பிடிஆர் பாதையில் இந்திராணி!

சமாளிப்பாரா... சறுக்குவாரா?
மேயராக பதவி ஏற்றபோது...
மேயராக பதவி ஏற்றபோது...

தமிழகத்தில் அத்தனை மாநகராட்சிகளையும் திமுக கூட்டணி கைவசப்படுத்தி இருந்தாலும், மதுரை மாநகராட்சியில் கிடைத்த வெற்றி சற்று வித்தியாசமானது. கோவையைப் போல பரிசுப் பொருட்களை வாரியிறைக்கவில்லை, சென்னையைப் போல கள்ள ஓட்டு சர்ச்சை எழவில்லை, சிவகாசியைப் போல கவுன்சிலர்களை விலைக்கு வாங்கவில்லை. கூட்டணிக்கு ஒதுக்கிய துணை மேயர் பதவியைத் திமுகவினர் கபளீகரம் செய்யவில்லை. காரணம், மதுரை மாநகராட்சியின் வெற்றிக்குப் பொறுப்பெடுத்துக் கொண்டவர் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்.

வேட்பாளர் தேர்வில் தொடங்கி, மேயர் தேர்வு வரையில் எல்லாவற்றையும் தன்னுடைய கட்டுப்பாட்டிலேயே வைத்துக்கொண்டார் பிடிஆர். மாவட்டத்தின் மூத்த அமைச்சரான பி.மூர்த்தியையோ, மூத்த அரசியல் சாணக்கியரான பொன்.முத்துராமலிங்கமோ எதுவும் செய்ய முடியாத அளவுக்கு மேலிடத்தின் ஆசியோடு இந்த வேலையைச் செய்து முடித்தார் பி.டி.ஆர்.

அம்மாவிடம் ஆசி...
அம்மாவிடம் ஆசி...

பிடிஆர் ஸ்டைல்

தனது விசுவாசியான பொன்.வசந்த்தின் மனைவி இந்திராணியை மேயர் பொறுப்பில் அமரவைத்த கையோடு பத்திரிகையாளர்களிடம் பேசிய பிடிஆர், "சிலர் பல காரணங்களுக்காக, இலக்குகளுக்காக அரசியலுக்கு வருவார்கள். ஆனால், நாங்கள் சுயமரியாதை, சமூக நீதி, சமத்துவத்தை உள்ளடக்கிய வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டவர்கள். கடந்த காலங்களில் மதுரை திமுகவின் பிம்பம் வேறுமாதிரி இருந்திருக்கலாம். ஆனால், நாங்கள் கடந்த 2 சட்டப்பேரவைத் தேர்தல், ஒரு மக்களவைத் தேர்தலைப் போலவே, இந்த உள்ளாட்சித் தேர்தலிலும் எந்தக் களங்கமும் இல்லாமல் விதிமுறைகளுக்கு உட்பட்டு வெற்றிபெற்றிருக்கிறோம். இந்த நடைமுறை மாநகராட்சி நிர்வாகத்திலும் தொடரும்" என்றார்.

அவர் அடிக்கோடிட்டுக் காட்டிய விஷயம் என்னவென்றால், நாங்கள் பணத்தை முதலீடு செய்து, வட்டியும், முதலுமாக எடுப்பதற்கான சூதாட்டமாக இந்தத் தேர்தலை அணுகவில்லை என்பதைத்தான். திருமங்கலம் இடைத்தேர்தல் (2009) தொடங்கி மதுரை என்றாலே ஓட்டுக்குக் காசும், பரிசுப் பொருட்களும்தான் என்றிருந்த நிலை, 2009 நாடாளுமன்றத் தேர்தலில் மு.க.அழகிரியே போட்டியிட்டபோது மேலும் தீவிரமடைந்தது. பிறகு அந்த ஃபார்முலாவை அதிமுக இன்னும் மேம்படுத்தி, வாக்காளர்களை வளைத்தது.

இந்தச் சூழலில், 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் ஓட்டுக்கு ஒரு பைசாகூட கொடுக்க மாட்டேன் என்று சொல்லியே தேர்தலைச் சந்தித்த பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன், 5,762 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். அப்போது வெறுமனே பண்பாளர் பிடிஆரின் மகன் என்ற அறிமுகத்துடன் மட்டுமே போட்டியிட்டவர், 2021-ல் நட்சத்திர வேட்பாளராகப் பார்க்கப்பட்டார். காரணம், தனது 5 ஆண்டு எம்எல்ஏ பதவிக்காலத்தில், தனது தொகுதியில் சுமார் 30 இடங்களில் புகார்பெட்டிகளை நிறுவி, வந்த மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுத்தார். அதற்கென தனது அலுவலகத்தில் பொறுப்பான ஊழியர்களையும் நியமித்தார். 6 மாதங்களுக்கு ஒருமுறை, தனது செயல்பாடுகளையும், மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் வெள்ளை அறிக்கைபோல வெளியிட்டார். 2021 சட்டப் பேரவைத் தேர்தலில், தான் செய்த பணிகளையும், செய்யத் திட்டமிட்டுள்ள விஷயங்களையும் சொல்லி ஓட்டுக்கேட்டார். அதனால், 34,176 ஓட்டு வித்தியாசத்தில் வென்றார். உள்ளாட்சித் தேர்தலிலும்கூட, "நிதி அமைச்சராக என்னால் மதுரைக்குத் தேவையான நிதியை ஒதுக்க முடியும். அது உங்களை வந்தடைய வேண்டும் என்றால், எங்கள் வேட்பாளருக்கு ஓட்டுப்போடுங்கள்" என்றே பிரச்சாரம் செய்து திமுகவை வெற்றிபெற வைத்தார்.

மேயரின் தடுமாற்றம்

அந்த வகையில், மதுரையின் வழக்கமான அரசியலை மாற்றியெழுதியவர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன். அதேபாணியில் மேயர் இந்திராணியும் செயல்பட வேண்டும் என்பது அவரது உத்தரவு. அதை அப்படியே நிறைவேற்ற வேண்டும் என்கிற எண்ணம் இருக்கிறதோ இல்லையோ, ஜூனியரான நமக்கு இவ்வளவு பெரிய பொறுப்பைத் தந்திருக்கிற பிடிஆருக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்கிற முனைப்பு இந்திராணிக்கு நிறையவே இருக்கிறது. அதனால் தான் "எனது பணி முழுவதும் நிதியமைச்சரின் வழிகாட்டுதலின் படியும் மேற்பார்வையில் மட்டுமே நடைபெறும்’’ என்று பின்விளைவுகளைப் பற்றி கவலையே படாமல் ஓர் அறிக்கையை வெளியிட்டார் இந்திராணி.

மேயர் பதவிக்காக பலவாறும் மோதியவர்கள், பிடிஆர் கைக்கு நிர்வாகம் போனால் பெரிதாக சம்பாதிக்க முடியாதே என்ற ஆதங்கத்தில் இருக்கிறார்கள். பிடிஆர் மீதான அவர்களது கோபமும் எரிச்சலும், மேயர் மீது திரும்பியிருக்கிறது. துணை மேயர் பதவி தங்களுக்குக் கிடைத்தால் நிர்வாகத்தில் தலையிடுவோம் என்று வேண்டுமென்றேதான் கம்யூனிஸ்ட் கட்சிக்குத் தள்ளிவிட்டுவிட்டார் பிடிஆர் என்கிற எண்ணமும் மதுரை திமுகவினருக்கு இருக்கிறது. அதனால் துணை மேயர் பதவியை எதிர்பார்த்து ஏமாந்தவர்களும் மேயருக்கு எதிராக உக்கிரம் காட்டுகிறார்கள்.

கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரை மாநகராட்சியைத் திமுக கைப்பற்றியிருக்கிறது. ஆனால், திமுகவில் யாரிடமும் உற்சாகமும் இல்லை கொண்டாட்டமும் இல்லை. ஒவ்வொரு கவுன்சிலர்களும் இன்னொருவருக்குப் போன் போட்டுப் புலம்பவே செய்கிறார்கள். நிறைய செலவழித்து பதவிக்கு வந்திருக்கிறோம், இப்படியே போனால் வாங்கிய கடனுக்கு வட்டி கட்டவே முடியாது போலயே என்பதே அவர்களது புலம்பலின் சாரம். 10 ஆண்டுப் பசி அவர்களது கண்களில் பஞ்சம் பாடுவதையும் பார்க்க முடிகிறது.

பிடிஆர், மூர்த்தி, ஸ்டாலின்
பிடிஆர், மூர்த்தி, ஸ்டாலின்

நிர்வாகம் நடக்குமா?

அதிமுக ஆட்சியின்போது, மதுரை ஸ்மார்ட் சிட்டி ஊழல் தொடர்பாக கடுமையான குற்றச்சாட்டுக்களை வைத்தார் பிடிஆர். அவரும் மார்க்சிஸ்ட் எம்பி-யான சு.வெங்கடேசனும் இணைந்து, ஸ்மார்ட் சிட்டி ஊழல் தொடர்பான சில உண்மைகளை வெளிக்கொண்டுவந்து, ஆளுங்கட்சிக்கும், ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும் நெருக்கடி தந்தனர். அதிமுக தரப்பில் திமுகவினர் சிலரும் அப்போது ‘கவனிக்கப்’பட்டதால் யாருமே இதுபற்றி வாய் திறக்கவில்லை. பிடிஆர் தான் கடைசிவரை குரல்கொடுத்துக் கொண்டிருந்தார். கடந்த ஆட்சியில் அதிமுகவிடம் பலனடைந்தவர்கள் கையில் சிக்கினால் அவர்கள் சொல்வதை எல்லாம் கேட்க வேண்டி இருக்கும். அதனால் பிடிஆரின் கோபத்துக்கு ஆளாக வேண்டியதிருக்கும் என்றும் அஞ்சுகிறது மேயர் தரப்பு.

அதேசமயம், ஆளுமைத் திறன் இல்லாமல் எப்படி இந்திராணியால் மதுரை மேயர் பொறுப்பைத் திறம்பட நடத்த முடியும் என்ற கேள்வியும் இருக்கிறது. தேன்மொழி கோபிநாதனே மதுரை மேயராக இருந்திருக்கிறாரே என்று கேள்வி எழலாம். ஆனால், அவருக்குப் பின்னால் இருந்தது மு.க.அழகிரி எனும் அதிகார மையம். எனவே, அவரை எதிர்த்து யாரும் பேசவில்லை. அதிமுக கவுன்சிலர்களே கூட அடக்கித்தான் வாசித்தார்கள். அதே ஆளுமையுடன் பிடிஆரால், இந்திராணியைக் காப்பாற்ற முடியுமா என்பது மில்லியன் டாலர் கேள்வி.

முடிவுக்கு வருமா?

மேயர் பதவியேற்புக்குத்தான் அமைச்சர் மூர்த்தியையோ, திமுக மாவட்டச் செயலாளர்களையே மேயர் இந்திராணி அழைக்கவில்லை. அதன் பிறகாவது அவர்களைச் சந்தித்து ஒரு சால்வை அணிவித்திருக்கலாமே என்று மதுரை திமுகவினர் ஆதங்கப்படுகிறார்கள். அழகிரி ஆதரவு இருந்தாலும் தேன்மொழி கோபிநாதன் அனைத்து நிர்வாகிகளையும் சந்தித்தார். கூடவே, சில லட்சங்களையும் அன்புப் பரிசாகக் கொடுத்தார். இதெல்லாம் தெரிந்திருந்தும் கட்சி நிர்வாகிகளையும், கவுன்சிலர்களையும் கண்டும் காணாமல் இருப்பது இந்திராணிக்கு நல்ல விளைவுகளை ஏற்படுத்தாது என்கிறார்கள் திமுகவினர்.

இதுபற்றி மேயர் தரப்பில் கேட்டபோது, "பதவியேற்பு விழா தவறுகள் தெரியாமல் நடந்தவை. இனி அப்படியான தவறுகள் எதுவும் நடக்காது. மாமன்றக் கூட்டம் நடந்தால் திமுகவினர் எல்லாம் ஓரணியாகிவிடுவோம். மார்ச் 30-ல் மண்டலத் தலைவர்கள் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள். அப்போது கட்சி அதிருப்தியாளர்களைச் சரிசெய்துவிடுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்றார்கள்.

மதுரைக்கு கிடைக்கப்போவது அமைதியும் வளர்ச்சியுமா, கோஷ்டி மோதல் அக்கப்போர்களா என்பது இம்மாத இறுதிக்குள் தெரிந்துவிடும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in