`அதிமுக சிதறிக் கிடக்கிறது; நாங்கள் பதறிக் துடிக்கிறோம்'- அதிரவைக்கும் அன்வர் ராஜாவின் எம்ஜிஆர் நினைவுநாள் போஸ்டர்

`அதிமுக சிதறிக் கிடக்கிறது; நாங்கள் பதறிக் துடிக்கிறோம்'- அதிரவைக்கும் அன்வர் ராஜாவின் எம்ஜிஆர் நினைவுநாள் போஸ்டர்

"தலைவா! ஏழை மக்களுக்காக நீங்கள் துவங்கிய கட்சி. சிதறிக் கிடக்கிறது. நாங்கள் பதறித் துடிக்கிறோம் காப்பாற்றுங்கள்" என்று அதிமுக முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா ஒட்டியுள்ள போஸ்டர் தொண்டர்களை உற்று நோக்க வைத்துள்ளது.

எம்ஜிஆர் அதிமுக தொடங்கிய காலம் தொட்டு இன்று வரை ஒரே கட்சியில், (அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கிய பின்னும் ) தொடர்கிறார் முன்னாள் அமைச்சரும் முன்னாள் எம்பியுமான அன்வர் ராஜா. கிளைச் செயலாளராக இருந்து மாவட்டச் செயலாளர், சிறுபான்மை பிரிவு நல செயலாளர் என கட்சியில் உயர் பதவியை எட்டியவர். 1986-ல் மண்டபம் ஊராட்சி ஒன்றிய தலைவர், 1996-ல் சட்டமன்ற உறுப்பினராகி அமைச்சர், 2014-ல் நாடாளுமன்ற உறுப்பினர், வக்பு வாரிய தலைவர் என ஆட்சி அதிகாரங்களில் அங்கம் வகித்தவர்.

ஜெயலலிதா மறைவுக்கு பின் ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தியபோது, ஈபிஎஸ் தலைமையிலான அதிமுகவை ஆதரித்தார். அதிமுக கொடியும், இரட்டை இலை சின்னமும் எங்கிருக்கிறதோ அதற்கு ஆதரவு தெரிவித்து வந்தார். இதன் பின்னர் ஈபிஎஸ், ஓபிஎஸ் கரம் கோர்த்தபோது மனநிறைவோடு கட்சி பணிகளில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், ஊடக விவாதங்களில் ஒரு சில நேரங்களில் அதிமுக தலைமையைப் பற்றி விமர்சனம் செய்ததாக கூறி கடந்த 2021- ம் ஆண்டு நவம்பர் மாத தொடக்கத்தில் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து அன்வரை நீக்கம் செய்து ஈபிஎஸ், ஓபிஎஸ் உத்தரவிட்டனர்.

இதைத் தொடர்ந்து மவுனம் காத்த அவர், அக்டோபர் 17-ம் தேதி அதிமுக நிறுவன நாளில் தனது வீட்டில் கொடி ஏற்றி எம்ஜிஆர் படத்திற்கு மரியாதை செலுத்தினார். இதில் அவரது நீண்ட கால நண்பர்கள் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர். அப்போது அவர் அதிமுகவிற்கு புதிய தலைவர் வருவார் என ஆரூடம் கூறினார். இதைத் தொடர்ந்து, வரும் 24-ல் எம்ஜிஆரின் 35-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி ராமநாதபுரம் நகரில் இவர் அச்சடித்து ஒட்டியுள்ள போஸ்டர் அதிமுகவின் உண்மை தொண்டர்களை கவர்ந்துள்ளது. அதில், 'தலைவா! ஏழை மக்களுக்காக நீங்கள் துவங்கிய கட்சி. சிதறிக் கிடக்கிறது. நாங்கள் பதறித் துடிக்கிறோம் காப்பாற்றுங்கள்' என இறைவனிடம் முறையிடுவது போல் தெரிவித்துள்ளார் அன்வர்ராஜா .

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in