கட்சி நிர்வாகிகளின் துன்புறுத்தலால் இந்த முடிவை எடுக்கிறேன்: கடிதம் எழுதி வைத்து மார்க்சிஸ்ட் தொண்டர் தற்கொலை

பாபு
பாபு

கேரளத்தில் மார்க்சிஸ்ட் கட்சித் தொண்டர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். தன் தற்கொலைக்கு உள்ளூர் மார்க்சிஸ்ட் நிர்வாகிகள் கொடுத்த மன ரீதியான துன்புறுத்தலே காரணம் என பரபரப்பான கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்தக் கடிதம் கேரளத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டம் ரன்னி அருகே பெருநாடு பகுதியைச் சேர்ந்தவர் பாபு(68). இவர் தனது வீட்டு அருகே உள்ள நிலத்தில் தற்கொலை செய்து இறந்து கிடந்தார். இவர் தன் தற்கொலைக்கான காரணம் குறித்து எழுதியிருக்கும் கடிதம் ஒன்றும் கிடைத்துள்ளது.

அந்தக் கடிதத்தில், “மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினரும், ரன்னி பெருநாடு கிராம ஊராட்சியின் தலைவருமான பி.எஸ்.மோகனன், வார்டு உறுப்பினர் விஸ்வன், மார்க்சிஸ்ட் வட்டார கமிட்டி செயலாளர் ராபின் கே.தாமஸ் ஆகியோரே காரணம். அவர்களால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளானேன் ”எனவும் அந்த கடிதத்தில் எழுதியுள்ளார்.

பாபு சில ஆண்டுகளுக்கு முன்பு தன் சொந்த நிலத்தில் இருந்து காத்திருப்பு கொட்டகை கட்ட இடம் கொடுத்தார். இந்நிலையில் சமீபத்தில் பாபுவுக்கு சொந்தமான நிலத்தில் பஞ்சாயத்து இலவச கழிப்பிடங்கள் கட்டக் கேட்டது. ஆனால், பாபுவின் குடும்பத்தினர் அதற்கு சம்மதிக்கவில்லை. இதனால் மார்க்சிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் மூவரும் தங்கள் குடும்பத்தை மிரட்டியதாக பாபுவின் மனைவி குமாரி ரன்னி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து கூறும் குமாரி, “எங்கள் வீட்டுக்கு அருகில் ஏற்கெனவே காத்திருப்பு கொட்டகை கட்ட இடம் கொடுத்தோம். இப்போது அதன் அருகிலேயே கூடுதல் இடம்கேட்டு மிரட்டினார்கள். அதில் கழிப்பறை கட்ட இருப்பதாகச் சொன்னார்கள். என் கணவரும் மார்க்சிஸ்ட் கட்சியின் தொண்டர்தான். அதனால்தான் தயாள குணத்துடன் காத்திருப்பு கொட்டகைக்கு இடம் கொடுத்தோம். இப்போது அதன் அருகிலேயே கழிப்பறை அமைந்தால் அதன் செப்டிக் டேங்க் எங்கள் வீட்டு கிணற்றில் அருகில் அமையும். அதனால் தான் நாங்கள் இடம் கொடுக்கவில்லை. ஆனால் தொடர்ந்து எங்களை மார்க்சிஸ்ட் நிர்வாகிகள் மிரட்டினார்கள். இதேபோல் பெருநாடு கூட்டுறவு சங்கம் நிதி நெருக்கடியில் இருப்பதாக எங்களிடம் 20 லட்சம் கேட்டும் மிரட்டினார்கள். என் பிள்ளைகள் வெளிநாட்டில் இருக்கிறார்கள். அவர்களிடம் இருந்து மோகனன், விஸ்வனுக்கு தலா 3 லட்சம் கேட்டனர் ”எனவும் அதிரவைக்கும் புகாரைத் தெரிவித்துள்ளார்.

மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகிகள் மிரட்டி, கட்சியின் தொண்டர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கட்சி மட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in