துணைப் பொதுச்செயலாளரா துரை வைகோ? சலசலக்கும் கொங்கு மதிமுக!

துரை வைகோ
துரை வைகோ

இன்று நடைபெறும் மதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், வைகோவின் மகன் துரை வைகோவுக்கு முக்கிய பொறுப்பு அளிக்கப்படும் என்று சொல்லப்படும் நிலையில், துரைக்கு முக்கிய பொறுப்பு அளிப்பதில் கொங்கு மண்டல மதிமுகவில் மாற்றுக் கருத்து நிலவுவதாகச் செய்திகள் கசிகின்றன.

“சட்டமன்றத் தேர்தல் முடிந்ததும் கட்சியின் பொதுக்குழுவைக் கூட்டி முக்கிய முடிவை எடுப்பேன்” - கடந்த மார்ச் மாதம் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இப்படி பிரகடனம் செய்த போது, “கட்சியை திமுகவுடன் இணைக்கப் போகிறார் வைகோ” என்றே பலரும் பிரதானமாகப் பேசினார்கள்.

ஸ்டாலின் - வைகோ
ஸ்டாலின் - வைகோ

ஆனால், இன்றுவரை பொதுக்குழு எதுவும் கூட்டப்படாத நிலையில் வைகோவின் மகன் துரை வைகோவுக்கு கட்சியில் முக்கிய பதவி அளிப்பது குறித்து, கடந்த சில மாதங்களாக கட்சிக்குள் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. கட்சித் தலைமைக்கு இது தொடர்பாக அழுத்தம் கொடுக்கும் வகையில் பெரும்பாலான மாவட்டங்களில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டு தலைமைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

இளைஞர்களை அரசியலுக்கு இழுத்து கட்சிக்குப் புது ரத்தம் பாய்ச்சுவதற்கு துரை வைகோ அரசியலுக்கு வர வேண்டும் என, கட்சியின் கடைக்கோடி தொண்டன் வரைக்கும் விரும்புவதாக மதிமுக முக்கிய நிர்வாகிகள் சொல்கிறார்கள். ஆனால், மகன் அரசியலுக்கு வருவதை ஆரம்பத்திலிருந்தே வைகோ விரும்பவில்லை. தேர்தல் வரை ஜெயிக்கும் குதிரையை உற்சாகப்படுத்தி அதன் பின்னால் ஓடிவிட்டு... தேர்தல் நெருங்கும் சமயத்தில், தோற்கும் குதிரை மீது பணம் கட்டியே பழக்கப்பட்டவர் வைகோ. சில விஷயங்களில் சமரசத்துக்கு இடம்தராத வைகோவின் அரசியலுக்கு ஒத்துவராத குணாதிசயமே இதற்குக் காரணம்.

இதனால், கடந்த 27 ஆண்டுகளாக மதிமுக என்ற இயக்கத்தை தோளில் சுமக்க வைகோ எதிர்கொண்ட ஏச்சுகளும் பேச்சுகளும் எண்ணில் அடங்காது. அதையெல்லாம் கடந்து மதிமுகவை தனித்துவ இயக்கமாக மன உறுதியுடன் நடத்திக் கொண்டிருக்கும் அவர், அரசியலில் தான் பட்ட துன்பங்களை மகனும் சுமக்க வேண்டாம் என்பதாலேயே, துரை வைகோவை முன்னிலைப்படுத்துவதை தவிர்க்கிறார்.

இன்னொரு பக்கம், குடும்ப அரசியல் நடத்துவதாகச் சொல்லி திமுகவைவிட்டு வெளியேறி தனிக்கட்சி கண்ட தன்னை நோக்கி, இத்தனை ஆண்டுகள் கழித்து அத்தகைய அவச் சொல்லும் பழிச்சொல்லும் திரும்பிவிடக் கூடாது என்ற நியாயமான எச்சரிக்கை உணர்வும் அவருக்குள் இருக்கிறது.

ஆனால், தந்தையின் நினைப்புக்கு நேர்மாறாக இருக்கிறார் துரை வைகோ. தந்தை ஆக்டீவாக இருக்கும் போதே கட்சியின் முக்கியப் பொறுப்பைக் கைகொள்ள வேண்டும் என்பதே அவரின் இப்போதைய சிந்தனையும் செயலுமாக இருக்கிறது. அவரை இந்த இடத்துக்கு நகர்த்துவதற்காக துரையின் ஆதரவாளர்கள் கடந்த நாடாளுமன்றத் தேர்தலி லிருந்தே களப்பணியைத் தொடங்கிவிட்டார்கள்.

தேர்தல் பிரச்சாரத்தில் துரை வைகோ...
தேர்தல் பிரச்சாரத்தில் துரை வைகோ...

அவர்களின் யோசனைப்படியே நாடாளுமன்ற சட்டப்பேரவைத் தேர்தல்களில் தீவிர பிரச்சாரம் செய்தார் துரை வைகோ.

ஒரு காலத்தில் திமுகவைவிட்டு வைகோ பின்னால் அணிவகுத்து வந்தவர்கள்தான் இன்றைக்கும் அவருடன் கொள்கைப் பிடிப்புடன் இருக்கிறார்கள். ஒருவேளை, கட்சியை வைகோ திமுகவுடன் இணைப்பது மாதிரியான முடிவுகளை எடுத்தால் அவருக்குப் பின்னாலிருந்து இயக்கத்தை வழிநடத்தும் பலருக்கும் அரசியல் எதிர்காலம் அஸ்தமித்துவிடும். பெரும்பாலும் இந்தக் கவலையில் இருப்பவர்களே துரை வைகோவைத் தூக்கிப் பிடிக்கிறார்கள்.

களத்தில் துரை வைகோ...
களத்தில் துரை வைகோ...

துரை மூலமாக மதிமுக என்ற இயக்கம் மறு அத்தியாயம் எடுத்தால் தங்களது அரசியல் எதிர்காலத்துக்கு சேதாரம் இருக்காது என்பது, அவர்களின் எண்ணமாகக் கூட இருக்கலாம். அதனால்தான் அவர்கள் எல்லாம் ‘புதிய அரசியல் அத்தியாயம் இன்று தொடங்குகிறது’ என்று துரை வைகோவின் படத்தைப் போட்டு இன்றைய மாவட்டச் செயலாளர் கூட்டத்துக்கு அழைப்பு வைத்திருக்கிறார்கள்.

துரை வைகோவுக்கு கட்சியில் முக்கிய பதவி கொடுக்கப்பட வேண்டும் என்று மாவட்ட வாரியாக தீர்மானம் போடப்பட்டதில், துரைக்கும் அவரது தீவிர விசுவாசிகளுக்கும் முக்கிய பங்கு உண்டு. இனிமேல் வைகோவே நினைத்தாலும் துரைக்கு முக்கிய பொறுப்புக் கொடுப்பதை தடுக்கமுடியாது என்பதே இப்போதைய யதார்த்த நிலை.

துரைக்கு துணைப் பொதுச் செயலாளர் பதவி அல்லது இளைஞரணிச் செயலாளர் பதவி கொடுக்கப்படலாம் என்பது, மதிமுகவுக்குள் நிலவும் இருவேறு கருத்து. ஆனால், கொங்கு மண்டலத்தில் மதிமுக முக்கிய நிர்வாகிகள் சிலர், துரை வைகோவுக்கு தொடக்கமே இத்தனை முக்கியத்துவம் கொடுக்கப்படுவதை ரசிக்கவில்லை என்ற பேச்சும் இருக்கிறது. வைகோவை தங்களின் உயிருக்கு நிகராக மதிக்கும் அந்த நிர்வாகிகள், அவரது மகன் அரசியலுக்கு வருவதை எதிர்க்கவில்லை. ஆனால், அவரை படிப்படியாக உள்ளே அழைத்து வரலாமே... வரும்போதே இத்தனை முக்கியத்துவம் தரவேண்டுமா என்பதே அவர்களின் ஆதங்கம். என்றாலும் இதுகுறித்து அவர்கள் வெளிப்படையாக பேசத் தயங்குகிறார்கள்.

துரைக்கு உடனடி முக்கியத்துவம் கொடுப்பதை ஆட்சேபிக்கும் இவர்களில் பெரும்பகுதியினர், கட்சியை திமுகவுடன் இணைக்கும் யோசனையை வரவேற்பதாகவும் சொல்லப்படுகிறது.

என்றாலும் சட்டென உணர்ச்சிவசப்பட்டுவிடும் வைகோவிடம் இதையெல்லாம் எப்படி எடுத்துச் சொல்வது என்று புரியாமல் நிற்கிறார்கள் அவர்கள்.

துரை வைகோவுக்கு கட்சிக்குள் முக்கிய பொறுப்புக் கொடுக்கப்பட வேண்டும் என்ற கட்டாயமான சூழல் உருவாக்கப்பட்டுவிட்டது. இந்த நிலையில் அதற்கு மாற்றுக் கருத்துச் சொல்லப் போய், வைகோ அரசியல் ரீதியாக வேறேதும் விபரீத முடிவை எடுத்துவிடக் கூடாது என்பதும் இவர்களின் கவலையாக இருக்கிறது.

கட்சிக்குள் இப்படி கலவையான கருத்துகள் அலையடிக்கும் நிலையில்தான், மதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று கூடுகிறது. இன்றைய கூட்டத்தில் துரை வைகோவை மதிமுக துணைப் பொதுச் செயலாளராக அனைவரும் மனமுவந்து அங்கீகரிக்கலாம். ஆனால், தந்தையைப் போல் இந்த இயக்கத்தை வழிநடத்தும் அசாத்திய ஆற்றல் தனயனுக்கும் இருக்குமா?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in