'பெண் காவலரைத் தாக்கினார்': ஜிக்னேஷை மீண்டும் கைதுசெய்ய அசாம் போலீஸ் சொல்லும் காரணம்

'பெண் காவலரைத் தாக்கினார்': ஜிக்னேஷை மீண்டும் கைதுசெய்ய அசாம் போலீஸ் சொல்லும் காரணம்

பிரதமர் மோடி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ட்வீட் செய்ததாகக் கைதுசெய்யப்பட்ட ஜிக்னேஷ் மேவானிக்கு ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில், அவர் மீண்டும் கைதுசெய்யப்பட்ட காரணத்தை வெளியிட்டிருக்கிறது அசாம் போலீஸ்.

நாதுராம் கோட்சேவை பிரதமர் மோடி கடவுளாகக் கருதி வழிபடுகிறார் என குஜராத் சுயேச்சை எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி ட்வீட் செய்ததாக அசாம் பாஜகவைச் சேர்ந்த அரூப் குமார் தே புகார் அளித்திருந்தார். அதன் பேரில் பாலன்பூரில் உள்ள சர்க்யூட் ஹவுஸில் தங்கியிருந்த ஜிக்னேஷ் மேவானியை கடந்த புதன்கிழமை (ஏப்.20) இரவு 11.30 மணிக்கு அசாம் போலீஸார் கைதுசெய்தனர். அகமதாபாத் கொண்டுசெல்லப்பட்ட அவர், அங்கிருந்து விமானம் மூலம் அசாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவருக்கு எஃப்.ஐ.ஆர் நகல் வழங்கப்படவில்லை எனக் காங்கிரஸாரும் அவரது ஆதரவாளர்களும் குற்றம்சாட்டினர்.

இந்த வழக்கில் அவருக்கு நேற்று (ஏப்.25) கோக்ரஜார் நீதிமன்றத்தில் ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில், மீண்டும் அவரை போலீஸார் கைதுசெய்தனர். போலீஸாரைத் தாக்கியதாக அவர் கைதுசெய்யப்பட்டதாக அப்போது சொல்லப்பட்டது. விரிவான தகவல்கள் எதுவும் அப்போது வெளியாகவில்லை.

இந்நிலையில், தற்போடு அவர் கைதுசெய்யப்பட்ட காரணத்தை அசாம் போலீஸார் வெளியிட்டுள்ளனர். ஏப்ரல் 21-ல் குவாஹாட்டி விமான நிலையத்திலிருந்து கோக்ரஜாருக்கு அழைத்துச் சென்றபோது, காவலர் குழுவில் இருந்த பெண் காவலரை கார் இருக்கையின் மீது தள்ளிவிட்டதாகவும் முரட்டுத்தனமாக சைகை செய்ததாகவும், அவதூறாகப் பேசியதாகவும் ஜிக்னேஷ் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டிருப்பதாக அசாம் போலீஸார் தெரிவித்திருக்கின்றனர்.

குவாஹாட்டியிலிருந்து கோக்ரஜார் செல்லும் வழியில் உள்ள பர்பேட்டா சாலை காவல் நிலையத்தில் அதே தினத்தில் இது குறித்து வழக்கு பதிவுசெய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்திருக்கின்றனர்.

அசாம் போலீஸ் சொல்லியிருக்கும் இந்தக் காரணம், கொடூரமானது என ஜிக்னேஷின் வழக்கறிஞர் ஆங்ஷுமன் போரா தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய அவர், "பெண் போலீஸை ஜிக்னேஷ் தாக்கியதாக, மூன்று நாட்கள் போலீஸ் காவலில் அவரை வைத்திருந்தபோது முணுமுணுப்பு கூட எழவில்லை. அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்ட உடனேயே அவர் மீண்டும் கைதுசெய்யப்பட்டார்” என்று தெரிவித்திருக்கிறார்.

இந்த வழக்கில் ஜிக்னேஷுக்கு ஜாமீன் கோரி பர்பேட்டா நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்யப்படவிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.