27 வயதில் இப்படியொரு நிலையா?- வளையலைக் கழற்றி ஏழையின் சிகிச்சைக்கு கொடுத்த அமைச்சர்!

27 வயதில் இப்படியொரு நிலையா?- வளையலைக் கழற்றி ஏழையின் சிகிச்சைக்கு கொடுத்த அமைச்சர்!

கேரள உயர்கல்வித்துறை அமைச்சர் பிந்து தன் கையில் இருந்த வளையலைக் கழட்டி ஏழை ஒருவரின் சிகிச்சைக்கு கொடுத்த சம்பவம் இன்று நடந்தது. இது கேரள மக்களையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கேரளத்தின் திருச்சூர் மாவட்டம், கருவண்ணூர் மூர்க்கநாடு பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மனைவி சரஸ்வதி. இவர்கள் இருவருமே வயோதிகத்தின் காரணமாக பல்வேறு உடல் உபாதைகளுடன் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். இவர்களின் மகன் விவேக்(27) இசைக்கலைஞராக இருந்தார். இவருக்கு அண்மையில் சிறுநீரகக் கோளாறு இருப்பது தெரியவந்தது. தினசரி டயாலிசிஸ் சிகிச்சை நடந்துவரும் விவேக்கிற்கு. சிறுநீரக மாற்று சிகிச்சை அவசியமானது. ஆனால் அதற்கு அவரிடமோ, அவரது குடும்பத்தினரிடமோ பொருளாதார பலம் இல்லை.

இதனால் மூர்க்கநாடு பகுதியில் இருக்கும் நூலகத்தில் வைத்து உள்ளூர் மக்கள் சார்பில் நிதி திரட்டப்பட்டது. இந்நிகழ்வில் பங்கேற்க கேரள உயர்கல்வித்துறை அமைச்சர் பிந்துவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்நிகழ்விற்கு வந்த அமைச்சர் பிந்து, விவேக்கின் ஏழ்மைநிலையைப் பார்த்து மிகவும் மனம் வருந்தினார். 27 வயதில் இப்படியொரு நிலையா? என வேதனைப்பட்டவர், திடீரென தன் கையில் இருந்த ஒரு வளையலைக் கழட்டி, சிறுநீரக மாற்றுச் சிகிச்சைக்கு நிதி பிரிக்கும் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மனு மோகனிடம் தன் பங்களிப்பாகக் கொடுத்தார். அடுத்தடுத்து அரசு நிகழ்ச்சிகள் இருந்ததால் நன்றிசொல்வதைக் கூட கேட்காமல் உடனே கிளம்பிச் சென்றார்.

அமைச்சர் பிந்து, திருச்சூர் மாவட்டத்தின் இறிஞ்சாலக்கூடா தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். கடந்த 2005-2010-ம் ஆண்டுகளில் திருச்சூர் மாநகர மேயராகவும் இருந்தவர் ஆவார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in