ஆட்சியல்ல... கட்சியே பிரதானம்!

கைகூடுமா மாயாவதியின் மாயக் கணக்கு?
மாயாவதி
மாயாவதி

உத்தரபிரதேசம் அளவுக்கு வேறெந்த மாநிலத்தின் சட்டப்பேரவை தேர்தலும் இந்த அளவுக்கு தேசம் முழுக்க கவனிக்கப்படவில்லை. 2024 மக்களவைத் தேர்தலில் மத்தியில் அமையப்போகும் ஆட்சிக்கு கட்டியம் சொல்லப்போகும் தேர்தல் என்பதால் இத்தனை கவனக்குவிப்பு.

உபி தேர்தலில் பாஜக, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் என பிரதான கட்சிகளை உள்ளடக்கிய 4 முனை போட்டி நிலவுகிறது. எப்பாடுபட்டாவது ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள பாஜகவும், இழந்த ஆட்சியை மீட்பதற்கு சமாஜ்வாதியும் பலப்பிரயோகம் செய்கின்றன. 2017 சட்டப் பேரவைத் தேர்தலில் நான்காவது இடத்துக்கு தள்ளப்பட்ட காங்கிரசும் இந்தத் தேர்தலில் தனக்கான வாக்கு வங்கியை உயர்த்திக் காட்டவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. ஆனால், 4 முறை இங்கே முதல்வராக இருந்த மாயாவதியோ, இம்முறை ஆட்சியைப் பிடிப்பதைவிட கட்சியை கட்டிக்காக்கவே விசித்திர வியூகம் கொண்டிருக்கிறார்.

மாயாவதி மர்மங்கள்

பெருவாரி வெற்றியுடன் ஆட்சியமைத்த 2007 தேர்தல் போலவே இந்த முறையும் உபியில் மாயம் நிகழும் என்று தீர்க்கமாக நம்புவோர் பகுஜன் சமாஜில் இன்னமும் இருக்கிறார்கள். இப்போது போலவே 2007 சட்டப்பேரவை தேர்தலுக்கான கருத்துக் கணிப்புகளும், பகுஜன் சமாஜ் கட்சியை பொருட்படுத்தவில்லை. ஆனால் 2007 தேர்தலில் வென்று தேசத்தையே திரும்பி பார்க்கச் செய்தார் மாயாவதி.

ஆனால், கட்சியினருக்கு இருக்கும் இந்த நம்பிக்கை, மாயாவதிக்கு இருப்பதாக தெரியவில்லை. ஆளும்கட்சியான பாஜக முதல் பின்தங்கிய காங்கிரஸ் வரை சகல கட்சிகளும், ஒரு வருடம் முன்பாகவே தேர்தல் பணிகளை தொடங்கி விட்டன. ஆனால், முதல் கட்ட வாக்குப்பதிவுக்கு பத்து நாட்கள் முன்பாகத்தான் தூக்கம் கலைந்து மக்களிடம் பிரசன்னமானார் மாயாவதி.

அதுவரை மாநிலத்தின் பற்றி எரியும் பிரச்சினை எதுவானாலும் அறிக்கை வெளியிடுவதோடு அவரது அரசியல் கடமை முடிந்துவிடும். அதுவும்கூட எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் சமாஜ்வாதி, காங்கிரஸ் கட்சிகளை தாக்குவதாகவே இருக்கும். தவிர்க்கவே முடியாத சந்தர்ப்பங்களில் மட்டுமே, ஆளும் பாஜகவை மயிற்பீலியால் மட்டுமே சாத்துவார்.

காலியான அம்பறாத்தூணி

பட்டியலின மக்களின் ஒப்பற்ற தலைவராக தன்னை முன்னிறுத்திய மாயாவதி, பகுஜன்களின் பட்டியலில் தலித்துகள் மட்டுமன்றி ஓபிசி, மதம் மாறிய பட்டியலினத்தோர், இஸ்லாமியர் ஆகியோரையும் அரவணைத்துச் சென்றார். இந்தப் பட்டியலில் உயர் சாதியினரையும் பிற்பாடு உள்ளடக்கினார். 2007-ல் இவர் பெற்ற வெற்றிக்கு கணிசமான உயர்சாதியினரும் பங்களித்திருந்தனர். இவர்களை குறிவைத்த மாயாவதியின் அரசியல் அணுகுமுறை நுட்பங்கள் பலவற்றையும், பிற்பாடு சமாஜ்வாதி மற்றும் பாஜகவினர் கைக்கொண்டு விட்டனர்.

பொருளாதாரத்தில் நலிவடைந்த உயர்சாதியினருக்காக மாயாவதி அறிமுகம் செய்த நலத்திட்டங்களை முலாம் பூசி நாடு முழுமைக்கும் அமல்படுத்தி ஆதாயம் பார்த்தது பாஜக. மிச்சமிருக்கும் வாக்கு வங்கியை சமாஜ்வாதியும், காங்கிரசும் குறிவைத்தன. இவை மட்டுமன்றி, இஸ்லாமிய வாக்குகளை பிரிக்க ஓவைஸி போன்றவர்களும், பட்டியலின வாக்குகளை பிரிக்க பீம் ஆர்மியின் சந்திரசேகர் ஆஸாத் போன்றவர்களும் உபியில் களமிறங்கினர். 5 ஆண்டு காலம் விட்டேற்றியாக இருந்த மாயாவதி, காலியான அம்பறாத்தூணியுடன் அரசியல் போர்க்களத்தில் இம்முறை நிற்கிறார்.

வரிந்து கட்டிய கட்சிகள்

ஆட்சியை தக்கவைக்க வேண்டும் என்ற சங்கல்பத்துடன் உபியில் பாஜக தலைகீழாக நிற்கிறது. பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் மீண்டும் பாஜகவே ஆட்சியைத் தக்கவைக்கும் என்று சொன்னபோதும், பாஜக மிதப்பில் இல்லை. ஆளும்கட்சிக்கு எதிரான வழக்கமான அதிருப்தி அலைக்கு அப்பால், சமாஜ்வாதிக்கு பெருகிவரும் ஆதரவும் பாஜகவை யோசிக்க வைத்திருக்கிறது. இன்னொரு பக்கம் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்காவுக்கு பெண்கள் மத்தியில் அதிகரித்த ஆதரவு, பாஜக, சமாஜ்வாதி என 2 பிரதான கட்சிகளையும் விதிர்க்க வைத்துள்ளன. ஆனாலும் இதையெல்லாம் பார்த்துக் கொண்டு மாயாவதி மர்மப் புன்னகையுடன் அமைதி காக்கிறார்.

பாஜக - மாயாவதி: மாயக் கணக்கு

2001, டிசம்பர் 15-ல் லக்னோ பொதுக்கூட்டத்தில் வைத்து பகுஜன் சமாஜ் கட்சியை மாயாவதியிடம் கையளித்தார் கன்ஷிராம். இடைப்பட்ட 20 வருடங்களில் உச்சமும், வீழ்ச்சியும் தொட்டிருக்கிறார் மாயாவதி. ஆனால், ஆட்சியில் இல்லாத இந்த 10 ஆண்டுகளைப் போல பகுஜன் சமாஜ் கலகலத்துப் போனதில்லை. இரண்டாம் கட்டத் தலைவர்கள் மத்தியில் அதிருப்தி, மாயாவதி உறவினர்களின் தலையீடு, தனக்கு அடுத்த இடத்தில் எவரையும் வளரவிடாதது, களத்தில் இறங்கி போராடாதது என மாயாவதி மீது கட்சி நிர்வாகிகள் கசப்பிலும் இருக்கின்றனர்.

அதேசமயம், மாயாவதிக்கான நெருக்கடிகள் வேறாக இருந்தன. அமித் ஷாவின் ஆதுரம், அமலாக்கத் துறையின் அதிரடி என்ற 2 சாய்ஸ்களில், மாயாவதி முன்னதையே தேர்ந்தெடுத்தார். மாயாவதிக்கு எதிரான ஊழல் வழக்குகள் எப்போது வேண்டுமானாலும் தூசு தட்டப்படலாம் என்பதால், பழைய சிநேகிதனான பாஜகவுடன் நெருங்குவதில் மாயாவதிக்கு தயக்கமும் எழவில்லை. பாஜகவைப் பொறுத்தவரை, வரும் தேர்தல் முடிவுகளில் பெரும்பான்மை கிட்டாது தொங்கு சட்டசபைக்கான சூழல் அமைந்தால் மாயாவதி உதவியுடன் கரையேறலாம் என நம்பியிருக்கிறார்கள். அமித் ஷா - மாயாவதி இடையிலான பரஸ்பர பேட்டிகளும் அவற்றையே பிரதிபலித்து வருகின்றன.

ஆனால், அப்படியான சூழல் அமைந்தால் அப்போது மாயாவதியின் மாயக் கணக்கு வேறாய் இருக்கும் என்கிறார்கள் விஷயமறிந்தோர். 5 ஆண்டு காலமாக தன்னை முடக்கிய பாஜக மீது வன்மம் கொண்டிருக்கும் மாயாவதி, இம்முறை பழைய கணக்கை தீர்க்கவே வாய்ப்புண்டு என்கிறார்கள். பெரும் எதிர்பார்ப்புடன் மாயாவதி முதல்வராக பதவியேற்ற 1995-ல், நான்கே மாதங்களில் ஆதரவை விலக்கிக்கொண்டு ஆட்சியை கவிழ்த்தது பாஜக. அதே பாணியில் இம்முறை பாஜகவுக்கு வெளியிலிருந்து ஆதரவு அளிக்க முன்வரும் மாயாவதி, 2024 மக்களவை தேர்தலின் மாற்றத்தை எதிர்பார்த்து, ஒரே வருடத்தில் பாஜக ஆட்சியை கவிழ்க்கலாம் என்கிறார்கள். ஆனால், அந்தளவுக்கு பாஜக கோட்டைவிடுமா என்பதும், கணிசமான இடங்களில் பிஎஸ்பிக்கு வெற்றி கிடைக்குமா என்பதும் கேள்வியே.

நம்பிக்கை; அதானே எல்லாம்..

உபி முதல்வராக மாயாவதி பொறுப்பேற்றபோது இந்தியாவின் முதல் பட்டியலின பெண் முதல்வர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார். தேசியக் கட்சியான பகுஜன சமாஜுக்கு, எல்லா மாநிலங்களிலும் ஆதரவாளர்கள் பெருகினார்கள். இந்தியாவின் பிரதமராவதற்கான தகுதிகள் கொண்டவர் என்றெல்லாம் அமெரிக்க பத்திரிகைகள் சிலாகித்தன. ஆட்சியிழந்த பத்தாண்டுகள் இடைவெளியில் மாயாவதியின் நம்பிக்கை சற்று இற்றுப்போயிருக்கிறது. என்றாலும் முழுவதுமாக அற்றுப் போகவில்லை.

2007 தேர்தலில் 206 இடங்களைப் பிடித்த பகுஜன் சமாஜ், 2017-ல் 19 இடங்களாக சரிந்தது. ஆனால், வாக்கு வங்கியில் பெரிய சரிவைச் சந்திக்கவில்லை. 2007-ல் 30 சதவீதமாக இருந்த வாக்கு சதவீதம், 2017-ல் 22 சதவீதமாக மட்டுமே குறைந்திருந்தது. இந்த கள நிலவரம் தற்போதைய தேர்தலிலும் தொடருமாயின், தனக்கான வாய்ப்புக்காக நம்பிக்கையுடன் அரசியல் பயணத்தை தொடர்வார் மாயாவதி.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in