கூட்டணியில் குழப்பம் வரும் என்று எதிர்பார்த்தவர்கள் ஏமாந்து போனார்கள்!

மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேட்டி
கே.பாலகிருஷ்ணன்
கே.பாலகிருஷ்ணன்

திமுகவோடு கூட்டணிகள் திமுகவுடன் தோழமையோடு இருந்தாலும் அரசின் முடிவுகளில் ஏதேனும் தவறாகப்பட்டால் உடனடியாக அதனைச் சுட்டிக் காட்டவும் தயங்கியதில்லை. சில நேரங்களில் அதனை இசைவுடன் ஏற்றுக்கொள்ளும் திமுக, பல நேரங்களில் அவர்கள் மீது பாயவும் செய்கிறது. அப்படித்தான் 12 மணிநேர வேலை சட்ட விவகாரத்தை கண்டிப்புடன் சுட்டிக் காட்டிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் டி.கே.ரங்கராஜன் மீது கடும் பாய்ச்சல் காட்டியது.

12 மணி நேர வேலைச்சட்டத்தை எதிர்க்கட்சிகள், கூட்டணிக் கட்சிகள் மட்டுமல்லாது திமுக தொழிற்சங்கமும் கடுமையாக எதிர்த்தது. இதனையடுத்து அந்த சட்டத்தை வாபஸ் பெற்றார் தமிழக முதல்வர் ஸ்டாலின். இதனிடையே இந்த விஷயத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் டி.கே.ரங்கராஜன் பேசியதையும், அது தீக்கதிரில் வெளியிடப் பட்டதையும் கண்டித்து முரசொலியில் கடுமையாகச் சாடியது திமுக.

இந்த விஷயத்தில் திமுகவுக்கும் மார்க்சிஸ்ட்களுக்கும் இடையில் கருத்து வேற்றுமை ஏற்பட்டிருப்பதாகச் சொல்லப்படும் நிலையில் இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணனிடம் பேசினோம். 

டி.கே.ரங்கராஜனை முரசொலி தாக்கிய விவகாரம் குறித்து உங்கள் கருத்து என்ன? 

இந்தச் சட்டம் கொண்டுவந்தபோது அனைவருக்கும் அதிருப்தி ஏற்பட்டது உண்மைதான். இதை மற்றகட்சிகள் ஆளும்போது கொண்டு வந்திருந்தால்கூட பரவாயில்லை. திமுக மாதிரி ஒரு கட்சி ஆளும்போது கொண்டுவந்தது எல்லோருக்குமே நெருடலாக இருந்தது. அதனால் சட்டமன்றத்தில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தோம். கண்டித்து வெளிநடப்பும் செய்தோம். நாங்கள் மட்டுமல்லாது திமுக தொழிற்சங்கமும்கூட எதிர்த்தார்கள். தொமுச எதிர்ப்பு தெரிவித்ததை முதல்வர் கூட பாராட்டினார். அதையடுத்து மே 1 ம் தேதி அதை  வாபஸ் வாங்கியும் விட்டார் முதல்வர். அதனால் இனியும் அதை  யாரும் பெரிதுபடுத்தத் தேவையில்லை. 

டி.கே.ஆர் பேசியது ஒன்று; செய்தியில் போடப்பட்டது ஒன்று. அதற்கு முரசொலியில் வெளிவந்தது வேறொன்று.  இதெல்லாம் சேர்ந்து சின்ன ஒரு மனவருத்தத்தை உண்டாக்கியதுதான். ஆனால் அதை பெரிதாக்கிவிடாமல், உடனடியாக இதுகுறித்து முதலமைச்சரிடமும் பேசிவிட்டோம். தீக்கதிரிலும் விளக்கம் போட்டிருக்கிறோம். அது அதோடு முடிந்துபோய் விட்டது. இதனால் கூட்டணியில் குழப்பம் வரும் என்று எதிர்பார்த்தவர்கள் ஏமாந்து போனார்கள். அப்படி ஏற்படவும் வாய்ப்பில்லை.

பொதுவாக கூட்டணியில்  அவ்வப்போது சின்னச் சின்னக் கருத்து வேறுபாடுகள் ஏற்படத்தான் செய்யும். மாறுபட்ட கருத்துக்கள் வரத்தான் செய்யும். அதை கூடிப்பேசி தீர்த்துக் கொள்கிறோம். அது ஆரோக்கியமான,  ஜனநாயகமான விஷயம் தான்.

டி.கே.ரங்கராஜன்
டி.கே.ரங்கராஜன்

உங்களுடைய இந்த பெருந்தன்மை முரசொலியின் வார்த்தைகளில் இல்லையே? 

அதில் உள்ளது எல்லாம் திமுகவுடைய கருத்துக்கள் என்றோ, முதலமைச்சரின் கருத்துக்கள் என்றோ நாங்கள் கருதவில்லை. அதை எழுதியவரின் கருத்துக்களாகத்தான் நாங்கள் பார்க்கிறோம். அரசியல் தொடர்புடையவர்களாக  இல்லாமல் ஒரு எழுத்தாளராக மட்டும் இருப்பவர்கள் எழுதியுள்ளதாகவே அது தெரிகிறது. அதனால் அதை நாங்கள் பெரிதுபடுத்தவில்லை.

இதனால் இரு கட்சிகளுக்குமிடையே உறவு பாதிக்காது என்கிறீர்களா? 

நிச்சயம் பாதிக்காது. கூட்டணி தொடரும். எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 இடங்களையும் எங்கள் கூட்டணி கைப்பற்றும். அதேபோல 2026 சட்டமன்றத் தேர்தலிலும் எங்கள் கூட்டணி வெற்றிபெற்று திமுக ஆட்சியே தொடரும். 

தொடக்கத்தில் இருந்ததைப் போல இப்போதும் கூட்டணிக் கட்சிகளை திமுக அனுசரிக்கிறதா?  

திமுக தலைவர் ஸ்டாலினை பொறுத்தவரை கூட்டணிக் கட்சிகளுடன்  மிக இணக்கமாகவே இருக்கிறார். எதையும் தனியாக செய்வதோ, முடிவெடுப்பதோ கிடையாது. அனைவரையும் கலந்துபேசித்தான் முடிவுகளை எடுக்கிறார். ஏதோ ஒரு முடிவை எடுத்துவிட்டு அதை கூட்டணிக் கட்சிகளிடம் சொல்வதில்லை. கூட்டணிக் கட்சிகளை அழைத்து கலந்துபேசி என்ன முடிவெடுக்கலாம் என்று ஆலோசித்துத்தான் முடிவுகள் எடுக்கப்படுகிறது. யாரையும் உதாசீனப்படுத்தவில்லை. அனுசரித்துத்தான் நடக்கிறார்கள். 

தமிழகத்தின் முக்கிய பிரச்சினைகளில் முதல்வர் கூட்டணிக் கட்சிகளை கலந்து ஆலோசிக்கிறார். அதேபோல மக்களுக்கான அரசின் நடவடிக்கைகளின்போதும்  கூட்டணிக் கட்சிகளுடன் கலந்துபேசி பேசி முடிவெடுத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். நல்ல கருத்துக்களை,  மக்களின் எண்ண ஓட்டங்களை அரசிடம் எங்களால் எடுத்துச்சொல்ல முடியும்.

அதற்காக எங்களைக் கேட்டுவிட்டுத்தான் செய்ய வேண்டும் என்று நாங்கள் சொல்ல வரவைல்லை. நடப்பது திமுக அரசு. அவர்கள் என்ன வேண்டுமானால் முடிவு எடுக்கலாம். அதேநேரத்தில் எங்களைப்போன்ற தோழமைக் கட்சிகளையும் கலந்தால் தேவையான கருத்துக்களை சொல்லி சிறப்பாக செயல்படுவதற்கு உதவியாக இருப்போம். அதனால் அரசுக்கு இன்னும் கூடுதலாக நற்பெயர் கிடைக்கும். 

கே.பாலகிருஷ்ணன்
கே.பாலகிருஷ்ணன்

இரண்டாண்டு கால திமுக ஆட்சி எப்படி இருக்கிறது? 

கடந்த கால ஆட்சியை ஒப்பிடும்போது இது எல்லா வகையிலும் நன்றாகவே இருக்கிறது. இந்த ஆட்சி வந்திருக்கக்கூடிய சூழ்நிலையையும் பார்க்க வேண்டியுள்ளது. பொருளாதார சூழ்நிலை மோசம், கொரோனா பாதிப்பின் உச்சம், இயற்கை இடர்பாடுகள் என்று மோசமான சூழ்நிலையில் தான் திமுக ஆட்சிக்கு வந்தது.  இரண்டாண்டு காலத்தில் இதையெல்லாம் சமாளித்துக் கொண்டு வந்திருக்கிறார்கள். பொருளாதார நிலையையும் ஓரளவு சரிசெய்திருக்கிறார்கள். 

ஆனால், மின்கட்டணம், சொத்துவரி உயர்வு போன்றவற்றை  கொஞ்சம் நிதானித்துச் செய்திருக்கலாம். இவை மக்கள் மத்தியில் கெட்டபெயரை ஏற்படுத்தக்கூடியவை. அதேபோல கடந்த ஆட்சியில் செய்தது போலவே ஒப்பந்த தொழிலாளர்கள் நியமனம், அவுட்சோர்சிங் முறையில் பணிகள்,  தொகுப்பு ஊதியம் தருவது போன்றவற்றை இந்த அரசாங்கமும் தொடர்கிறது. அது நல்ல முறை இல்லை. அதை தொடரக்கூடாது. 

உங்கள் பார்வையில் அதிமுக இப்போது எப்படி இருக்கிறது? 

சுத்தமாக உருக்குலைந்து, மதிப்பிழந்து, பலமிழந்து போய்விட்டது. இடைப்பட்ட காலத்தில் மத்திய அரசாங்கத்தின் மக்கள் விரோத நடவடிக்கைகள் எதையும் அவர்கள் எதிர்க்கவில்லை. ராகுல்காந்தி விவகாரம், அதானி விவகாரம் என்று எது குறித்தும் அவர்கள் வாய் திறக்கவில்லையே அப்புறம் எப்படி அரசியல் செய்வார்கள்?

நாடாளுமன்றத்தை ஒருமாதம் நடக்க விடாதது, எதிர்க்கட்சி தலைவர்களை வழக்குகள் போட்டு சிறையில் அடைப்பது என்பது உள்ளிட்ட மக்கள் பிரச்சினைகளில் பாஜக அரசைக் கண்டிக்காமல் இருப்பவர்களால் எப்படி தமிழக மக்களிடம் போய் அரசியல் செய்ய முடியும் என்று எனக்குப் புரியவில்லை. 

மக்கள் சம்பந்தப்பட்ட எந்த விஷயத்திலும் அக்கறை செலுத்தாதவர்கள் யாருக்காக அரசியல் செய்கிறார்கள் என்றே தெரியவில்லை. இதோ இங்கு தமிழ்நாடு ஆளுநர் எதேச்சதிகார போக்குடன் இவ்வளவு செய்கிறார். அவரின் நடவடிக்கைகளை கண்டிக்காமல் இருக்கிறார்கள். அதையெல்லாம்  எப்படி ஆதரிக்க முடியும்? எதையும் கண்டுகொள்ள வில்லை என்றால் அவர்களின் எதிர்காலம் எப்படி நன்றாக இருக்க முடியும்? என்னைப் பொறுத்தவரையில் 2021-ல் இருந்ததை விட மிக மோசமான நிலையில்தான் அதிமுக உள்ளது.

ஓபிஎஸ் - தினகரன் சந்திப்பு, கம்யூனிஸ்ட் கட்சிகளைப் போல இணைந்து செயல்படுவோம் என்ற அவர்களது அறிவிப்பு இதையெல்லாம் எப்படிப் பார்க்கிறீர்கள்? 

முன்பு எதற்காகப்  பிரிந்தார்கள்? என்ன சொல்லிப் பிரிந்தார்கள்? இப்போது எதற்காகச் சேர்ந்தார்கள்?  எல்லாம் சந்தர்ப்பவாதம்.  அவர்கள் ஒருவரை ஒருவர் பேசிக்கொண்டதையெல்லாம் இப்போது என்ன செய்வார்கள்? சுயநலமும், சந்தர்ப்பவாதமும் தான் அவர்களிடம் இருக்கிறது. 

நடராஜர் கோயிலில் குழந்தைத் திருமணம் நடக்கவில்லை என்று ஆளுநர் சொல்கிறார். இதில், சிதம்பரத்தைச் சேர்ந்தவரான உங்கள் கருத்து? 

சிதம்பரத்தில் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் குடும்பங்களில் குழந்தைத் திருமணம் காலம் காலமாக நடந்து வருகிறது. இது அந்தப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அனைவருக்கும் நன்றாகவே தெரியும். இதுகுறித்து ஏற்கெனவே பல வழக்குகள் உள்ளன. நாங்களே புகார்கள் அளித்திருக்கிறோம். தற்போதைய விவகாரத்திலும் குழந்தைத் திருமணம் செய்ததை காவல் துறையினர் மற்றும் சமூகநலத்துறையினர் உறுதி செய்திருக்கிறார்கள். இதுகுறித்து வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. சிலர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.  இந்தநிலையில், அதை இல்லை என்று எப்படி ஆளுநர் சொல்கிறார் என்பதுதான் எங்களுக்குப் புரியவில்லை. 

ஆளுநர் ஆர்.என்.ரவி நடந்துகொள்ளும் விதம் குறித்து..?

ஆளுநர் தனது வரம்பை மீறி நடந்து கொள்கிறார். அவருக்கு பின்னால் இருந்து  மோடி அரசாங்கம் ஆட்டி வைக்கிறது. தனக்குப்  பின்னால் மத்திய அரசாங்கம் இருக்கிறது என்பதால் இவர் இப்படி நடந்து கொள்கிறார்.  ஆளுநர்களைப் பயன்படுத்தி, பாஜக ஆளாத மாநிலங்களில் மோடி அரசு குழப்பத்தை ஏற்படுத்துகிறது. இங்கேயுள்ள முதல்வர், திராவிட மாடல் என்கிறார். கேரளத்தில் நாங்கள், இடதுசாரி மாடல் என்கிறோம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தனக்கென்று ஒரு மாடலை கடைபிடிக்கிறோம் என்று சொல்வதற்கு உரிமை இருக்கிறது. அதனால் சொல்கிறார்கள். அதை எப்படி இவர் விமர்சிக்க முடியும், கருத்துச் சொல்ல முடியும். இவர் என்ன அரசியல்வாதியா? காலாவதியாகிவிட்டது என்று சொல்ல இவர் என்ன வரலாற்றுப் பேராசிரியரா?

இதற்கு முடிவுதான் என்ன?  

இப்படியே போனால் தமிழ்நாட்டு மக்கள் கொந்தளித்து எழுவார்கள். மக்கள் போராட்டம் வெடிக்கும். அதற்கு இடம் கொடுக்காதவாறு ஆளுநர் உணர்ந்து நடந்துகொள்ள வேண்டும். அல்லது மத்திய அரசே அவரை திரும்பப்பெற்றுக்கொள்ள வேண்டும்; அதுதான் முடிவு!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in