’’234 தொகுதிகளிலும் மருத்துவ காப்பீடு திட்டத்தில் புதிய பயனாளிகளை சேர்க்கும் விதமாக சிறப்பு முகாம்கள் நடைபெறும்’’ என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ், புதிய பயனாளிகளை சேர்க்கும் முகாம்கள், தொடர்ச்சியாக நடந்து வருகின்றன. 234 தொகுதிகளிலும் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த வாரம் சைதாப்பேட்டை வார்டுகளில் இந்த முகாம்கள் நடந்தன.
இதன் மூலம் 1019 புதிய பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் உறுப்பினர் அட்டைகள் வழங்கப்பட்டது. தொடர்ச்சியாக இந்த தொகுதியில் முகாம்கள் நடக்கிறது. அந்த வகையில், இன்று 4 இடங்களில் புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் பயனாளிகளை சேர்க்கிற முகாம் நடைபெறுகிறது.
முதல்வர் காப்பீட்டு திட்டத்தின்கீழ், பயன் பெறுபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றும் உண்மையான பயனாளிகளை இந்த திட்டத்தில் இணைக்க வேண்டும் என்றும் முதல்வர் அறிவுறுத்தி உள்ளார்.
அந்த வகையில் தமிழ்நாட்டில் ஏற்கனவே ’வரும் முன் காப்போம்’ என்ற திட்டம் ’கலைஞரின் வரும் முன் காப்போம்’ என்ற பெயரில் கடந்த 3 ஆண்டாக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஒன்றியத்துக்கு 3 இடங்களிலும், மாநகராட்சி பகுதியில் 4 இடங்களிலும், சென்னையில் மட்டும் 15 இடங்கள் என ஒவ்வொரு ஆண்டும் 1260 இடங்களில் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது’’ என்றார்.