கறியாக்கி சாப்பிட்டு ஓட்டுப் போடுங்க மக்களே..!

வாக்காளர்களுக்கு இறைச்சி சப்ளை செய்த திமுக
கறியாக்கி சாப்பிட்டு ஓட்டுப் போடுங்க மக்களே..!

தேர்தல் நாளன்று வாக்காளர்களுக்கு குவாட்டரும், கோழி பிரியாணியும் வழங்குவது தமிழர்களின் பண்பாட்டுக் கூறுகளில் ஒன்று. "என்னடா இது... ஆணாதிக்கச் சமூகமாக இருக்கிறது. பெண்களுக்கும் அவர்கள் விரும்பியதை, விரும்பியபடி ஆக்கித்தின்ன உரிமை தர வேண்டாமா?" என்று சிந்திந்து சீரிய திட்டம் ஒன்றை செயல்படுத்தியிருக்கிறர்கள் தேனி மாவட்டம் உத்தமபாளையம் திமுகவினர்.

'முத்து' படத்தில், "தோட்டத்துக்கு வரவும். தீபாவளிப் பரிசு காத்திருக்கிறது" என்று ஒரு துண்டுச் சீட்டு பல கைமாறி பரபரப்பை ஏற்படுத்துமே, அதேபோல திமுகவினர் நேற்றிரவே ஒரு தகவலை வார்டுக்குள் பரப்பியிருக்கிறார்கள். நாளை காலை உங்களுக்கு விருந்து காத்திருக்கிறது என்று. இந்தத் தகவல் அங்கே சுற்றி இங்கே சுற்றி அதிமுகவினர் 'காது'க்கும் போக, பார்ட்டி உஷாராகிவிட்டது.

காலையிலேயே ஊரைச் சுற்றிச் சுற்றி வந்து மோப்பம் பிடித்தபோது, வீடு வீடாக திமுகவினர் ஆட்டுக்கறி சப்ளை செய்வது தெரியவந்திருக்கிறது. உடனே இதுகுறித்து தேர்தல் அலுவலர்களுக்குப் புகாரைத் தட்டிவிட்டார்கள் அதிமுகவினர். விரைந்து வந்த பறக்கும்படையினர், சந்தேகத்துக்குரிய வீடுகளில் சோதனை நடத்தியபோது அரை கிலோ பொட்டலமாக சுமார் 100 கறி பொட்டலங்கள் தயார் நிலையில் இருப்பதைக் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட கறி பொட்டலங்கள் தேர்தல் அதிகாரி மல்லிகாவிடம் ஒப்படைக்கப்பட்டது. விசாரணையில், "இந்தக் கறிக்கும் எங்களுக்கும் சம்பந்தமே இல்லை" என்று (ஆட்டின்) தலைமீது அடித்துச் சத்தியம் செய்திருக்கிறார்கள் திமுகவினர். "காதுக்கு எட்டியது, வாய்க்கு எட்டலையே..." என்று புலம்புகிறார்கள் வாக்காளர்கள். "ஒண்ணா ரெண்டா... 50 கிலோ கறிப்போய்... இந்த அதிகாரிங்க என்ன செய்வாய்ங்க? அவங்க வீட்டுல கல்யாண விருந்துதானா?" என்று அவர்கள் பேசிக்கொள்கிறார்கள்.

Related Stories

No stories found.