`மத்தியில் ஆளுகிற கட்சி என்கிற திமிர்'- பாஜகவினரை வெளுத்து வாங்கிய அமைச்சர் துரைமுருகன்

`மத்தியில் ஆளுகிற கட்சி என்கிற திமிர்'- பாஜகவினரை வெளுத்து வாங்கிய அமைச்சர் துரைமுருகன்

``நான் ஒரு அமைச்சர், என்னுடைய தெருவே சரியாக இல்லை. நானே ரிப்போர்ட் எழுதிக் கொண்டிருக்கிறேன்'' என அமைச்சர் துரைமுருகன் வேதனை தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டம், சேனூர் ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றின் போது  அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களைச் சந்தித்தார். வேலூர் மாநகராட்சியை பாஜவினர் முற்றுகையிட்டது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, “அதிமுக ஆட்சிக் காலத்தில் எத்தனையோ முறை நாங்கள் மறியல் செய்திருக்கிறோம். ஆனால் நாங்கள் ஒரு முறையும் அத்துமீறி அலுவலகத்திற்குள் நுழைந்தது கிடையாது. ஆனால் மத்தியில் ஆளுகிற கட்சி என்கிற திமிர் காரணமாக பாஜகவினர் இன்று வரம்பு மீறி நடந்து கொண்டிருக்கிறார்கள். சாலைகள் சரியில்லை என்ற குற்றச்சாட்டை அவர்கள் முன் வைக்கிறார்கள். இவை அத்தனையும் அதிமுக ஆட்சியில் நடைபெற்ற பணிகள். அதிமுக ஆட்சியில் அக்கட்சியைச் சேர்ந்தவர்களுக்கே டெண்டர் விட்டார்கள். அவர்கள் இதுவரை வேலை செய்யவில்லை.

என்னுடைய தொகுதியில் அதிமுக எம்எல்ஏ ஒருவருக்குப் பாதாளச் சாக்கடை திட்ட பணிகளை கொடுத்தார்கள். இதுவரை அவர் திரும்பிப்பார்க்க வில்லை. சட்டப் பேரவையில் அவரை கண்டுபிடிப்பதற்காக ஒரு அதிமுகவினரிடம் அவரை அழைத்து வரச் சொல்லி ‘என்னய்யா இப்படி செய்றீங்க?’ ன்னு கேட்டேன். அன்றைக்குப் போனவர் இன்றுவரை காணவில்லை. நான் ஒரு அமைச்சர். என்னுடைய தெருவே சரியாக இல்லை. நானே ரிப்போர்ட் எழுதிக் கொண்டிருக்கிறேன். இதுவரை நடைபெறாத பணிகளுக்கு அதிமுகதான் காரணம். அவர்களுடன்தான் பாஜகவினர் கூட்டணி வைத்துள்ளார்கள். ஆகவே அதிமுகவை எதிர்த்துத்தான் அவர்கள் மறியல் செய்திருக்க வேண்டும்” என்றார்.

இதைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் திமுகவுடன் ரகசிய கூட்டணி வைத்துள்ளதாக எடப்பாடியின் குற்றச்சாட்டிற்குப் பதில் அளித்த துரைமுருகன், “ஈபிஎஸ் இவ்வளவு இறங்கிப் போவார் என நான் எதிர்பார்க்கவில்லை. முதலமைச்சராக இருந்தவர், எதிர்க்கட்சித் தலைவராக இருப்பவர் இது போன்ற சில்லித்தனமான குற்றச்சாட்டுகளையெல்லாம் முன்வைக்கக் கூடாது.” என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in