
மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு ஏக்கருக்கு முப்பதாயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அதிமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, கொள்ளிடம், தரங்கம்பாடி மற்றும் அதனைத் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த நவம்பர் மாதம் 11-ம் தேதி இரவில் ஒரே நாளில் 44 செ.மீ அளவுக்கு கனமழை பொழிந்தது. இதன் காரணமாக சீர்காழி தாலுகாவில் பயிரிடப்பட்ட சம்பா பயிர்கள் முற்றிலும் மழையால் பாதிக்கப்பட்டது. எனவே பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும், பாதிக்கப்பட்ட வீடுகளுக்கும், உயிர் இழந்த கால்நடைகளுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்திருந்தனர்.
விவசாய சங்கங்களும் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்திய நிலையில் தமிழக அரசு நிவாரணத் தொகை அறிவித்தது. அதன்படி ஹெக்டேருக்கு 13,500 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்தத் தொகை போதாது, அதற்கு பதிலாக ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் நிவாரணமாக வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அதிமுக சார்பில் இன்று போராட்டம் நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகே மாவட்ட அவைத்தலைவர் பாரதி தலைமையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான ஓ.எஸ். மணியன் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர். இதில் அதிமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என 800க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 30,000 தர வேண்டும் என்பதை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.