ஒருவேளை அவர் பாஜகவுக்கு உதவ விரும்பலாம்? - பிரசாந்த் கிஷோர் மீது பாய்ந்த நிதிஷ் குமார்

நிதிஷ் குமார் - பிரசாந்த் கிஷோர்
நிதிஷ் குமார் - பிரசாந்த் கிஷோர்

தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் ஒருவேளை பாஜகவுக்கு உதவ விரும்பலாம் என்று பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

டெல்லிக்கு பயணம் சென்றுள்ள பிஹார் முதல்வர் நிதிஷ் குமார், எதிர்க்கட்சிகளின் கவனத்தை மீண்டும் ஈர்த்துள்ளார். எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை வலியுறுத்திவரும் நிதிஷ் குமார், காங்கிரஸின் ராகுல் காந்தி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், சரத் பவார், ஹெச்.டி.குமாரசாமி, சீதாராம் யெச்சூரி, டி.ராஜா உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்களை சந்தித்து வருகிறார்.

எதிர்க்கட்சிகளின் கூட்டணி குறித்து, "நாங்கள் முக்கிய அணியாக இருக்க விரும்புகிறோம், மூன்றாவது அணியாக அல்ல. நான் பிரதமர் வேட்பாளராக விரும்பவில்லை. அது குறித்து பின்னர் முடிவு செய்துகொள்வோம்” என தெரிவித்து வருகிறார்.

நிதிஷ் குமார்
நிதிஷ் குமார்

இந்த சூழலில் தேர்தல் வியூகவாதி பிரசாந்த் கிஷோரையும் நிதிஷ் குமார் கடுமையாக தாக்கியுள்ளார். அதில், “மற்ற அரசியல் கட்சிகளுடன் இணைந்து பணியாற்றுவது அவரது தொழில். அவர் என்ன அறிக்கைகளை வெளியிட்டாலும் சரி, அவர் பாஜகவுடன் இருக்க விரும்பலாம். ஒருவேளை அவர் அவர்களுக்கு உதவ விரும்பலாம். ஏனென்றால் அவர் ஒரு விளம்பர நிபுணர். நாங்கள் 2005ம் ஆண்டிலிருந்து பிஹாரில் எங்கள் வேலையைச் செய்து வருகிறோம். சிலருக்கு வாய் மட்டும் பேசும் பழக்கம் உள்ளது, எதையும் செய்ய மாட்டார்கள்” என தெரிவித்துள்ளார்.

பிரசாந்த் கிஷோர் 2020 ல் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு, அவர் இனி முழுமையாக பிஹார் அரசியலில் கவனம் செலுத்தவுள்ளதாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து அவர் காங்கிரஸையும், பிஹாரில் உள்ள நிதிஷ் குமார் அரசாங்கத்தையும் விமர்சித்து வருகிறார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in