தனது 66 சென்ட் நிலத்தை பழங்குடியின மக்களுக்கு இலவசமாக கொடுத்தார் அமைச்சர் செஞ்சி மஸ்தான்!

தனது 66 சென்ட்  நிலத்தை பழங்குடியின மக்களுக்கு இலவசமாக கொடுத்தார் அமைச்சர் செஞ்சி மஸ்தான்!
அமைச்சர் செஞ்சி மஸ்தான்

தனது பெயரில் இருந்த 60 லட்சம் மதிப்பிலான 66 சென்ட் இடத்தினை பழங்குடியின மக்களுக்கு எழுதி கொடுத்தார் அமைச்சர் செஞ்சி மஸ்தான்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பேரூராட்சி எல்லைக்குட்பட்ட கிருஷ்ணாபுரம் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசித்து வருகிறார்கள். கடந்த 26.2.2021 அன்று ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சியில் அப்பகுதி மக்கள் பல்வேறு கோரிக்கைகளை வைத்தனர். அப்போது கிருஷ்ணாபுரம் பழங்குடியினர் தங்களுக்கு வீட்டுமனை பட்டா வேண்டி கோரிக்கை மனு அளித்தனர். இந்த மனு விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் பரிசீலனைக்கு சென்றது. ழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதியில் அரசு புறம்போக்கு நிலங்கள் இல்லாததால் மாற்று இடம் ஒதுக்குவது குறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் செஞ்சி சட்டமன்ற உறுப்பினரும், மாநில சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சருமான செஞ்சி மஸ்தான், தனக்குச் சொந்தமான செஞ்சி பேரூராட்சி எல்லைக்குட்பட்ட கிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள 66 சென்ட் புஞ்சை நிலத்தை பழங்குடி மக்களுக்கு கொடுக்க முன்வந்தார். இதனடிப்படையில் தன்னுடைய மனைவி சைதானீபீ மற்றும் மூத்த மகளுடன் நேற்று செஞ்சி சார்பதிவாளர் அலுவலகத்திற்கு அமைச்சர் வந்தார். 60 லட்சம் மதிப்பிலான தன்னுடைய 66 சென்ட் நிலத்தை மலைவாழ் மக்களுக்கு எழுதி கொடுத்தார். அமைச்சர் செஞ்சி மஸ்தானின் இந்த செயல் பழங்குடியினரிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

இது குறித்து அமைச்சர் செஞ்சி மஸ்தான் தனது ட்விட்டர் பக்கத்தில், உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் வழங்கப்பட்ட மனு தீர்வு காணப்பட்டது. வீட்டு மனை பட்டா கேட்டு கடந்த 26.02.2021 அன்று உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் பழங்குடியின மக்கள் மனு அளித்தனர், இம்மனு மாவட்ட ஆட்சியர் மற்றும் செஞ்சி வட்டாட்சியர் அலுவலகங்களில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது, மேலும் இலவச வீட்டுமனை பட்டா வழங்க போதிய இடம் வசதி இல்லாததால், செஞ்சி பேரூராட்சி, கிருஷ்ணாபுரம் பகுதியில் என் பெயரில் இருந்த "60 லட்சம் மதிப்பிலான 66 சென்ட் இடத்தினை" மலைவாழ் மக்களுக்கு எழுதி கொடுத்தேன்" என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in