அடுத்த கைது அர்விந்த் கேஜ்ரிவால்?

மூன்றாவது அணியை முடக்க பாஜக போடும் கணக்கு!
அர்விந்த் கேஜ்ரிவால்
அர்விந்த் கேஜ்ரிவால்அடுத்த கைது அர்விந்த் கேஜ்ரிவால்? - கட்டம் கட்டும் பாஜக!

ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்கள் மணீஷ் சிசோடியா மற்றும் சத்யேந்திர ஜெயின் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அடுத்தக்கட்டமாக தங்கள் கட்சியின் பல முன்னணி தலைவர்களை தூக்கப்படலாம் என ஆம் ஆத்மி கட்சியே கொதித்துப் போயுள்ளது. மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக அர்விந்த் கேஜ்ரிவாலே கைது செய்யப்பட்டாலும் ஆச்சரியமில்லை என்ற தகவலும் தடதடக்கிறது.

டெல்லியைத் தொடர்ந்து தற்போது பஞ்சாபிலும் ஆளும் கட்சியாக உள்ளது ஆம் ஆத்மி கட்சி. அதுமட்டுமின்றி கோவா, குஜராத் மாநில சட்டமன்றத் தேர்தல்களிலும் கவனிக்கத் தக்க வெற்றியைப் பெற்று தேசியக் கட்சி அந்தஸ்தையும் அக்கட்சி எட்டியுள்ளது. இந்தியாவிலேயே ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்களில் ஆட்சியில் இருக்கும் கட்சிகளின் வரிசையில் பாஜக, காங்கிரஸுக்கு அடுத்தபடியாக ஆம் ஆத்மி இடம்பெற்றுள்ளது. இப்படி அரசியல் களத்தில் அடுத்தடுத்த வெற்றிகளைக் குவித்த ஆம் ஆத்மிக்கு இப்போது ஆகாத காலம் போல.

டெல்லியில் கொண்டுவரப்பட்ட மதுபானக் கொள்கையில் பெரும் முறைகேடுகள் நடந்ததாக சர்ச்சைகள் வெடித்ததால், அக்கொள்கையையே கைவிட்டது டெல்லி ஆம் ஆத்மி அரசு. ஆனாலும் , அதில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக விசாரணை நடத்த சிபிஐயிடம் பரிந்துரைத்தார் துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனா. இதனைத் தொடர்ந்து படிப்படியாக பல அதிகாரிகளும், தொழிலதிபர்களும் கைதாகினர்.

இந்தச்சூழலில்தான் கடந்த மாதம், டெல்லியின் துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியாவும் கைதானார். சிசோடியாவின் கைது ஆம் ஆத்மி கட்சியினரை மட்டுமல்ல, அர்விந்த் கேஜ்ரிவாலையே ஆட்டம் காண செய்துள்ளது. ஏனென்றால் ஆம் ஆத்மியில் கேஜ்ரிவாலுக்கு அடுத்த தலைவராக பரிணமிப்பவர் அவர். தேர்தல் வியூகங்களை வகுப்பதிலும், பிரச்சார யுக்திகளை வடிவமைப்பதிலும், கட்சியினரை அரவணைப்பதிலும் சிறந்த நிர்வாகி எனப் பெயரெடுத்தவர் சிசோடியா. இதனால்தான் சத்யேந்திர ஜெயின் கைதின் போதெல்லாம் கலங்காத கேஜ்ரிவால், இப்போது திகிலில் இருக்கிறார்.

மணீஷ் சிசோடியாவுடன் கேஜ்ரிவால்
மணீஷ் சிசோடியாவுடன் கேஜ்ரிவால்

தேசிய அளவில் மாறும் அரசியல் வானிலை!

நாடு முழுமைக்கும் இப்போது அசைக்கவே முடியாத கட்சியாக பாஜக இருக்கிறது என்பதை வடகிழக்கு மாநிலங்களின் தேர்தல் முடிவுகளும் உறுதி செய்துவிட்டன. அதற்கு ஓரளவுக்கு டஃப் கொடுக்கக்கூடிய இடத்தில் கூட காங்கிரஸ் இல்லை என்பதும் 3 மாநிலத் தேர்தல் முடிவுகளில் தெரியவந்துள்ளது. பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை, சீனப்பிரச்சினை, அதானி விவகாரம், சமூக ஏற்றத்தாழ்வுகள் என பாரத் ஜோடோ யாத்திரையில் ராகுல் காந்தி முழங்கியது எதுவும் 3 மாநிலத் தேர்தல்களில் எதிரொலிக்கவில்லை.

இந்தியாவில் உள்ள 3-ல் ஒருபங்கு மாநிலங்களில் மட்டுமே பிரதான கட்சியாக காங்கிரஸ் உள்ளது. எனவே, வரும் மக்களவைத் தேர்தலை எதிர்க்கொள்ள நிச்சயமாக கூட்டணி அமைத்தே ஆகவேண்டிய கட்டாயம் காங்கிரஸுக்கு உள்ளது, ஆனால், பாஜகவை எதிர்ப்பதற்கான பலமான கூட்டணி அமையும் சாத்தியம் கண்ணுக்கெட்டிய தூரம்வரை தென்படவே இல்லை.

அதிகாரபூர்வமாக இப்போது காங்கிரஸ் கூட்டணியில் திமுக, தேசியவாத காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, சிவசேனாவின் உத்தவ் தாக்கரே அணி ஆகியவை மட்டுமே உள்ளன. ஆம் ஆத்மி, திரிணமூல் காங்கிரஸ், பாரத் ராஷ்டிர சமிதி, மதசார்பற்ற ஜனதா தளம், பிஜு ஜனதா தளம், தெலுங்கு தேசம் கட்சி, சமாஜ்வாதி கட்சி என பல முக்கிய எதிர்க்கட்சிகளும் தற்போதைய நிலையில் காங்கிரஸ் கூட்டணிக்கு செல்வது சந்தேகமே.

இதில் முக்கியமாக அர்விந்த் கேஜ்ரிவால், மம்தா பானர்ஜி ஆகியோர் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என அறிவித்து விட்டனர், சந்திரசேகர் ராவின் நிலையும் இதுதான். இந்த நிலையில்தான் மேற்கண்ட காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சிகள் இணைந்து ஒரு கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. அவ்வாறு ஒரு மாற்றுக்கூட்டணி அமையும் பட்சத்தில் அது டெல்லி, பஞ்சாப், மேற்கு வங்கம், உத்தரபிரதேசம், தெலங்கானா, கர்நாடகா, குஜராத், கோவா போன்ற மாநிலங்களில் கணிசமான வெற்றியைப் பெறும் வாய்ப்பும் உள்ளது.

அர்விந்த் கேஜ்ரிவால்
அர்விந்த் கேஜ்ரிவால்

இந்தக் கூட்டணியின் முகமாக அர்விந்த் கேஜ்ரிவால் அல்லது மம்தா பானர்ஜி முன்னிறுத்தப்பட வாய்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்த சூழலில்தான் இவர்கள் இருவரின் மீதான கிடுக்குப்பிடியை இறுக்கத் தொடங்கியுள்ளது மத்திய அரசு. தங்கள் கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்களைத் தூக்கி பந்தாடி ஆட்டம் காண வைக்க மத்திய ஏஜென்சிகள் பயன்படுத்தப்படுவதாக ஆம் ஆத்மி, திரிணமூல் கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு அடுத்தக் குறியா?

டெல்லி மதுபானக்கொள்கை வழக்கில் கடந்த மாதம் அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் அர்விந்த் கேஜ்ரிவாலின் பெயரும் குறிப்பிடப்பட்டது. அவர் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ‘இந்தோஸ்பிரிட்’ மதுபான நிறுவனத்தின் தலைவர் சமீர் மகேந்துருவுடன், கேஜ்ரிவால் வீடியோ அழைப்பில் பேச அக்கட்சியின் நிர்வாகி விஜய் நாயர் ஏற்பாடு செய்ததாகவும், டெல்லி மதுபானக் கொள்கை லைசென்சுக்காக ஆம் ஆத்மிக்கு ரூ.100 கோடியை விஜய் நாயர் பெற்றதாகவும் அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது.

இந்தப் பணம் கோவா தேர்தல் பரப்புரைக்கு பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது அமலாக்கத்துறை. ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகள் முற்றிலும் கற்பனையானது, தனது அரசைக் கவிழ்க்கும் சதி என கேஜ்ரிவால் புறந்தள்ளினார். ஆனாலும், கேஜ்ரிவாலின் தனி உதவியாளர் பிபவ் குமாரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டார்.

அர்விந்த் கேஜ்ரிவால் பகவந்த் மான்
அர்விந்த் கேஜ்ரிவால் பகவந்த் மான்

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் இப்போது தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர் ராவின் மகள் கே.கவிதாவும் கொண்டுவரப்பட்டுள்ளார். டெல்லி மதுபானக் கொள்கை லைசென்ஸ் பெற முயற்சி செய்த ‘சவுத் குரூப்’பில் முக்கியமான நபராக கவிதாவும் சொல்லப்படுகிறார். எனவே, அவரும் விரைவில் கைதுசெய்யப்படுவார் என பாஜக நிர்வாகிகளே வெளிப்படையாகச் சொல்லி வருகின்றனர். தெலங்கானா மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் நெருக்கத்தில் கவிதாவை கைது செய்து சந்திரசேகர் ராவை முடக்கலாம் என்ற திட்டம் உள்ளதாக சொல்லப்படுகிறது.

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் ஒவ்வொருவராக தூக்கி கடைசியாக, மக்களவைத் தேர்தல் நெருக்கத்தில் அர்விந்த் கேஜ்ரிவாலும் கைது செய்யப்படலாம். அதற்குத் தேவையான அனைத்து சுற்றுச்சூழலையும் படிப்படியாக உருவாக்கி வருகிறது மத்திய அரசு. அர்விந்த் கேஜ்ரிவாலை தூக்குவதன் மூலமாக ஆம் ஆத்மியை மட்டுமின்றி, எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையையும் சிதறடிக்க முடியும் என்பது பாஜகவின் கணக்கு.

அரவிந்த் கேஜ்ரிவால்
அரவிந்த் கேஜ்ரிவால்

பாஜகவின் கண்ணை உறுத்தும் கேஜ்ரிவால்!

அரசியல் களத்தில் பொதுவாக மோடியின் வளர்ச்சி முழக்கங்களுக்கும், கேஜ்ரிவாலில் வளர்ச்சி முழக்கங்களுக்கும் பெரிய வேறுபாடு இருக்காது. இரண்டு பேருமே ஊழலை ஒழிப்போம், வளர்ச்சியை கட்டமைப்போம், நேர்மையான நிர்வாகத்தைக் கொடுப்போம் என்பார்கள். எனவே, பாஜகவின் மாற்று சக்தியாக ஆம் ஆத்மியை நகர்ப்புற மக்கள் நம்பத் தொடங்கியுள்ளனர்.

10 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ளதால் நாடு முழுவதும் பாஜக மீது ‘ஆட்சிக்கு எதிரான மனநிலை’ பரவலாக உள்ளது. மேலும், அதானி விவகாரம், வேலைவாய்ப்பின்மை பிரச்சினைகளும் நகர்ப்புறங்களில் மோடி அரசின் மீது அதிருப்தியை உருவாக்கியுள்ளது. எனவே, பாஜக மீது அதிருப்தியடைந்த அதே சமயம் காங்கிரஸ் மீது இன்னமும் நம்பிக்கை வராத மக்களின் வாக்குகளை அர்விந்த் கேஜ்ரிவால் அறுவடை செய்யும் வாய்ப்பு தற்போது அதிகரித்துள்ளது. இதுநாள் வரை இருந்ததைப் போல, கேஜ்ரிவாலின் வாக்குகள் காங்கிரஸ் வாக்குகளை உடைத்தால் நல்லது, ஆனால் நமது வாக்குகளையும் சேர்த்துப் பதம் பார்த்துவிட்டால் என்ன செய்வது என யோசிக்கிறது பாஜக தலைமை. எனவேதான், ஆம் ஆத்மி மற்றும் கேஜ்ரிவாலின் அடையாளமாகச் சொல்லப்படும் அவர்களின் ‘கிளீன் இமேஜை’ உடைக்க மெனக்கிடுகிறார்கள். இதற்கு வசமாக வந்து சிக்கியுள்ளது டெல்லி மதுபானக்கொள்கை விவகாரம்.

பாஜகவின் இப்போதைய ஒரே குறி, 2024 மக்களவைத் தேர்தல்தான். அதன் வெற்றிக்குக் குறுக்கே நிற்கும் எவரையும், எப்படியேனும் வீழ்த்தும் வியூகங்களும் அவர்கள் கைவசம் அடுத்தடுத்து உள்ளது. ராகுல் காந்திக்கு அடுத்தபடியாக தேசிய அளவில் பாஜகவின் கண்ணை உறுத்தும் ஒரே முகம் கேஜ்ரிவாலுடையது. எனவே, அவரின் மீது அடுத்தடுத்த அஸ்திரங்கள் பலமுனைகளிலிருந்தும் வீசப்படுகிறது. இந்த நெருக்கடியான காலங்களை துணிச்சலோடு எதிர்கொண்டு விட்டால் அர்விந்த் கேஜ்ரிவால் அசைக்கமுடியாத கில்லிதான்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in