அதிகாலையில் சோகம்... ஈரோடு மதிமுக எம்.பி., கணேசமூர்த்தி காலமானார்!

கணேசமூர்த்தி
கணேசமூர்த்தி

ஈரோடு மக்களவை உறுப்பினரும், மதிமுகவின் மூத்த தலைவருமான கணேசமூர்த்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சைப் பலனளிக்காமல் இன்று காலை 5.15 மணிக்கு காலமானார். தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட அவருக்கு கடந்த சில நாட்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

ஈரோடு மக்களவை உறுப்பினரான கணேசமூர்த்தி, கடந்த மார்ச் 24ம் தேதி காலையில் விஷம் உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றதாகக் கூறி, அவரது உறவினர்கள் ஈரோடு தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கே முதற்கட்ட சிகிச்சைகள் வழங்கப்பட்ட பிறகு, உயர் சிகிச்சைக்காக கணேசமூர்த்தி, கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கே தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

ஈரோடு எம்.பி., கணேசமூர்த்தி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி
ஈரோடு எம்.பி., கணேசமூர்த்தி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி

கணேச மூர்த்தி தொடர்ந்து அபாய கட்டத்திலேயே இருப்பதாகவும், தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு எக்மோ கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவர் உயிர் பிழைக்க 50க்கு 50 சதவீதம் என்ற அளவிலேயே வாய்ப்புள்ளது என்றும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தன.

கோவையில் கணேச மூர்த்தி அனுமதிக்கப்பட்டுள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, “ சட்டமன்ற உறுப்பினராகி மக்களின் அன்பை பெற்ற கணேசமூர்த்தி, நாடாளுமன்றத்திற்கு 3 முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். அங்கும் தன்னுடைய கடமைகளை சிறப்பாகவே செய்தார். இம்முறை கட்சியிலே அனைவரும் சேர்ந்து துரை வைகோவை நாடாளுமன்றம் அனுப்ப வேண்டும், கணேச மூர்த்திக்கு அடுத்த முறை பார்ப்போம் என்றனர். நான் ஒப்புக்கொள்ளவில்லை. அதன் பின் ஓட்டெடுப்பு எல்லாம் நடந்தது. அதில் 99% துரை வைகோவை நிறுத்த வேண்டும் என்றனர். இத்தனைக்கும் பிறகும் அவர் நன்றாக பேசினார். பிரியமாகவே பேசினார். அவரது பேச்சில் எந்தவித பதற்றமும், சோகத்தில் இருப்பதாக அறிகுறியோ தெரிந்து கொள்ள முடியவில்லை. அதன் பின்னர் தான் அவர் தென்னை மரத்துக்கு போடும் நஞ்சை கலக்கி குடித்திருக்கிறார்" என்றார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுடன் கணேசமூர்த்தி
மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுடன் கணேசமூர்த்தி

ஈரோடு மக்களவைத் தொகுதி எம்.பியாக தற்போது பதவி வகித்து வந்தவர் அ.கணேசமூர்த்தி (77). கடந்த 2019-ம் ஆண்டு, மக்களவைத் தேர்தலின் போது, திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஈரோடு தொகுதி ஒதுக்கப்பட்டது. இந்த தேர்தலில் திமுகவின் சின்னமான உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு கணேசமூர்த்தி வெற்றி பெற்றார். இதற்கு முன்பு 1998ம் ஆண்டு பழனி மக்களவைத் தொகுதியிலும், 2009ல் ஈரோடு மக்களவைத் தொகுதியிலும் வென்று எம்.பியாக பதவி வகித்துள்ளார். மேலும், 1989 முதல் 1991 வரை திமுக சார்பில் மொடக்குறிச்சியின் சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்துள்ளார். மதிமுகவில் தொடக்க காலம் முதல் பணியாற்றிய இவர் அக்கட்சியின் பொருளாளராகவும் பதவி வகித்தார்.

கணேச மூர்த்தி மறைவு செய்தி கேள்வியுற்று விமானம் மூலம் கோவை விரைந்துள்ளார் வைகோ. இன்று காலை 9 மணிக்கு விமான நிலையத்தில் இருந்து நேரே மருத்துவமனை விரைகிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in