
பாஜக மூத்த தலைவரும், கர்நாடக முன்னாள் அமைச்சருமான கே.எஸ்.ஈஸ்வரப்பா ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்த போது, அருகில் உள்ள மசூதியில் இருந்து ஒலிப்பெருக்கியில் அசான் ஒலித்துள்ளது. இதனால் கோபமடைந்த அவர், அல்லா காது கேளாதவரா என்று கேள்வி எழுப்பியது சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
கர்நாடக முன்னாள் துணை முதல்வரும், பாஜக எம்.எல்.ஏவுமான கே.எஸ்.ஈஸ்வரப்பா பெங்களூருவில் ஒரு பொதுக் கூட்டத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது, அருகில் உள்ள மசூதியில் இருந்து ஒலிப்பெருக்கியில் அசான் ஒலித்தது. இதனால் எரிச்சலடைந்த அவர், "நான் எங்கு சென்றாலும், இந்த அசான் எனக்கு தலைவலியை ஏற்படுத்துகிறது. இதுபற்றி உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வர உள்ளது, அதன்பின்பு இந்த அசானுக்கு முடிவு வரும்.
அசானின் போது ஒலிபெருக்கி பயன்படுத்தினால் மட்டும்தான் அல்லா பிரார்த்தனையை கேட்பாரா. கோயில்களில், பெண்களும் பிரார்த்தனை மற்றும் பஜனை செய்கிறார்கள். நாங்கள் மதவாதிகள், ஆனால் நாங்கள் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவதில்லை. ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்திதான் பிரார்த்தனைக்கு அழைக்க வேண்டும் என்றால், அல்லா காது கேளாதவர் என்று அர்த்தம்" என கூறினார்.
துணை முதல்வராகவும் பணியாற்றிய ஈஸ்வரப்பாவுக்கு சர்ச்சைகள் புதிதல்ல. திப்பு சுல்தானை "முஸ்லீம் குண்டா" என்று குறிப்பிட்டு அவர் முன்பு ஒரு சர்ச்சையை கிளப்பினார். கடந்த ஆண்டு ஒப்பந்ததாரர் தற்கொலை செய்து கொண்டதால் ஈஸ்வரப்பா அமைச்சர் பதவியிலிருந்து விலக நேரிட்டது. தனது மரணத்திற்கு "முழுமையான பொறுப்பு" என்று ஈஸ்வரப்பாவை அந்த ஒப்பந்ததாரர் குறிப்பிட்டிருந்தார்.