`எனது திருமணம் சார்ந்த நிலைப்பாடு தாயாரின் வாழ்வையே நொறுக்கிவிட்டது'- ஜோதி மணி உருக்கம்

`எனது திருமணம் சார்ந்த நிலைப்பாடு தாயாரின் வாழ்வையே நொறுக்கிவிட்டது'- ஜோதி மணி உருக்கம்

அரசியல் களத்தில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும்  காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி, தன் அம்மா குறித்து நெகிழ்ச்சியான, உருக்கமான ஒரு பதிவை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவுசெய்துள்ளார். அவரது அம்மாவை அணு அணுவாக நினைவு கூறும் அந்தப் பதிவு பலரையும் ரசிக்கவும், நெகிழவும் வைத்திருக்கிறது. 

``அம்மாவுக்கு செடிகள், பூக்கள், நறுமணம், பாடல் என்று அழகியல் சார்ந்த உலகில் விருப்பம் அதிகம். அவர்கள் விதைத்த விதைகள் அளவில்லாமல்  காய்க்கவும், பூக்கவும் செய்யும். செடிகள் இல்லாமல் அவர்களால் வாழவே முடியாது. பூக்கள் இல்லாமலும் புத்தகங்களை விரும்பிப் படிப்பார்கள். சிறிய தங்க நகைகள் மீது விருப்பமுண்டு. எப்பொழுதும் நேர்த்தியான தோற்றப் பொலிவோடு இருப்பார்கள். 

வீட்டில் செல்ல மகள். எனது அப்பிச்சி ஒரு காந்தியவாதி. அந்தக் காலத்தில் பி.ஏ. படித்தவர். புத்தகங்களால் நிறைந்தது அவரது உலகம். அம்மா அதிகம் அப்பிச்சியின் இயல்புகளைக் கொண்டிருந்தார்கள். நேர்மையாகவும், உண்மையாகவும், சிக்கனமாகவும் இருக்க வேண்டும் என்பதில் சமரசமே செய்து கொள்ள மாட்டார்கள். சிறு பெண்ணாக சிறிய, அல்பமான பொய்களைக்கூட வீட்டில் பேசிவிட முடியாது. அந்த மதிப்பீடுகளை எனக்கும். சாப்பாட்டோடு சேர்ந்து ஊட்டிவிட்டார்கள் என்று தோன்றும். 

பொதுவாழ்வில் பல நேரங்களில் சமரசமற்ற நேர்மையால், தயக்கமின்றி உண்மையைப் பேசும் குணத்தால் கடுமையான நெருக்கடிகளை எதிர்கொள்வது எப்பொழுதும் எனக்கு நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. ஆனால் அதுபற்றிய வருத்தங்கள் எப்பொழுதுமே எனக்கு வந்ததில்லை. அந்த அளவிற்கு மதிப்பீடுகள் சார்ந்த வாழ்வு இயல்பான ஒன்றாக இருக்க அம்மாவே காரணம். 

வாழ்க்கையின் இடிபாடுகளிடையே வாழ வேண்டிய கட்டாயம் அம்மாவிற்கு ஏற்பட்டபோதும் அதற்காக அவர் உடைந்து போனதில்லை. நம்ப முடியாத மன உறுதியோடும், அசாத்தியமான தைரியத்தோடும், மாறாத புன்னகையோடும் அம்மா எல்லாவற்றையும் எதிர்கொள்வதைப் பார்க்க மலைப்பாக இருக்கும். அம்மா தான் எனது முதல் ஆதர்சம். 

விதவைக்கோலம் அவர்களிடமிருந்து பூக்களையும், நகைகளையும், வண்ணங்களையும் பறித்தது. அப்பொழுது நான் சிறிய பெண். பிறகு கல்லூரி போனபின் அம்மாவின் நகைகளையும், வண்ணங்களையும் மீட்க முடிந்த என்னால் இறுதிவரை பூக்களை மீட்கவே முடியவில்லை

எனக்கும் அழகியல் சார்ந்த வாழ்வு மீது அதீத காதல் உண்டு. பூக்களின் வண்ணங்களும், வாசனையும் மனதை அள்ளும். ஆனால் அபூர்வமாகவே பூ வைப்பேன். நகைகள் குறிப்பாக தங்க நகைகள் மீது எனக்கு எப்பொழுதும் ஆர்வம் இருந்ததில்லை. சில வருடங்கள் வெறும் கழுத்தோடும் இருந்திருக்கிறேன். அம்மாவிற்கு அது குறித்த வருத்தம் எப்போழுதும் என்மீது இருந்தது. கூடவே பல வருத்தங்களும். 

நேர்த்தியாக உடை அணிவது, தலை வாருவது இதெல்லாம் முக்கியம் என்று தோன்றாத ஒரு வாழ்வை நோக்கி நான் வேகமாக நகரத் துவங்கினேன். புத்தகங்கள், பயணங்கள், காடுகள் , நதிகள், மலைகள் இவையே எனது ஆதர்சமாக இருந்தன. அம்மாவிற்கு எனது நகர்வு நிச்சயம் அதிர்ச்சியளித்திருக்க வேண்டும். ஆனால் ஒருபோதும் அதை அவர்கள் காட்டிக் கொண்டதில்லை. 

நான் பொதுவாழ்வை தேர்ந்தெடுத்ததும், திருமணத்தை மறுத்ததும் அவர்களுக்கு தீராத துயரமாக இருந்தது. பொதுவாழ்வில் என்னுடைய பணிகள் அவர்களுக்கு மனதிருப்தியை அளித்ததால் தாமதமாகவேணும் அதை ஏற்றுக்கொண்டார்கள். ஆனால் திருமணம் சார்ந்த எனது நிலைப்பாடு அவர்கள் கனவை மட்டுமல்ல வாழ்வையே நொறுக்கிவிட்டது என்பதை நான் உணர்ந்தாலும், எதுவும் செய்ய முடியாத ஒரு கையறு நிலையிலையே எப்பொழுதும் நான் இருக்க நேர்ந்தது. 

அம்மாவின் கனவுகளின் எல்லைக்குள் நான் இல்லை என்பதை அமமா சிறு வயதிலேயே உணரத் தொடங்கி விட்டார்கள் என்று நினைக்கிறேன். ஒருபோதும் அவர்கள் விருப்பத்தை வலுக்கட்டாயமாக என் மீது திணிக்க அவர்கள் முயற்சி செய்ததே இல்லை. மாறாக என்னை ஒரு நம்ப முடியாத சுதந்திரத்தோடு அவர்கள் வளர்த்தார்கள். வாழ்வின் மீதான் அவர்கள் மதிப்பீடுகளை நான் உறுதியாகப் பற்றிக்கொண்டேன். அது ஒருவேளை அவர்களுக்கு ஒரு திருப்தியை அளித்திருக்கலாம்.  

நாங்கள் நண்பர்களைப்போல வாழ்ந்தோம். அம்மாவுக்கு மிக அற்புதமான நகைச்சுவையுணர்வு உண்டு. எனக்கும் அதில் பாதியளவு உண்டு. அதனால் நாங்கள் எப்பொழுதும் ஒருவரையொருவர் கேலி செய்து சிரித்தபடியே இருப்போம். கோபங்களுக்கும், சண்டைகளுக்கும் அற்ப ஆயுள் தான். 

எனது வாழ்வில் அம்மாவிற்குத் தெரியாத ரகசியங்கள் என்று எதுவுமே இருந்ததில்லை. கல்லூரிக் காலம் முதல் எனக்கு வந்த காதல் கடிதங்கள் உட்பட அனைத்தும் அம்மாவிற்குத் தெரியும். சமையலறை மேடையில் அமர்ந்தபடி சத்தமாக நான் அம்மாவிற்கு படித்து காண்பித்திருக்கிறேன். சமைத்தபடியே சிரிப்போடு அம்மா அதைக் கேட்பார்கள். அப்பொழுது அதுபற்றி எந்த பேச்சும் இருக்காது. பின்னொரு பொழுதில் தொடர்பற்ற ஒரு உரையாடலில் அறிவுரை போன்று தோன்றாத கவனத்தோடு தனது கருத்தைப் பகிர்ந்து கொள்வார்கள்.  

தாய்ப்பறவையின் சிறகின் கதகதப்பில் இருக்கும் குஞ்சைப் போல பத்திரமாக பொத்திப் பொத்தி வளர்த்தார்கள். அதனால் வாழ்வின் கடினமான காலங்களை அம்மா உயிரோடு இருக்கும்வரை நான் எதிர்கொள்ள நேரவில்லை. அம்மாவின் எதிர்பாராத மறைவிற்குப் பின்பு வாழ்வில் ஏற்பட்ட நிரப்ப முடியாத வெற்றிடம் , நான் கனவில் கூட நினைத்திராத கசப்புகளைப் பரிசளித்தது. எல்லாவற்றில் இருந்தும் மீண்டு வர முடிந்ததற்கு அம்மாவின் ஆசிகளே காரணம். அம்மா அருகிலேயே இருப்பது போல ஒரு உணர்வு. இன்றும் எனக்கு ஆபரணங்கள் மீது ஆர்வமில்லை. ஆனால் அம்மா கடைசியாக அணிந்திருந்த  மோதிரத்தையும் , சங்கிலியையும் விருப்பமுடன்  அணிந்திருக்கிறேன். எப்பொழுதும் அம்மாவுடன் வாழ்வது போல ஒரு உணர்வு. வீடென்பது வெறும் நினைவுகளாகிவிட்ட வாழ்வில் எஞ்சியிருப்பது  இவைகளும், அம்மா என்னில் விட்டுச்சென்ற மதிப்பீடுகளும் தான்'' என்று உருக்கமான கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in