மாயாவதி, கன்ஷிராம்
மாயாவதி, கன்ஷிராம்

கன்ஷிராம்: சமூக விடுதலைக்காக உழைத்த பகுஜன் நாயகர்

மார்ச் 15: கன்ஷிராம் பிறந்தநாள்

‘மிலே முலாயம் - கன்ஷிராம்... ஹவா மே உட் கயே ஜெய் ஸ்ரீராம்’ (முலாயம் சிங் யாதவும் கன்ஷிராமும் இணைந்துவிட்டனர்; ஜெய் ஸ்ரீராம் எனும் முழக்கம் காற்றில் பறந்துவிட்டது) எனும் முழக்கத்துடன், 1993-ல் சமாஜ்வாதி கட்சியுடன் பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி அமைத்த நிகழ்வு இந்திய அரசியலில் மிக முக்கியமான தருணமாகக் கருதப்படுகிறது.

1992 டிசம்பரில் நடந்த பாபர் மசூதி இடிப்பு சம்பவத்துக்குப் பின்னர் உத்தர பிரதேசத்தில் நிலவிவந்த மத அடிப்படையிலான மோதலுக்கு எதிராக ஒரு வலுவான இணைப்பாக இருவரின் கூட்டணி இருந்தது. பட்டியலினச் சமூகத்தினரையும், பிற்படுத்தப்பட்ட மக்களையும் இணைக்கும் சக்திகளாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவும், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் கன்ஷிராமும் கைகோத்தபோது, இந்துத்துவ சக்திகளின் வளர்ச்சி தடுத்து நிறுத்தப்பட்டது. பல ஆண்டுகளுக்கு பாஜக தலையெடுக்க முடியாத அளவுக்கு அடக்கியும் வைத்தது.

கட்டாயத்தின் பெயரில் பாஜகவுடன் கூட்டணி

1991-ல் உத்தர பிரதேச முதல்வராகப் பதவியேற்றிருந்த கல்யாண் சிங், பாபர் மசூதி இடிக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து பதவிவிலக நேர்ந்தது. குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டிருந்த உத்தர பிரதேசத்தில் 1993-ல் தேர்தல் நடந்தபோதுதான் கன்ஷிராமும் முலாயம் சிங் யாதவும் கைகோத்தனர். அந்தத் தேர்தலில் பாஜகவுக்கு 177 இடங்கள் கிடைத்தன. எனினும், கூட்டணிக் கட்சியான பகுஜன் சமாஜுடன், காங்கிரஸ், ஜனதா தளம் ஆகிய கட்சிகளும் அளித்த ஆதரவால் முலாயம் சிங் முதல்வரானார். எனினும், பகுஜன் சமாஜ் கட்சியுடனான சமாஜ்வாதி கட்சிக் கூட்டணி நிலைக்கவில்லை.

1995-ல் பாஜக ஆதரவுடன் மாயாவதி முதல்வரானார். அப்போது பாஜக மீதான தனது நம்பிக்கையையும் காங்கிரஸ் கட்சி மீதான தனது அதிருப்தியையும் கன்ஷிராம் வெளிப்படுத்தியிருந்தார். 50 ஆண்டுகாலமாகப் பட்டியலினச் சமூகத்தினரின் வாக்குகளைப் பெற்றுவந்த காங்கிரஸ் கட்சியால் அச்சமூகத்தினரின் வாழ்க்கையில் மாற்றம் கொண்டுவர முடியவில்லை என அவர் விமர்சித்திருந்தார். பகுஜன் சமாஜ் கட்சியின் கொள்கைகளை முன்னெடுத்துச் செல்வதாக அப்போது வாஜ்பாயும் அத்வானியும் அளித்த வாக்குறுதிகளை அவர் நம்பினார். அதேவேளையில் பாஜகவை அவர் முழுமையாக நம்பிவிடவில்லை. கட்டாயத்தின் பேரிலேயே பாஜகவுடன் கூட்டணி அமைக்க நேர்ந்ததாக விளக்கமளித்தார்.

அம்பேத்கரின் வழியில்...

கன்ஷிராமின் ஒரே நோக்கம், ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் பங்களிப்பு அதிகாரத்தை நோக்கியதாக அமைய வேண்டும் என்பதுதான். அதற்காகச் சமரசம் செய்துகொள்ள நேர்ந்தபோதும் மிகுந்த கவனமாகவே இருந்தார்.

பெருந்திரளாக நாம் இருந்தும் நம்மால் அதிகாரத்துக்கு வர முடியாதது ஏன் எனும் கேள்வியை ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் விதைத்து, அரசியல் ரீதியாக அவர்களை அணிதிரட்டியவர் கன்ஷிராம். அதற்காகக் கிராமம் கிராமமாகச் சென்று எழுச்சி உரையாற்றினார். சைக்கிள் பேரணிகளில் கலந்துகொண்டு விழிப்புணர்வூட்டினார்.

அம்பேத்கருக்குப் பின்னர் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக உழைத்த முக்கியமான தலைவராக கன்ஷிராம் கருதப்படுகிறார். சமூகச் செயற்பாட்டாளர், சீர்திருத்தவாதி, அரசியல் தலைவர் என அடுத்தடுத்த கட்டங்களில் கன்ஷிராம் கண்ட வளர்ச்சி, வட இந்தியாவில் ஒடுக்கப்பட்ட மக்களின் எழுச்சிக்கு முக்கியக் காரணியாக அமைந்தது. பல்வேறு மாநிலங்களிலிருந்து பட்டியலினச் சமூகத்தினர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரிடம் துடிப்பான இளம் தலைவர்களை அடையாளம் கண்டு வளர்த்தெடுத்தார். உத்தர பிரதேசத்திலிருந்து மாயாவதி, சோனே லால், சுவாமி பிரசாத் மவுரியா போன்றோரையும், மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த கங்கா பட்டா எனும் பழங்குடியினத் தலைவரையும் அரசியல் பாதைக்கு அழைத்து வழிநடத்தியவர் கன்ஷிராம்தான்!

ஒடுக்கப்பட்ட மக்களின் பாதுகாவலர்

1934 மார்ச் 15-ல் அன்றைய பஞ்சாப் மாகாணத்தில் ரூப்நகர் மாவட்டத்தில் ராம்தசியா சமூகத்தில் பிறந்தவர் கன்ஷிராம் (சமார் என அழைக்கப்படும் பட்டியலின சாதி பஞ்சாபில் ராம்தசியா என அழைக்கப்படுகிறது). பீர்த்திபூர் பங்கா கிராமத்தில் பிறந்தவர் எனச் சிலரும், கவாஸ்பூரில் பிறந்தவர் எனச் சிலரும் கூறுகிறார்கள். தந்தை பெயர் ஹரி சிங், தாய் பெயர் விஷான் கவுர். எளிய விவசாயக் குடும்பம். இப்படியான பின்னணியிலிருந்து வந்த கன்ஷிராம், பிற்காலத்தில் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் பாதுகாவலராக உயர்ந்தார்.

ரூப்நகர் அரசுக் கல்லூரியில் அறிவியல் பட்டப்படிப்பு முடித்த கன்ஷிராம், 1964-ல் புணேயில் உள்ள வெடிபொருள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகத்தில் பணிக்குச் சேர்ந்தார். அரசு அலுவலகங்களில் காட்டப்படும் சாதியப் பாகுபாடும், அந்தக் காலகட்டத்தில் அவர் வாசித்துவந்த அம்பேத்கரின் புத்தகங்களும் அவரை ஒரு சமூகச் செயற்பாட்டாளராக மாற்றின. அம்பேத்கர் பிறந்தநாள், புத்தபூர்ணிமா ஆகிய நாட்களில் விடுமுறை அறிவிக்க முடியாது என வெடிபொருள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வக நிர்வாகம் கூறியதும் அவரைக் கொந்தளிக்கச் செய்தது.

ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த அரசு அலுவலர்களுக்கே இந்த நிலை என்றால், சாமானியர்களின் நிலை என்ன எனும் கேள்வி அவருக்குள் விஸ்வரூபம் எடுத்தது. அம்பேத்கரின் மகன் யஷ்வந்த் அம்பேத்கர், ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அம்பேத்கர் உருவாக்கிய பட்டியலினச் சாதிகளின் கூட்டமைப்பின் முதல் தலைவராக இருந்த வழக்கறிஞர் ந.சிவராஜ் உள்ளிட்டோர் உருவாக்கிய இந்தியக் குடியரசுக் கட்சியில் சேர்ந்த கன்ஷிராம், ஒருகட்டத்தில் காங்கிரஸ் மீதான அதன் சார்பு நிலை பிடிக்காமல், அதிலிருந்து வெளியேறினார்.

1971-ல் எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் சிறுபான்மையினச் சமூகங்களைச் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கான அமைப்பைத் தொடங்கினார். படித்து வேலையில் இருக்கும் அந்தச் சமூகங்களைச் சேர்ந்தவர்களை ஒருங்கிணைத்து அம்பேக்ரின் சிந்தனைகளைப் பரப்புவதையும் அந்தச் சமூகங்களின் மேம்பாட்டுக்கு வழிவகுப்பதையும் நோக்கமாகக் கொண்டு அந்த அமைப்பைத் தொடங்கினார். 1978-ல் அது ‘பாம்செஃப்’ ஆக உருவெடுத்தது. அரசுப் பணிகளில் இருந்தபடி நகரங்களில் தங்கள் அடையாளங்களை வெளிக்காட்டிக்கொள்ளாமல் வாழ்ந்துவந்த பட்டியலினச் சமூகத்தினர் மத்தியில், தங்கள் சமூகத்தைச் சேர்ந்த மக்களுக்குச் சேவையாற்ற வேண்டும் எனும் எண்ணத்தையும் அந்த அமைப்பு விதைத்தது. அரசியல் இயக்கமாக அந்த அமைப்பை கன்ஷிராம் தொடங்கவில்லை.

ஒரு கட்டத்தில் பட்டியலினச் சமூகத்தினரின் அரசியல் எழுச்சி மிக முக்கியம் என கன்ஷிராம் கருதினார். தேர்தலில் செலுத்தும் ஒவ்வொரு வாக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை அவர்கள் உணர வேண்டும் என விரும்பினார். 1981-ல் அவர் தொடங்கிய ‘தலித் ஷோஷித் சமாஜ் சங்கர்ஷ் சமிதி’ (டிஎஸ்4) அமைப்பு, 1984-ல் பகுஜன் சமாஜ் கட்சியாக உருவெடுத்தது. டிஎஸ்4 அமைப்பில் தீவிரமாக இயங்கிவந்த மாயாவதி, பகுஜன் சமாஜ் கட்சியில் முக்கியத்துவம் பெறத் தொடங்கினார்.

மாயாவதியின் வழிகாட்டி

1977-ல் டெல்லி கான்ஸ்டிடியூஷன் கிளப்பில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் உரையாற்றிய ராஜ் நாராயண், பட்டியலினச் சமூகத்தினரைப் பற்றிப் பேசும்போது ‘ஹரிஜன்’ எனும் வார்த்தையைப் பயன்படுத்தியது அக்கூட்டத்தில் பங்கேற்ற ஓர் இளம்பெண்ணைக் கோபம் கொள்ளச் செய்தது.

அவருக்குப் பின்னர் மேடையேறிய அப்பெண், “அம்பேத்கர் ஒரு முறைகூட உச்சரிக்காத அந்த வார்த்தையை நீங்கள் எப்படிப் பயன்படுத்தலாம்? அரசமைப்புச் சட்டத்தில் பட்டியலினத்தவர்கள் என்றுதானே குறிப்பிடப்பட்டிருக்கிறது?” என்று ராஜ் நாராயணைக் கடுமையாக விமர்சித்தார். அப்போது மேடையில் இருந்த கன்ஷிராம், அந்தப் பெண்ணின் துணிச்சலையும் அரசியல் அறிவையும் கண்டு வியந்துபோனார். அந்த இளம்பெண் - மாயாவதி.

இளங்கலைப் பட்டப் படிப்புக்குப் பின்னர் எல்எல்பி படித்து, பிறகு பி.எட் முடித்துவிட்டு டெல்லியில் ஒரு பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றிவந்த மாயாவதி, ஐஏஎஸ் தேர்வுக்காகவும் தயாராகிவந்தார். “நீ அரசு நிர்வாகத்தில் அங்கம் வகித்தால் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிடும் இடத்தில் இருப்பாய்” என்று உத்வேகம் தந்து அரசியல் பாதையில் மாயாவதிக்கு வழிகாட்டியவர் கன்ஷிராம். வீடு தேடி வந்து அரசியல் பயணத்துக்கு அழைத்த கன்ஷிராமின் வார்த்தைகளால் உந்தப்பட்ட மாயாவதி, தனது குடும்பத்தினரின் எதிர்ப்பையும் மீறித்தான் அரசியல் பிரவேசம் செய்தார். மாயாவதி மட்டுமல்ல, ஏழைகள், ஒடுக்கப்பட்ட - பிற்படுத்தப்பட்ட மக்களைத் தேடிச் சென்று உதவுவது, அரசியல் பாதைக்கு வழிகாட்டுவது என இயங்கியவர் கன்ஷிராம்.

குடும்பத்தைத் தியாகம் செய்தவர்

பெரிய தலைவர்கள் எனும் பிம்பத்துடன் இருப்பவர்கள், நேரில் வந்து சந்திக்குமாறு அழைப்புவிடுத்தால் செல்ல மறுத்த அவர், ஏழைகளின் வீடு தேடிச் சென்று உதவுவார். சமூக அரசியல் செயல்பாட்டில் தன்னைக் கரைத்துக்கொண்ட கன்ஷிராம், தனது குடும்பத்தைவிடவும் சமூக விடுதலைக்கே முக்கியத்துவம் கொடுத்தார். தனது சொந்தக் குடும்பத்தைத் தியாகம் செய்வதாகவே அறிவித்தார். தனது சகோதரி மரணமடைந்தபோதுகூட இறுதிநிகழ்ச்சிக்காக நேரம் ஒதுக்க அவரால் முடியவில்லை. இன்னொரு சகோதரியின் திருமண நிகழ்வுக்கும்கூட அவர் செல்லவில்லை.

அதுமட்டுமல்ல, திருமணம் செய்யப்போவதில்லை என்றும் வங்கிக் கணக்கு வைத்திருக்கப்போவதில்லை என்றும் அறிவித்தார். எல்லாவற்றையும்விட, தனது தந்தை காலமானபோது, பக்கத்து கிராமத்தில்தான் அவர் இருந்தார். தனது தாய் அழைத்தும் தந்தையின் இறுதிச் சடங்கில் அவர் கலந்துகொள்ளவில்லை.

கொள்கை உறுதி கொண்டவர்

பாஜக மிகப் பெரிய ஊழல் கட்சி என்றும் காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சிகளும் பாஜகவுக்கு இணையான ஊழல் கட்சிகள் என்றும் விமர்சித்த கன்ஷிராம், பட்டியலினச் சமூகத்தினர் பிற கட்சிகளைச் சார்ந்திருக்காமல் வலுவான அரசியல் சக்தியாகத் தங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று விரும்பியவர். பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்த ஜகஜீவன் ராம், ராம் விலாஸ் பாஸ்வான் போன்ற தலைவர்கள் பிற கட்சிகளை சார்ந்து இயங்கியதை விமர்சித்தார்.

“எனது மறைவுக்குப் பின்னரும் எனது பணிகள் தொடர வேண்டும் என்று விரும்புகிறேன். நான் உயிரோடு இருக்கும்போதே அந்தப் பொறுப்பை மாயாவதிக்கு வழங்குகிறேன்” என்று 2001-ல் பொதுமேடையில் கன்ஷிராம் அறிவித்தார். “கன்ஷிராம் எனக்கு அளித்த பொறுப்பை நான் நேர்மையுடன் முன்னெடுத்துச் செல்வேன்” என்று மாயாவதியும் உறுதியளித்தார். தனது லட்சியம் நிறைவேறும் என்ற கனவுடன் தான் 2006-ல் கன்ஷிராம் மறைந்தார்.

ஆனால், மறைமுகமாக பாஜகவின் வளர்ச்சிக்கு ஆதரவாக அமைந்த மாயாவதியின் அரசியல் செயல்பாடுகள் அந்த நம்பிக்கையைத் தகர்த்துவிட்டன என விமர்சிக்கப்படுகிறது. இன்றைக்கு பகுஜன் சமாஜ் கட்சியைவிடவும் பாஜகவுக்கே பட்டியலின மக்கள் ஆதரவளிக்கிறார்கள் என்பதை சமீபத்தில் நடந்துமுடிந்த உத்தர பிரதேசத் தேர்தல் உணர்த்துகிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு 2017-ல் உத்தர பிரதேச ஆட்சியை பாஜக கைப்பற்றியபோதே, மாயாவதியின் அரசியல் செயல்பாடுகள் விமர்சிக்கப்பட்டன. இன்றைக்கு அந்த விமர்சனம் இன்னும் கூர்மையடைந்திருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in