`இவர்கள் 2 பேரும் இந்தியாவையே கொள்ளையடித்து விடுவார்கள்'- யாரைச் சொல்கிறார் துரைமுருகன்?

காட்பாடி விழாவில் துரைமுருகன்
காட்பாடி விழாவில் துரைமுருகன்

``கூட்டுறவு சங்கங்களில் தலைவர், செயலாளர் ஒன்றிணைந்தால் இந்தியாவையே கொள்ளையடித்து விடுவார்கள்''  என அமைச்சர் துரைமுருகன் பேசியிருப்பது கட்சிக்காரர்கள் மற்றும் கூட்டுறவு சங்க ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.  

வேலுார் மாவட்டம், காட்பாடியில் , மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் நடந்த, 69-வது கூட்டுறவு வார விழாவில் தமிழக நீர் பாசனதுறை அமைச்சர் துரைமுருகன்  கலந்து கொண்டார்.  நலத்திட்ட உதவிகளை வழங்கிய  அவர் பேசுகையில், "கூட்டுறவு சங்கங்களில் வாங்கிய கடனை மக்கள் திரும்பி செலுத்த வேண்டும். தேர்தல் நேரத்தில் கடனை தள்ளுபடி செய்வார்கள் என்று யாரும் நினைக்க வேண்டாம். கடனை திருப்பி செலுத்தினால்தான் அரசை  சிறப்பாக நடத்த முடியும். தள்ளுபடி செய்து கொண்டே இருந்தால் அரசு எப்படி நடக்கும்?

என் தொகுதியான காட்பாடியில் சைல மண்டலம் என்ற இடத்தில் கூட்டுறவு வங்கியில்  பலருக்கும் கடன் கொடுத்துள்ளனர். கடன் வாங்கியவர்கள்  அனைவரும் உண்மையானவர்கள் அல்ல. போலியான பெயரில் தலைவரும் செயலாளரும் இணைந்து கடன் கொடுத்துள்ளனர். இதனால் கடன் வாங்காதவர்கள் கடனை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

கூட்டுறவு சங்க செயலாளர்கள், தலைவர்கள் ஒன்றிணைந்தால் இந்தியாவையே கொள்ளையடித்து விடுவார்கள். மக்கள் நலன் கருதி  கூட்டுறவு ஊழியர்கள் நேர்மையோடு செயல்பட வேண்டும்" என்று பேசினார். அமைச்சரின் இந்த பேச்சு கூட்டுறவு சங்க தலைவர்களாக இருந்தவர்களுக்கும் தலைவர் பதவி எதிர்பார்த்து காத்திருக்கும் திமுகவினருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோல கூட்டுறவு ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து மூத்த அமைச்சர்கள் பலரும் இப்படி தரக்குறைவாக பேசும் நிலை தொடர்வதால் அரசு ஊழியர்கள் கோபம் அரசு மீது திரும்பும் அபாயம் இருக்கிறது என்பதை மூத்த அமைச்சர்களுக்கு முதல்வர் உணர்த்த வேண்டும் என்கின்றனர் கூட்டுறவு ஊழியர்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in