`நமது அம்மா நாளிதழ்' ஆசிரியர் பொறுப்பிலிருந்து மருது அழகுராஜ் திடீர் விலகல்: காரணம் என்ன?

ஜெயலலிதாவுடன் மருது அழகுராஜ்
ஜெயலலிதாவுடன் மருது அழகுராஜ்

அ.தி.மு.க.வில் உட்கட்சிப் பூசல் தீவிரமடைந்துள்ள நிலையில் அக்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழான நமது அம்மா நாளிதழின் ஆசிரியரான மருது அழகுராஜ் அப்பொறுப்பில் இருந்து விலகிக் கொள்வதாக இன்று அறிவித்துள்ளார்.

அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழாக இருந்த நமது எம்ஜிஆர் நாளிதழின் ஆசிரியராக இருந்தவர் தான் இந்த மருது அழகுராஜ். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், சசிகலா தரப்பினர் கைக்கு பத்திரிகையின் நிர்வாகம் சென்றநிலையில், அவர் அதை விமர்சித்ததன் காரணமாக நமது எம்ஜிஆர் நாளிதழில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

பின்னர், ஓபிஎஸ்- ஈபிஎஸ் வசம் அதிமுக சென்றதும் நமது அம்மா என்ற நாளிதழ் தொடங்கப்பட்டு அதற்கு மருது அழகுராஜ் ஆசிரியராக நியமிக்கப்பட்டார். 2021-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் இவருக்கு போட்டியிடவும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

தற்போது அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பான விவகாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், நாளிதழின் நிறுவனர் பொறுப்பில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தின் பெயர் சில தினங்களுக்கு முன்பு நீக்கம் செய்யப்பட்டது. இந்த சூழலில்தான் நமது அம்மா நாளிதழின் ஆசிரியர் பொறுப்பில் இருந்து மருது அழகுராஜ் விலகுவதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ``நதிகாக்கும் இரு கரைகள்" என்னும் என் போன்றோரது நம்பிக்கை சுயநலத்தால் தகர்ந்து விட்ட நிலையில் நமது அம்மா நாளிதழ் ஆசிரியர் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்கிறேன்'' என்று மட்டும் தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் ஒற்றைத் தலைமைக்கு தொடர்ந்து ஆதரவு அதிகரித்துவரும் சூழலில் அதனை எதிர்த்து திடீரென அக்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழின் ஆசிரியரே பதவி விலகியுள்ளது அக்கட்சியின் நிர்வாகிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in