
மாநில உரிமைகள் அச்சுறுத்தலுக்கு ஆளாகி இருக்கும் இன்றைய சூழலில் மத்திய- மாநில உறவுகள் குறித்த மற்றும் ஆளுநர் பதவி குறித்த பரிந்துரைகளை குறைந்தபட்ச செயல் திட்டத்தில் உள்ளடக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி முன்மொழிவினை வைத்துள்ளது.
பெங்களூருவில் நடந்து வரும் எதிர்க்கட்சி கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனும் பங்கேற்றுள்ளார். இக்கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள் குறித்த அறிக்கையினை அக்கட்சி வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், மணிப்பூரின் நிலவரம் குறித்து நேரில் பார்வையிட எதிர்க்கட்சிகளின் சார்பில் பிரதிநிதிகள் குழு அனுப்பவும், பொது சிவில் சட்ட மசோதாவை பாஜக அரசு கொண்டுவரும் என்ற அச்சம் நிலவும் சூழலில், இந்திய சட்ட ஆணையம் 2018-ம் ஆண்டு சொன்னது போன்ற ‘’இப்போது விரும்பதக்கதும் அல்ல அவசியமானதும் அல்ல’’ என்ற முடிவையும் இக்கூட்டத்தில் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தில், மாநில உரிமைகள் அச்சுறுத்தலுக்குள்ளாகி உள்ள சூழலில் மத்திய, மாநில உறவுகள் குறித்தும், ஆளுநர் பதவி குறித்தும் சர்காரியா கமிஷன், பூஞ்ச்சி கமிட்டி அளித்த பரிந்துரைகளை உள்ளடக்க வேண்டும். தென்மாநிலங்கள் வடமாநிலங்கள் இடையே ஏற்றதாழ்வை ஏற்படுத்தும் வகையிலான தொகுதி மறுவரையினை மேற்கொள்ளாமல் தற்போதைய நிலை மாறாமல் தொகுதி மறுவரையினை செய்வதை செயல் திட்டத்தில் சேர்க்க வேண்டும்.
எஸ்.சி, எஸ்டி, ஓபிசி மக்களின் மக்கள் தொகைக்கேற்ப கல்வி வேலை வாய்ப்புகளில் பிரதிநிதித்துவத்தை வழங்கும் விதமாக சட்டப் பாதுகாப்பு ஏற்படுத்தவும், மத சிறுபான்மையினருக்கு அரசியலமைப்பு வழங்கியுள்ள பாதுகாப்பை உறுதி செய்யவும், மகளிர் இட ஒதுக்கீடு உள்ளிட்ட நியாயமான பங்கேற்பை பெண்களுக்கு உறுதி செய்யவும் குறைந்தபட்ச செயல் திட்டத்தில் வாக்குறுதி அளிக்கப்பட வேண்டும்.
மேலும் தற்போதைய மத்திய ஆட்சியாளர்களின் தவறான பொருளாதார கொள்கைகளால் வறுமையும், வேலையின்மையும் அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களில் அமுல்படுத்தி வரும் திட்டங்களை முன்னுதாரணமாக கொண்டு குறைந்தபட்ச மாத வருமானத்தை அரசே உறுதி செய்யவதற்கு குறைந்த பட்ச செயல் திட்டத்தில் வழிவகை செய்யப்பட வேண்டும் எனவும் முன்மொழியப்பட்டுள்ளது’ என தெரிவித்துள்ளது.