தமிழ் வழி மருத்துவக் கல்விக்கு அனுமதி கேட்டு மத்திய அரசிற்குக் கோரிக்கை விடப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் முதல் முறையாக இந்தியில் எம்பிபிஎஸ் மருத்துவப் படிப்பு கடந்த அக்டோபர் 16-ம் தேதி மத்தியப் பிரதேசத்தில் தொடங்கப்பட்டது. இந்த நிகழ்வைத் தொடங்கி வைத்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்தியில் எம்பிபிஎஸ் முதலாம் ஆண்டு புத்தகங்களை வெளியிட்டார். இதையடுத்து தமிழகத்தில் மருத்துவக் கல்வியைக் கொண்டு வரவேண்டும் எனப் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று கலந்து கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,“தமிழில் மருத்துவம் பயிற்றுவிக்கப் பாடத்திட்டம் மொழி பெயர்ப்பு பணி நடந்து வருகிறது. முதலாம் ஆண்டு பாடப்புத்தகத்திற்கான மொழிபெயர்ப்பு பணி நடந்துவருகிறது. தென்காசி, மயிலாடுதுறை, பெரம்பலூர், ராணிப்பேட்டை உள்பட 6 இடங்களில் மருத்துவக் கல்லூரிகள் நிறுவ முன் அனுமதி கேட்டுள்ளோம். மருத்துவக் கல்லூரிகள் நிறுவ அனுமதி கிடைத்தவுடன், தமிழ்வழி மருத்துவக் கல்லூரி அமைக்க மத்திய அரசிடம் கோரிக்கை விடப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.