அறிக்கை போதைக்கு பால்வளத்துறையை ஊறுகாயாகப் பயன்படுத்த நினைப்பதா?: அண்ணாமலைக்கு பால் முகவர்கள் சங்கம் கண்டனம்

அறிக்கை போதைக்கு பால்வளத்துறையை ஊறுகாயாகப் பயன்படுத்த நினைப்பதா?: அண்ணாமலைக்கு பால் முகவர்கள் சங்கம் கண்டனம்

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆவின் பால் வண்ணங்களை வைத்து அரசின் செயல்பாடுகளை விமர்சித்திருப்பதற்கு  தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கம் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நல சங்கத்தின் நிறுவனத் தலைவர் சு.ஆ. பொன்னுசாமி அண்ணாமலைக்கு எழுதியுள்ள  பகிங்கர கடிதத்தில்,

" தமிழக அரசின் பொதுத்துறை கூட்டுறவு நிறுவனமான ஆவினுடைய செயல்பாடுகள் குறித்து தாங்கள் தமிழக அரசை விமர்சனம் செய்வதை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வரவேற்கிறோம்.

ஏனெனில், கர்ப்பிணி தாய்மார்களுக்கு அரசு வழங்கும் பரிசு பெட்டகத்தில் உற்பத்தியே செய்யப்படாத ஆவின் ஹெல்த் மிக்ஸ் மூலம் மிகப்பெரிய அளவில் நடைபெற இருந்த முறைகேடு தங்களின் அறிக்கையால் வெளிச்சத்திற்கு வந்ததால் ஆவினுக்கும், தமிழக அரசுக்கும் ஏற்பட இருந்த பலகோடி ரூபாய் இழப்பை;j தடுத்து நிறுத்த ஒரு காரணமாக அமைந்தது.

அதே சமயம் 'ஆரஞ்சு' நிற பாக்கெட்டில் வரும் கொழுப்பு சத்து செரிவூட்டப்பட்ட பால் விற்பனையில் செயற்கையான தட்டுப்பாடு உருவாக்கப்பட்டு, அதே அளவில் திடச்சத்தும், சற்றே கூடுதல் அளவு கொழுப்பு சத்தும் உள்ள, அதிக விலையுள்ள 'சிவப்பு' நிறம் கொண்ட 'டீ மேட்' பால் விற்பனையைக் கட்டாயப்படுத்தும் ஆவின் நிர்வாகத்தை கண்டிப்பதாக கூறி, 'காவி' நிறம் கொண்ட 'ஆரஞ்சு' நிறத்தை தவிர்க்க 'சிவப்பு' நிறம் கொண்ட பால் பாக்கெட்டுகளை விற்பனை செய்ய தமிழக அரசு முயல்கிறது எனும் அர்த்தம் தொனிக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ளீர்கள்.

' ஆரஞ்சு வண்ணத்திற்கு (காவிக்கு) பெருகி வரும் மக்கள் ஆதரவு ஆளும் கட்சிக்கு அதிக வெறுப்பாகி விட்டது போல, அதனால் சிவப்பு வண்ணத்தை அதிகமாக வெளியிட்டு, மக்கள் விரும்பாத சத்து குறைவான சிவப்பு வண்ணத்தை பயன்படுத்த கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்' என அக்டோபர் 14-ம் தேதி நீங்கள் அறிக்கை வெளியிட்டிருப்பது ' ஆடு நனைவதாக கூறி ஓநாய் அழுத கதை போல' உள்ளது.

விலை குறைந்த பாலினைத் தட்டுப்பாடாக்கி, அதே அளவு சத்து கொண்ட அதிக விலையுள்ள பாலினை விற்பனை செய்யவதைக் கண்டிக்காமல் வண்ணத்தை வைத்து கண்டனம் தெரிவிக்கும் தங்களின் அறிக்கையை மக்கள் நலனுக்கு எதிரானதாகவே பார்க்கிறோம். மேலும் அரசியல்வாதிகள் தங்களின் அறிக்கை போதைக்கு பால்வளத்துறையை ஊறுகாயாக பயன்படுத்த நினைப்பதை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. 

ஆவினோ, தனியாரோ பால் பாக்கெட்டுகளுடைய வண்ணங்களை வைத்தோ, பண்டிகைகால வாழ்த்துச் செய்திகளை வைத்தோ அதற்கு சாதி, மத சாயம் பூசி அரசியல் செய்ய நினைத்து மக்கள் மனங்களில் விஷம பிரச்சாரம் செய்வதை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் ஒருபோதும் அனுமதிக்காது, அதனை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு கண்டும், காணாதது போலும் செல்லாது என்பதை எச்சரிக்கையாகவே பதிவு செய்ய விரும்புகிறோம்.

தமிழக அரசின் பொதுத்துறை கூட்டுறவு நிறுவனமான ஆவின் மத்திய அரசின் நிதியுதவியோடு செயல்பட்டு வரும் நிறுவனமாக இருக்கும் போது ஆவினுடைய தவறான செயல்பாடுகளைத் தடுக்க மத்தியில் ஆளுகின்ற உங்கள் அரசில் அங்கம் வகிக்கின்ற மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளத்துறை இணை அமைச்சராக இருக்கும்  எல்.முருகனிடம் இதுவரை எத்தனை முறை புகார் தெரிவித்து, களஆய்வுகள் மேற்கொண்டு ஆவினில் நடைபெற்ற முறைகேடுகளை தடுக்க என்னவிதமான ஆக்கபூர்வமானப் பணிகளை மேற்கொண்டீர்கள்?

ஆவினை மட்டுமே விமர்சனம் செய்யும் தாங்கள் அடிக்கடி பால் விற்பனை விலையை தன்னிச்சையாக உயர்த்துவது, பால் கொள்முதல் விலையை குறைப்பது என செயல்பட்டு வரும் தனியார் நிறுவனங்களை வரன்முறைப்படுத்தவோ, கண்டிக்கவோ எடுத்த முயற்சிகள் என்ன என்பதையும் விளக்க வேண்டும்.

ஆவினுடைய தவறான நிர்வாகத்தை மக்கள் நலன் சார்ந்து மட்டுமே கண்டித்திருந்தால், மாநில அரசின் பொதுத்துறை நிறுவனம் வீழ்ச்சியடைந்து விடக்கூடாது, வளர்ச்சியடைய வேண்டும் என ஆக்கபூர்வமான பணிகளை நீங்கள் முன்னெடுத்திருந்தால் உங்களுடைய செயல் உண்மையிலேயே பாராட்டுக்குரியதாக இருந்திருக்கும். இல்லை என்றால் நீங்கள் கூறுகின்ற ஆவின் தொடர்பான குற்றச்சாட்டுகள் அனைத்தும் அரசியல் உள்நோக்கம் கொண்டதாகவே பார்க்கப்படும்.

மேலும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் விரைவில் மத்திய இணை அமைச்சர்  எல்.முருகனை நேரில் சந்தித்து ஆவினில் நடைபெற்று வரும் முறைகேடுகள் குறித்தும், தனியார் பால் நிறுவனங்களை வரன்முறை செய்ய வேண்டியும் கோரிக்கை மனு அளிக்க உள்ளோம்" என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in