
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் குறித்து கருத்து தெரிவித்திருந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அங்கு சட்டமன்ற உறுப்பினராக இருந்து மறைந்த திருமகன் ஈவெரா, நாம் தமிழர் கட்சியில் இணைய விரும்பினார் என்று கூறியிருந்தார். " தம்பி திருமகனை எனக்கு மிகவும் பிடிக்கும். உங்களுக்குத் தெரியாத ஒரு விஷயத்தை நான் சொல்கிறேன். தம்பி திருமகன் ஈவெரா முதலில் நம் கட்சியில் இணைவதற்காக என்னை வந்து பார்த்தார். பிறகு ஈவிகேஎஸ் இளங்கோவன் என்ன சொன்னாரோ அவர் வரவில்லை. நானும் சரிப்பா, நீ அங்கேயே இருந்து விடு என்றேன்" என்று சீமான் பேசியிருந்தார்.
சீமானின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் பேசு பொருளாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த நிலையில் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி சீமானின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்து, சிறப்பாக மக்கள் பணியாற்றி, மக்களிடம்.பெயரும் புகழும் பெற்று எதிர்பாராமல் மறைந்த திருமகன் ஈவெராவைப் பற்றி சீமான், நாம் தமிழர் கட்சியில் இணைய விரும்பினார் என்று பேசுவது, அநாகரிகமானது. கடுமையான கண்டனத்திற்குரியது.
சீமானின் மக்கள் விரோத அரசியல் மீது திருமகன் கடுமையான விமர்சனங்களைக் கொண்டிருந்தார் என்பதே உண்மை என்று ஜோதிமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.