எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பதிலடி கொடுத்துள்ளார்.
கால்நடை மருத்துவர்கள் மாடுகளுக்கு போட வேண்டிய தடுப்பு மருந்து இதுவரை அரசினால் வழங்கப்படவில்லை என்றும் ஆடுகளுக்கு போட வேண்டிய தடுப்பு மருந்து மட்டும் உள்ளதாகவும் எனவே தடுப்பு மருந்தையே மாடுகளுக்கு செலுத்தி வருகின்றனர் என்றும் ஆறறிவு உள்ளவர்கள் மட்டுமல்ல ஐந்தறிவுள்ள கால்நடைகளின் வயிற்றில் அடிப்போம் என்ற குறிக்கோளோடு இந்த விடியோ அரசின் முதலமைச்சர் செயல்பட்டு வருகிறார் என்றும் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியிருந்தார்.
மேலும், "தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் மனிதர்களுக்கும் மருந்துகள் கொள்முதல் செய்வதில்லை. கால்நடைகளுக்கும் கொள்முதல் செய்வதில்லை. இதுதான் திராவிட மாடல் ஆட்சி. இந்த விடியா திமுக அரசு இனியாவது விழித்துக் கொண்டு கால்நடைகளுக்கு தேவையான தடுப்பூசி மருந்துகளை உடனடியாக கால்நடைகளுக்கு போட வேண்டும். தலைவாசல் கால்நடை பூங்காவில் சுற்றுச்சூழலுக்கும் நீர்நிலைகளுக்கும் ஆபத்தை உண்டாக்கும் தோல் பதனிடம் தொழிற்சாலை ஆரம்பிக்கும் முயற்சிய உடனடியாக கைவிட வேண்டும். சிவகங்கை செட்டிநாடு கால்நடை பண்ணையில் மீண்டும் முழு அளவில் பாரம்பரிய கால்நடைகளை காக்கும் வகையில் அதிகளவு நாட்டின கால்நடைகளை வளர்க்க வேண்டும் என்று இந்த விடியா அரசை கடுமையாக வலியுறுத்துகிறேன்" என்று ஈபிஎஸ் கூறியிருந்தார்.
இந்த நிலையில், கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், எடப்பாடி பழனிசாமிக்கு பதிலடி கொடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், `அதிமுக ஆட்சியில் கால்நடைகள் நலனை கோட்டை விட்டவர் எடப்பாடி பழனிசாமி. அதிமுக உள்கட்சி குழப்பத்தை திரையிட்டு மறைக்க கற்பனையாக அறிக்கை விட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி. கோமாரி நோய் தடுப்பூசி மருந்து பற்றாக்குறையால் மாடுகளுக்கு அம்மை நோய் தாக்கியுள்ளதாக கூறியிருந்தார் எடப்பாடி பழனிசாமி. அவசர தேவைக்கு சுமார் 5 லட்சம் கோமாரி நோய் தடுப்பு மருந்துகள் அரசிடம் கையிருப்பில் உள்ளன' என்று கூறியுள்ளார்.