சோனியா காந்தியுடன் சந்திப்பு! மீண்டும் காங்கிரஸில் இணைகிறாரா மத்திய அமைச்சர் சிந்தியா?

சோனியா காந்தியுடன், மத்திய  அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா
சோனியா காந்தியுடன், மத்திய அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா

நாடாளுமன்ற அரங்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன், மத்திய விமானப்போக்குவரத்து அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா உரையாடும் காட்சிப் பதிவுகள் வெளியாகி உள்ளன. இதனால், அமைச்சர் சிந்தியா மீண்டும் காங்கிரஸுக்கு திரும்புகிறார் எனச் சர்ச்சை கிளம்பியுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கு மிகவும் நெருக்கமான தலைவராக இருந்தவர் மாதவராவ் சிந்தியா.மத்தியப்பிரதேசத்தின் அரச குடும்பத்தை சேர்ந்த இவர் 2001ல் ஹெலிகாப்டர் விபத்தில் பலியானார். இதையடுத்து அரசியல் களம் இறங்கிய மகன் ஜோதிர் ஆதித்யா சிந்தியாவை, மத்திய அமைச்சராக்கியது காங்கிரஸ். தொடர்ந்து காங்கிரஸின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தியின் நட்பு வளையத்தில் சிந்தியா இருந்தார்.

இந்நிலையில், கடந்த நவம்பர் 2018ல் நிகழ்ந்த மத்தியப்பிரதேச சட்டப்பேரவை தேர்தல் வெற்றிக்கு பின் காங்கிரஸின் முதல்வராக விரும்பினார் சிந்தியா. ஆனால், அவரை விட மூத்தவரான கமல்நாத்தை காங்கிரஸ் முதல்வராக்கியது. இதனால், 1 வருடம் 97 நாட்களுக்குள் மார்ச் 2020ல் முதல்வர் கமல்நாத் அரசு கவிழக் காரணமானார் சிந்தியா. இவர் மபி காங்கிரஸை பிரித்து அதன் 22 எம்எல்ஏக்களுடன் பாஜகவில் இணைந்தார்.

சிந்தியாவிற்கு மத்திய விமானப்போக்குவரத்து அமைச்சர் பதவியில் பாஜக அமர்த்தியுள்ளது. தற்போது மீண்டும் மபி மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் தம்மை முதல்வர் வேட்பாளராக்கிக் கொள்ள சிந்தியாவும் முயல்வதாகத் தெரிகிறது. இச்சூழலில், அமைச்சர் சிந்தியா நேற்று முன்தினம் காங்கிரஸ் தலைவர் சோனியாவுடன் சில நிமிடங்கள் உரையாடியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

சோனியா காந்தியுடன், மத்திய  அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா
சோனியா காந்தியுடன், மத்திய அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா

புதிய கட்டிடத்திற்கு அனைத்து எம்பிக்களும் செல்லும் முன்பாக பழைய நாடாளுமன்ற மத்திய அரங்கில் ஒரு நினைவுக் கூட்டம் நடைபெற்றது. இதில், முதலாவது வரிசையில் அமர்ந்திருந்தார் சோனியா. இவர் முன் திடீர் எனச் சென்ற மத்திய அமைச்சர் ஜோதிர் ஆதித்யா சிந்தியா, அவருடன் பேச்சுக் கொடுத்தார். தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் சோனியாவின் அருகிலும் சிந்தியா அமர, இருவரது உரையாடல் சில நிமிடங்கள் தொடர்ந்துள்ளது.

இதன்பின், அமைச்சர் சிந்தியா அருகிலுள்ள வரிசையில் அமர்ந்திருந்த மத்திய செய்தி ஒலிபரப்பு அமைச்சர் அனுராக் தாக்குர் அருகில் அமரச் சென்றுவிட்டார். சோனியாவுடன் சிந்தியா உரையாடிய விவரம் தெரியவில்லை. எனினும், இந்த சந்திப்பின் காட்சிப்பதிவுகளும், படங்களும் நேற்று வெளியாகின. இதனால், மீண்டும் காங்கிரஸுக்கு திரும்புகிறாரா அமைச்சர் சிந்தியா? என சர்ச்சைகள் கிளம்பியுள்ளது.

இதுபோல், எதிரணியின் தலைவர்கள் பொது இடங்களில் சந்திப்பதும், பேசுவதும் தேசிய அரசியலில் புதிதல்ல. எனினும், காங்கிரஸின் முக்கிய இளம் தலைவராக இருந்து பாஜகவில் இணைந்த சிந்தியாவின் சந்திப்பு பார்வையில் முக்கியத்துவம் பெற்றுவிட்டது. மபியில் நான்காவது முறையாக பாஜக முதல்வராக சிவராஜ்சிங் சவுகான் தொடர்வது நினைவில் கொள்ளத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in