
கடலூரில் இன்று ஆளுநர் ரவிக்கு எதிராக கருப்புக்கொடியுடன் மறியல் செய்ய முயன்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் காவல்துறையினால் கைது செய்து அப்புறப்படுத்தப்பட்டனர்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மார்க்சியத்தையும், கார்ல் மார்க்ஸ், டார்வின் உள்ளிட்டவர்களையும் விமர்சித்து பேசியதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கடுமையான கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் அவர் செல்லும் இடங்களில் எல்லாம் கருப்புக்கொடி காட்டும் போராட்டத்தை நடத்தப் போவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நேற்று அறிவித்திருந்தது.
அதன்படி இன்று சிதம்பரத்திலிருந்து கார் மூலமாக சென்னை திரும்பிய ஆளுநருக்கு கடலூரில் கருப்புக்கொடி காட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திரண்டனர். கடலூர் ஜவான் பவன் அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் கோ.மாதவன் தலைமையில் தமிழ்நாடு ஆளுநரைக் கண்டித்து கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆளுநரின் கார் வருகையின் போது கருப்புக்கொடியுடன் சாலையை மறிக்க முயன்ற சுமார் 50க்கும் மேற்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியினரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்து அப்புறப்படுத்தினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கம்யூனிஸ்ட் கட்சியினரின் போராட்ட அறிவிப்பால் ஆளுநர் செல்லும் வழியெங்கும் காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.