எம்ஜிஆர் முதல் எடப்பாடி பழனிசாமி வரை... அதிமுகவின் அரசியல் மாற்றத்திற்கு அடித்தளம் அமைத்த மதுரை!

எம்ஜிஆர் முதல் எடப்பாடி பழனிசாமி வரை... அதிமுகவின் அரசியல் மாற்றத்திற்கு அடித்தளம் அமைத்த மதுரை!

எம்ஜிஆர் முதல் எடப்பாடி பழனிசாமி வரை அதிமுகவில் நடக்கும் அனைத்து அரசியல் மாற்றங்களுக்கும் மதுரை அரசியல் களம் முக்கிய திருப்புமுனையாக இருந்து வருகிறது.

தமிழக அரசியலையும், மதுரையையும் பிரித்துப்பார்க்க முடியாது. அதற்குத் தமிழகத்தின் கடந்த கால அரசியல் வரலாறுகளே உதாரணம். அதுபோலவே, அதிமுகவில் ஒவ்வொரு காலகட்டத்திலும் நடக்கும் மாற்றங்களுக்கும் மதுரை மாநகரம் முக்கிய திருப்புமுனையாக இருந்து வந்திருக்கிறது. எம்ஜிஆரின் முதல் ரசிகர் மன்றம் உருவான இடம் மதுரை. எம்ஜிஆர் கட்சி தொடங்க காரணமாக அமைந்தது மற்றும் 2016-ம் ஆண்டு ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தற்போது வரை அக்கட்சியில் நடக்கும் மாற்றங்களுக்கும் மதுரை முக்கிய காரணமாக அமைந்து இருக்கிறது.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தற்காலிக முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றார். அதன்பிறகு கட்சியில் சசிகலாவும், டி.டி.வி. தினகரனும் கட்சி மற்றும் ஆட்சியில் ஆதிக்கம் செலுத்த விரும்பினர். அவர்கள் திட்டத்தின் படி சசிகலா, முதற்கட்டமாகக் கட்சியின் பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்தகட்டமாக சசிகலாவையும் முதலமைச்சராக்க அவரது குடும்பத்தினர் திட்டமிட்டிருந்தனர். அவருக்கு ஆதரவாக அன்றைய சசிகலாவின் தீவிர விசுவாசியான மதுரையைச் சேர்ந்த முன்னாள் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ‘‘கட்சிக்கும், ஆட்சிக்கும் ஒரே தலைமைதான் இருக்க வேண்டும், ’’ என்று கட்சியில் முதல் நபராக ஒற்றை தலைமை விவகாரத்தைத் தொடங்கி வைத்தார். அவரது கருத்தை மற்ற அமைச்சர்களும், நிர்வாகிகளும் வழிமொழியவே, சசிகலாவை முதலமைச்சராக்கும் வகையில் ஓ.பன்னீர்செல்வத்தை முதல்வர் பதவியிலிருந்து ராஜினாமா செய்யக் காரணமாக இருந்தார்.

அதற்குப் பிறகு ஓ.பன்னீர்செல்வம், தன்னைக் கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்ததாக சசிகலாவை எதிர்த்து தர்மயுத்தத்தைத் தொடங்கினார்.இதற்கிடையில், சொத்து குவிப்பு வழக்குத் தீர்ப்பு வெளியாகவே சசிகலா பெங்களூரு சிறைக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. அதனால், சசிகலா தனது ஆதரவாளரான எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சராக நியமித்தார். மேலும் கட்சியையும், ஆட்சியையும் டி.டி.வி. தினகரன் கட்டுப்பாட்டில் செயல்பட வேண்டும் என அமைச்சர்கள், நிர்வாகிகளிடம் கூறிச் சென்றார். சசிகலா சிறை சென்ற சிறிது காலத்திலேயே எடப்பாடி பழனிச்சாமி தனது சுயரூபத்தைக் காட்டத்தொடங்கினார். டி.டி.வி. தினகரனை மீறி கட்சி, ஆட்சியில் தன்னிச்சையாக செயல்பட்டு, அவரையும், சசிகலாவையும் கட்சியிலிருந்து ஓரங்கட்டினார். அதன்பிறகு ஓ.பன்னீர்செல்வத்தையும் கட்சியில் இணைந்து அதிமுக கட்சியையும், சின்னத்தையும் மீட்டார். இதைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வத்திற்குத் துணை முதலமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது. இரட்டை குழல் துப்பாக்கி போல் பொதுவெளியில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் இருவரும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராகவும், இணை ஒருங்கிணைப்பாளராகவும் கட்சியை வழிநடத்தினர். இருவருக்கும் அவ்வப்போது சில உரசல்கள் ஏற்பட்டாலும், கட்சியை பிளவுபடாமல் பார்த்துக் கொண்டனர்.

இந்நிலையில் கடந்த மக்களவைத் தேர்தல் முடிந்தநிலையில் மதுரை புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளராக இருந்த வி.வி.ராஜன் செல்லப்பா, சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் திடீரென செய்தியாளர்களைச் சந்தித்து," ஆட்சிக்கும், கட்சிக்கும் ஒற்றை தலைமைதான் வேண்டும்" என முதல் ஆளாகப் போர்க்கொடி தூக்கினார். ஜெயலலிதா காலத்திலேயே ஓ.பன்னீர்செல்வத்திற்கும், வி.வி.ராஜன் செல்லப்பாவுக்கும் இடையே மோதல் இருந்து வந்தது. கடந்த மக்களவைத் தேர்தலில் தனது மகன் ராஜ்சத்யன் தோல்விக்கு ஓ.பன்னீர்செல்வத்தின் உள்ளடி வேலையும் ஒரு காரணம் என்பதால் ஒற்றைத் தலைமை கோஷத்தை முன்வைத்தார். உடனடியாக ஓபிஎஸ்-ஈபிஎஸ் இருவரும் அவரை அழைத்து சமாதானம் செய்தனர். ஆனால், அப்போது அவர் ஆரம்பித்து வைத்த குரல் தற்போது பொதுக்குழுவைக் கூட்டி ஒற்றை தலைமையைத் தேர்ந்தெடுக்கும் நிலைக்கும் அதிமுக தள்ளப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in