‘பொய் சொல்லாதீர்கள் ராகுல்!’

உ.பி தேர்தல் குறித்த ராகுலின் கருத்துக்கு மாயாவதி கடும் கண்டனம்
‘பொய் சொல்லாதீர்கள் ராகுல்!’

டெல்லியின் ஜவாஹர் பவனில் நேற்று நடந்த ‘தி தலித் ட்ரூத்’ புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “உத்தர பிரதேசத் தேர்தலில், கூட்டணி அமைக்கலாம் என்றும், அவரே முதல்வர் பதவியில் அமரலாம் என்றும் மாயாவதிக்குத் தகவல் கொடுத்தோம். ஆனால், அவர் எங்களிடம் பேசக்கூட மறுத்துவிட்டார்” என்று கூறியிருந்தார். சிபிஐ, அமலாக்கத் துறை, பெகாசஸ் ஆகியவற்றின் மீதான அச்சத்தின் காரணமாகவே, தனித்துப் போட்டியிட்டு பாஜகவின் வெற்றிக்கு வழிவகுத்துவிட்டதாகவும் மாயாவதியை அவர் விமர்சித்திருந்தார். இந்நிலையில், ராகுல் காந்தியின் குற்றச்சாட்டை மாயாவதி மறுத்திருக்கிறார்.

இதுகுறித்து லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசிய மாயாவதி, “ராகுல் காந்தி கூறியது முற்றிலும் பொய். காங்கிரஸ் கட்சி இதுபோன்ற குற்றச்சாட்டுகளைச் சொல்வதற்கு முன்னர் 100 முறை யோசிக்க வேண்டும். அவர்களால் பாஜகவை ஒருபோதும் வெல்ல முடியாது. ஆனால், இப்படி ஏதேனும் குற்றச்சாட்டுகளைச் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். அவர்கள் ஆட்சியில் இருந்தபோதும் சரி, இல்லாதபோதும் எதுவுமே செய்யவில்லை” என்று கடுமையாகக் குற்றம்சாட்டினார். “உங்கள் கட்சியையே ஒழுங்காக நடத்த முடியவில்லை. இதில் மற்ற கட்சிகளை ஏன் குற்றம்சொல்கிறீர்கள்?” என்றும் அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

உத்தர பிரதேசத் தேர்தலில், காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி கட்சிகள் தனித்தே களம் கண்டன. மொத்தம் உள்ள 403 பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஒரே ஒரு இடத்தில்தான் வெற்றி கிடைத்தது. 13 சதவீத வாக்குகளை அக்கட்சி பெற்றிருந்தாலும், 73 சதவீத வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர். காங்கிரஸ் கட்சிக்கு வெறும் இரண்டே இடங்களில்தான் வெற்றி கிடைத்தது. 2.5 சதவீத வாக்குகளைத்தான் அக்கட்சியால் பெற முடிந்தது. காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களில் 97 சதவீதம் பேர் டெபாசிட் இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.