`முதல்வராக இருந்தபோது ஒன்றும் செய்யாமல், இப்போது யோக்கியர் மாதிரி பேட்டி கொடுக்கிறார்’ : ஈபிஎஸ்ஸை சாடும் தா.மோ.அன்பரசன்

`முதல்வராக இருந்தபோது ஒன்றும் செய்யாமல், இப்போது யோக்கியர் மாதிரி பேட்டி கொடுக்கிறார்’ : ஈபிஎஸ்ஸை சாடும் தா.மோ.அன்பரசன்

``எடப்பாடி பழனிசாமிதான் முதல்வராகவும், பொதுப்பணித்துறை அமைச்சராகவும் இருந்த போது ஒன்றும் செய்யாமல், இன்றைக்குப் பெரிய யோக்கியர் மாதிரி வந்து இங்கே பேட்டி கொடுக்கிறார்'' என அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில தினங்களாகப் பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் சென்னை மாநகர மேயர் பிரியா உள்ளிட்டோர் நேற்று ஆய்வு செய்தனர். இந்நிலையில் சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆய்வு செய்து வருகிறார். அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொகுதியில் ஆய்வு செய்த எடப்பாடி பழனிசாமி தமிழக அரசும் அதிகாரிகளும் சரியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என குற்றம்சாட்டினார். இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாகச் சென்னையில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “மழை நீரை வெளியேற்றுவதற்கு நிதி ஒதுக்கி வேலை செய்து வருகிறோம். கடந்த திமுக ஆட்சியில் குன்றத்தூர் பகுதியில் பாதி வேலை முடிந்த நிலையில், சிறு பாலம் அமைக்கும் பணி நடைபெற்றது. அப்போது,  எங்கள் இடத்தில் நீங்கள் கால்வாய் பணி செய்ய கூடாது என பொதுப்பணித்துறையினுக்கு எதிராகத் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் இரண்டு துறை அதிகாரிகளும் ஒற்றுமையாக இருந்து, இந்த திட்டத்தை மக்கள் பயன்பாட்டில் கொண்டு வரவேண்டும் எனச் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு நான் நான்கு முறை சட்ட மன்றத்தில் இதுகுறித்து பேசுகிறேன். அப்போது எடப்பாடி பழனிசாமிதான் முதல்வராகவும், பொதுப்பணித்துறை அமைச்சராகவும் இருந்தார். இந்த திட்டத்திற்கு ஒரு பைசா கூட செலவு செய்யக்கூடாது என்ற எண்ணத்தில் அந்த திட்டத்தை பாழாக்கிவிட்டார். இன்றைக்குப் பெரிய யோக்கியர் மாதிரி வந்து இங்கே பேட்டி கொடுக்கிறார். நிவாரணப் பணிகளுக்கு அந்த பகுதிகளுக்கு ஆளே வரவில்லை என இன்று சொல்கிறார். கடந்த நான்கு நாட்களாக நான் அங்குதான் இருக்கிறேன்.

நேற்று காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை அப்பகுதியில் கொடுத்தோம். அதைப் பெரும்பாலானவர்கள் வாங்கவில்லை. அந்தப் பகுதியில் உள்ளவர்கள் வசதி படைத்தவர்கள் என்பதால் முகாம்களில் தங்க மறுத்து வெளியில் தங்கிக் கொள்வதாகச் சொல்லிவிட்டார்கள். சிலர் மட்டும்தான் முகாம்களில் தங்க ஒப்புக்கொண்டனர். 24 மணி நேரமும் அதிகாரிகள் அங்கே இருக்கிறார்கள். நேற்று மதியம் வரை அங்கேதான் நான் இருந்தேன். இவ்வளவு வேலைகளையும் நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம். பத்து வருடமாக எந்த வேலையும் பார்க்காமல் இருந்துவிட்டு இப்போது வந்து குறைசொல்வது என்ன நியாயம்?” என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in