`ஓபிஎஸ்- ஈபிஎஸ் பிளவுக்குக் காரணம் ஜெயக்குமார்தான்'- அதிரடி கிளப்பும் மருது அழகுராஜ்!

`ஓபிஎஸ்- ஈபிஎஸ் பிளவுக்குக் காரணம் ஜெயக்குமார்தான்'- அதிரடி கிளப்பும் மருது அழகுராஜ்!

``ஓ.பன்னீர் செல்வம்- எடப்பாடி பழனிச்சாமி ஆகிய இருவரையும் பிரித்தது ஜெயக்குமார்தான்'' என மருது அழகுராஜ் குற்றம் சாட்டியுள்ளார்.

நமது அம்மா நாளிதழின் ஆசிரியராக இருந்த மருது அழகுராஜுக்கும், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கும் இடையே தொடர் கருத்து மோதல்கள் வெடித்துள்ளன. நேற்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த மருது அழகுராஜ், எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது பல்வேறு குற்றச் சாட்டுகளை முன் வைத்தார். அவருக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை இன்று சந்தித்தார்.

அப்போது பேசிய ஜெயக்குமார், “கூலிக்கு மாரடிக்கிற பணியைத்தான் மருது அழகுராஜ் எப்போதும் செய்து கொண்டிருக்கிறார். பல கட்சிகளில் பணியாற்றிவிட்டுத்தான் நமது எம்ஜிஆரில் பொறுப்பாசிரியர் பணிக்குச் சேர்ந்தார். நமது எம்ஜிஆர் நாளிதழில், நிதி கையாடல் முறைகேடு செய்ததால்தான் அவர் விளக்கி வைக்கப்பட்டார். பிறகு நமது அம்மா நாளிதழுக்குப் பொறுப்பாசிரியராக வந்த பிறகாவது கையாடல் என்கிற வாலைச் சுருட்டிக் கொண்டு ஒழுங்காக இருந்திருக்கலாம். நமது அம்மாவில் வரக்கூடிய விளம்பர பணத்தைக் கையாடல் செய்திருக்கிறார். சசிகலா மற்றும் அவர்களைச் சார்ந்தவர்கள் கட்சிக்குள் வரக்கூடாது எனத் தர்மயுத்தம் நடத்தியவர் ஓபிஎஸ். ஆனால் டிடிவியை மறைமுகமாக ஓபிஎஸ் சந்தித்தது குறித்து ஏன் அவர் கருத்து தெரிவிக்கவில்லை” என்றார்.

ஜெயக்குமாரின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்துள்ள மருது அழகுராஜ், “நமது எம்ஜிஆரில் நான் முறைகேடு செய்திருந்தால் என்னை நீக்கியிருக்க வேண்டும். ஏன் என்னை நீக்கவில்லை? கோடநாடு வழக்கில் கைது நடவடிக்கைக்குப் பிறகு குற்றம் நிரூபித்து தண்டனை பெற்றுத் தராதது ஏன்?. ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகிய இருவரையும் பிரித்தது ஜெயக்குமார்தான். நான் கூறியிருந்த கருத்துகளுக்கு எதிர் கருத்துச் சொல்லுங்கள். ஆனால் அதைவிடுத்து தேவையற்ற அவதூறுகளைப் பரப்ப வேண்டாம்” என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in