச்சருமான ராஜகண்ணப்பன் குறித்து பரபரப்பு புகார் கூறியுள்ளார். இதுதொடர்பாக முதுகுளத்தூரில் இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:-

பத்திரிகையாளர்களிடம் பேசிய ராஜேந்திரன்...
பத்திரிகையாளர்களிடம் பேசிய ராஜேந்திரன்...

"அமைச்சர் எஸ்.ராஜ கண்ணப்பன் வரச்சொன்னதால், நேற்று முன்தினம் காலை 9.30 மணிக்கு சிவகங்கையில் உள்ள அவரது இல்லத்துக்கு, நானும் எனது நண்பருமான பிடிஓ அன்புக்கண்ணனும் சென்றோம். அமைச்சரின் இல்லத்துக்குச் சென்றவுடன், அமைச்சருக்கு நான் வணக்கம் தெரிவித்தேன். பதிலுக்கு அவர் வணக்கம் கூறவில்லை. என்னைப் பார்த்தவுடன் அமைச்சர், 'ஏன்யா நீ ஒரு எஸ்சி பிடிஓ, நீ சேர்மன் (முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் அதிமுக) சொல்றத மட்டும்தான் கேட்ப, மற்றவர்கள் யார் சொன்னாலும் நீ கேட்க மாட்ட...' என்பதை அழுத்தமாகச் சொல்லிச் சொல்லி சண்டை போடுவது மாதிரி ஆக்ரோஷமாக பேசினார்.

'நீ ஒரு எஸ்சி பிடிஓ. அதனாலதான் நான் உன்னைய இங்க வெச்சிருக்கிறேன். இதுக்கு மேல உன்னையை இந்த சீட்லேயே நான் வெச்சிருக்க மாட்டேன். இன்னைக்கு நான் உன்னையை டிரான்ஸ்ஃபர் பண்ணிடுறேன். நீ எஸ்சி பிடிஓ. நீ பிடிஓ ரெகுலர் சீட்ல இருக்கிறதுக்கே தகுதியில்ல. உன்னை உடனே இப்பவே மாத்துறேன். மாவட்டத்தை விட்டு மாவட்டத்துக்கு மாத்திடுவேன். அமுதா மேடம் (உள்ளாட்சித்துறை முதன்மை செயலாளர்) கிட்ட சொல்லி உன்னை உடனே வடமாவட்டத்துக்கு மாத்திடுவேன். நீ என்ன நினைச்சிட்டு இருக்கிற?' என்று கடுமையாக பேசினார்.

ஐந்தாறு முறை எஸ்சி பிடிஓ, எஸ்சி பிடிஓ என்று பல வார்த்தை களால் சொல்லி, என்னைக் காயப்படுத்தி அழக் கூடிய நிலையில் அவர் சொன்ன இடத்தில் நான் உட்கார்ந்திருந்தேன்.

தொடர்ந்து பேசிய அவர், 'இவன் இதுக்கு சரிப்பட்டு வரமாட்டான். உடனே மாத்துங்க' என்று லெட்டர் அடித்துக்கொண்டு வரச்சொன்னார். உள்ளே போனதில் இருந்து ஒருமையில்தான் பேசினார். அதற்கடுத்து எங்களை நாயை விரட்டுற மாதிரி, ‘போங்கய்யா’ என்று விரட்டினார். இந்த செய்தியை உள்ளது உள்ளபடி சொல்லியிருக்கிறேன். எதையும் கூட்டியே, குறைத்தோ மாண்புமிகு அமைச்சரை நான் குறை சொல்லவில்லை. எனக்கு வயது 57. இத்தனை ஆண்டுகளில் நான் சந்தித்திராத மனக்காயத்தை நேற்று சந்தித்தேன். மதியம் சாப்பிடல. இரவு முழுவதும் படுக்கையில் எனக்குத் தூக்கம் வரவில்லை. காலையில் எழுந்து வாக்கிங் சென்றுவிட்டு, மாவட்ட ஆட்சியரையும், கூடுதல் ஆட்சியரையும் சந்திக்கச் சென்றேன். சந்திக்க முடியவில்லை. திரும்ப ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வந்து உங்களிடம் இதைச் சொல்கிறேன்."

இவ்வாறு பத்திரிகையாளர்களிடம் ராஜேந்திரன் கூறினார்.

அவரது இந்தப் புகார் அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இன்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து முறையிடுவதற்காக ராஜேந்திரன் ராமநாதபுரம் வந்தார். அவருக்குப் போட்டியாக திமுகவைச் சேர்ந்த சிலர் அவர் மீது புகார் கொடுப்பதற்காக அலுவலகம் வந்தனர். இன்னொருபுறம் வட்டார வளர்ச்சி அலுவலக ஊழியர்களும் இந்தப் பிரச்சினையில் இரண்டு பிரிவாக பிரிந்து நிற்பதால் இந்தப் பிரச்சினைக்கு யார் முற்றுப்புள்ளி வைப்பது என்று தெரியவில்லை.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in