
புதிய கல்விக் கொள்கை நீட் தேர்வு மூலமாக தமிழகத்தில் மிகச் சிறப்பான கல்வி கட்டமைப்பை சீர்குலைக்கும் குறுகிய மனப்பான்மையோடு மத்திய அரசு செயல்படுவதாக தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு குற்றம் சாட்டியுள்ளார்.
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய் தினத்தை முன்னிட்டு மார்பக புற்றுநோயில் இருந்து மீண்டு வந்தவர்களை ஊக்குவிக்கும் விதமாக விழா நடைபெற்றது. இந்த விழாவில் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு மற்றும் மார்பக புற்றுநோயிலிருந்து குணமடைந்து மீண்ட ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய அப்பாவு, ‘’தமிழகம் கல்வி வளர்ச்சியிலும் பெண் கல்வியில் சிறந்து விளங்குவதுடன் உயர்கல்வித்துறையிலும் சிறந்து விளங்குகிறது. மருத்துவத்துறையிலும் இன்று பெண்கள் அதிக அளவில் வெற்றி காண்கின்றனர்.
தமிழகத்தின் சுகாதார கட்டமைப்பு மிகவும் வலுவானதாக இருக்கிறது. மத்திய தேசிய மருத்துவர் கவுன்சில் பல்வேறு கொள்கை முடிவுகளை எடுத்திருக்கிறது. அதன் அடிப்படையில் மக்கள் தொகைக்கு ஏற்றார் போல் தமிழகத்திற்கு இனி மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி கிடையாது என்று மத்திய அரசு குறுகிய மனப்பான்மையோடு செயல்படுகிறது.
நீட் தேர்வுக்கு பல லட்சம் ரூபாயை செலவு செய்து இது போன்ற மருத்துவ படிப்பிற்கு வரவேண்டிய சூழல் உள்ளது. நீட் தேர்வால் பல மாணவர்கள் தங்களது உயிரை இழந்து கொண்டிருக்கின்றனர். தமிழகத்தில் சமச்சீர் கல்வி, மெட்ரிக் கல்வி என்று சிறப்பான கல்வி கொள்கை இருக்கிறது. ஆனால் தமிழகத்தின் மிகச் சிறப்பான கல்வி கட்டமைப்பை சீர்குலைப்பதற்காகவே மத்திய அரசு புதிய கல்விக் கொள்கை, நீட் தேர்வு உள்ளிட்டவற்றை கொண்டு வந்துள்ளது’’ எனக் கூறினார்.