துரை வைகோவை எதிர்த்த மா.செ.க்கள் மதிமுகவிலிருந்து நீக்கம்!

துரை வைகோவை எதிர்த்த மா.செ.க்கள் மதிமுகவிலிருந்து நீக்கம்!

மதிமுகவில் துரை வைகோவுக்கு பொறுப்பு கொடுத்ததை எதிர்த்துவந்த 3 மாவட்ட செயலாளர்கள் கட்சியில் இருந்து அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

மதிமுக பொதுச் செயலாளராக இருக்கும் வைகோ வயது முதிர்வு காரணமாக அரசியலில் ஓய்வு எடுத்துக் கொண்டு தனது மகன் துரை வைகோவுக்கு கட்சியில் பொறுப்பு வழங்க முடிவு செய்தார். இதற்காக கட்சியின் பொதுக்குழுவை கூட்டி வாக்கெடுப்பு நடத்தினார். அதில் பலர், துரை வைகோவை மதிமுகவில் சேர்க்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்திருந்தனர். சில மாவட்ட செயலாளர்கள் இதற்கு எதிர்ப்பும் தெரிவித்தனர்.

இந்த எதிர்ப்பை மீறி துரை வைகோவுக்கு தலைமைக் கழக செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. அதற்கு பொதுக்குழு ஒப்புதலும் பெறப்பட்டது. துரை வைகோவுக்கு பொறுப்பு வழங்கப்பட்டதைக் கண்டித்து மதிமுகவின் அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி, சிவகங்கை, விருதுநகர், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களின் மாவட்டச் செயலாளர்கள் இந்தக் கூட்டத்தை புறக்கணித்த நிலையிலும் இந்த ஒப்புதலானது வழங்கப்பட்டது.

இந்நிலையில், சிவகங்கை மாவட்ட செயலாளர் புலவர் சே.செவந்தியப்பன், திருவள்ளூர் மாவட்ட செயலாளர் டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன், விருதுநகர் மாவட்ட செயலாளர் ஆர்.எம்.சண்முகசுந்தரம் ஆகியோரை இன்று கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கியுள்ளார் வைகோ. இவர்கள் மூவரும் மதிமுக பொதுக்குழுவில் பங்கேற்காமல் வெளியில் கருத்து தெரிவித்து வந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் தங்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழுவிடம் விளக்கம் அளிக்கலாம் என்றும் வைகோ தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in