என்ன சொல்லப் போகிறார் மருது அழகுராஜ்?: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஆஜர்

என்ன சொல்லப் போகிறார் மருது அழகுராஜ்?: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஆஜர்

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து ‘நமது அம்மா’ முன்னாள் ஆசிரியர் மருது அழகுராஜ் இன்று தனிப்படையினர் முன்பாக விசாரணைக்கு ஆஜராகி உள்ளார்.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடையவர்களைக் கைது செய்ய வேண்டும் என சசிகலா மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் கருத்து தெரிவித்த நிலையில் அந்த வழக்கு கடந்த ஒரு மாதமாக சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. ஏற்கெனவே விசாரணை செய்யப்பட்டவர்களிடம் மீண்டும் விசாரணை நடத்தி வரும் நிலையில், புதிய நபர்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சென்னை சிஐடி நகரில் உள்ள சைலி அடுக்குமாடிக் குடியிருப்பில் கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற வருமான வரித்துறையினரின் சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இந்த ஆவணங்களில் கோடநாடு தொடர்பான சில ஆவணங்களும் சிக்கின. அந்த ஆவணங்களைக் கோவை ஐஜி சரக அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் கொடுத்ததன் அடிப்படையில் மணல் ஒப்பந்ததாரர் ஆறுமுகசாமி மற்றும் அவரது மகன் செந்தில்குமார், முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டி மற்றும் அவரது மகன் அசோக்பாபு உள்ளிட்டோரிடம் தனிப்படையினர் மீண்டும் விசாரணை நடத்தினர். மேலும் இந்த வழக்கு தொடர்பாகப் பலரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் 'நமது அம்மா' நாளிதழ் முன்னாள் ஆசிரியர் மருது அழகுராஜ் இன்று கோவை சரக ஐஜி சுதாகர் தலைமையிலான தனிப்படை முன்பு விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். விசாரணைக்கு ஆஜராக வந்திருந்த மருது அழகுராஜை செய்தியாளர்கள் சந்தித்தனர். அப்போது, “எதற்காக விசாரணைக்கு அழைத்திருக்கிறார்கள் என்பது விசாரணைக்குப் பிறகுதான் தெரியும்” என்றார். கோடநாடு கொலை வழக்கில் எடப்பாடி பழனிசாமி மீது ஓபிஎஸ், சசிகலா, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி உள்ளிட்டோர் குற்றச்சாட்டுகளை எழுப்பி வருகிறார்கள். இந்நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அந்த வழக்கில் ஆஜராகி வரும் நிலையில், அவர்கள் தனக்கு எதிரான கருத்துகளை விசாரணையின் போது தெரிவித்தால் அது சிக்கலில் முடிந்துவிடும் என நினைக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இந்த நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளரான மருது அழகுராஜ் ஆஜராகியுள்ளது ஈபிஎஸ் தரப்பினருக்கு கிலியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in