`மேகேதாட்டு அணை குறித்து விவாதிக்கக் கூடாது'- மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தி மனு அளித்த தமிழக சட்டமன்ற குழு

`மேகேதாட்டு அணை குறித்து விவாதிக்கக் கூடாது'- மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தி மனு அளித்த தமிழக சட்டமன்ற குழு

காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகேதாட்டு அணை குறித்து விவாதிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டமன்ற அனைத்துக்கட்சி தலைவர்களின் குழு மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்தை சந்தித்து மனு அளித்தது.

தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் சட்டமன்ற அனைத்துக்கட்சி தலைவர்களின் குழுவினர் இன்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் சந்தித்தனர். அப்போது, காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகேதாட்டு அணை குறித்து விவாதிக்கக் கூடாது என்றும், கர்நாடகா அரசு மேகேதாட்து அணை கட்டக்கூடாது என்பதையும் வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தனர்.

இதைத் தொடர்ந்து மத்திய நீர்வளத்துறை அமைச்சருடன் தமிழக குழுவினர் மேகேதாட்து அணை குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த கூட்டத்தில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், வைகோ, அதிமுகவை சேர்ந்த மு.தம்பித்துரை, ஏ.கே.பி.சின்ராஜ், சட்டமன்ற உறுப்பினர்கள் பாமக ஜி.கே.மணி, காங்கிரஸ் கு.செல்வப்பெருந்தகை, விசிக எஸ்.எஸ்.பாலாஜி, பாஜக நயினார் நாகேந்திரன், தி.இராமசந்திரன், பி.சண்முகம், எம்.எச்.ஜவாஹிருல்லா, வேல்முருகன், எம்.ஜெகன்மூர்த்தி மற்றும் கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, உள்ளுறை ஆணையர் ஆஷிஷ் சாட்டர்ஜி, காவேரி தொழில் நுட்பக் குழு மற்றும் பன்மாநில நதிநீர்ப் பிரிவு தலைவர் ஆர்.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன், மேகேதாட்டு பற்றி காவிரி நதிநீர் ஆணையம் விவாதிக்கக்கூடாது என்பதே எங்களது முக்கிய கோரிக்கையாக இருந்தது என்றும் மேகேதாட்டு பற்றி பேசுவதற்கு நதிநீர் ஆணையத்திற்கு எவ்வித அதிகார வரம்பும் இல்லை என்று நாங்கள் குறிப்பிட்டோம் என்றும் கூறினார்.

மேகேதாட்டுவில் அணை கட்ட கர்நாடக அரசு முயற்சிப்பது உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது என்பதை வலியுறுத்தினோம் என்று தெரிவித்த துரைமுருகன், தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் காவிரியில், கர்நாடக அரசு எந்த ஒரு அணையும் கட்ட முடியாது என்ற கருத்தை மத்திய அமைச்சர உறுதி செய்துள்ளார் என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in