அடுத்தடுத்து கைதாகும் தலைவர்கள்; அதிர்ச்சியில் உறைந்த மம்தா - உலுக்கி எடுக்கும் எதிர்க்கட்சிகள்!

அடுத்தடுத்து கைதாகும் தலைவர்கள்; அதிர்ச்சியில் உறைந்த மம்தா - உலுக்கி எடுக்கும் எதிர்க்கட்சிகள்!

கால்நடைகள் கடத்தல் வழக்கு தொடர்பாக திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான அனுப்ரதா மொண்டல் நேற்று கைது செய்யப்பட்டார். ஏற்கெனவே பார்த்தா சாட்டர்ஜி கைதான நிலையில், தற்போது மொண்டலும் கைது செய்யப்பட்டுள்ளதால் அதிர்ச்சியில் உறைந்துள்ளார் மம்தா பானர்ஜி.

பல கோடி ரூபாய் மதிப்பிலான கால்நடைகள் கடத்தல் வழக்கில் தொடர்புடையதாகக் கூறி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பிர்பூம் மாவட்டத் தலைவர் அனுப்ரதா மொண்டலை சிபிஐ அவரது இல்லத்தில் கைது செய்தது. இந்த வழக்கு தொடர்பாக பலமுறை சம்மன் அனுப்பியும் அனுப்ரதா மொண்டல் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இந்த நிலையில் நேற்று மொண்டலின் இல்லத்தில் அவரிடம் நடத்தப்பட்ட ஒரு மணி நேர விசாரணைக்குப் பிறகு அவரை சிபிஐ கைது செய்தது. இந்த ஊழலில் மொண்டலின் நேரடி தொடர்பு இருப்பதை கண்டறிந்துள்ளதாகவும், விசாரணைக்கு ஒத்துழைக்காததற்காக அவரை கைது செய்துள்ளதாகவும் சிபிஐ தெரிவித்தது. ஆகஸ்ட் 10ம் தேதிவரை மொண்டலை சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க அசன்சோலில் உள்ள சிறப்பு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

ஏற்கெனவே மேற்குவங்க அமைச்சராக இருந்த, திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான பார்த்தா சாட்டர்ஜி ஆசிரியர் பணி நியமன முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் சில தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். தற்போது மொண்டலும் கைது செய்யப்பட்டதால், இது மத்திய அரசின் ‘அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை’ என்று திரிணமூல் கட்சி கடுமையாக குற்றம் சாட்டியுள்ளது. மேலும் மத்திய அரசுக்கு எதிராக இரண்டு நாட்கள் போராட்டம் நடத்தவும் அக்கட்சி முடிவு செய்துள்ளது.

பார்த்தா சாட்டர்ஜி
பார்த்தா சாட்டர்ஜி

இது தொடர்பாக பேசிய திரிணமூல் மூத்த தலைவரும், அமைச்சருமான சந்திரிமா பட்டாச்சார்யா, “ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி ஊழலைப் பொறுத்துக் கொள்ளாது. கால்நடைகள் கடத்தல் தொடர்பாக நடுநிலையான, விரைவான விசாரணை தேவை. கட்சி சரியான நேரத்தில் மொண்டல் குறித்து சரியான முடிவை எடுக்கும். ஒருவருக்கு எதிரான குற்றச்சாட்டு வந்தாலே அவரை குற்றவாளி என்று சொல்லிவிடமுடியாது. மத்திய புலனாய்வு அமைப்புகளின் செயல்பாடுகளில் எங்களுக்கு கடுமையான சந்தேகம் உள்ளது. ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ள பாஜக தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்போது மத்திய ஏஜென்சிகள் அமைதியாக இருப்பதை நாங்கள் பார்க்கிறோம்" என்று கூறினார்.

இதற்கிடையில், தொடர் கைதுகள் காரணமாக மேற்கு வங்கத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி மீது கடுமையான தாக்குதலை நடத்த தொடங்கியுள்ளன. மம்தா பானர்ஜி தலைமையிலான ஆட்சி ஊழலில் மூழ்கிவிட்டதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது. சிபிஎம் மூத்த தலைவர் சுஜன் சக்ரவர்த்தி, ‘பிர்பூம் மாவட்டத்தில் தன்னை சட்டத்திற்கு அப்பாற்பட்டவராக மொண்டல் கருதினார், டிஎம்சி தலைமை மொண்டலின் தவறான செயல்களுக்கு கண்ணை மூடிக்கொண்டது’ என்று குற்றம் சாட்டினார். இவ்விவகாரம் தொடர்பாக பேசிய காங்கிரஸ் எம்பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ‘பிர்பூம் பாகுபலி முன்னமே கைது செய்யப்பட்டிருக்க வேண்டும்’ என தெரிவித்தார்.

2020 ம் ஆண்டில் சிபிஐ எஃப்ஐஆர் பதிவு செய்த பின்னர், அனுப்ரதா மொண்டலின் பெயர் கால்நடை கடத்தல் வழக்கில் சேர்க்கப்பட்டது. 2015 மற்றும் 2017 க்கு இடையில், 20,000 க்கும் மேற்பட்ட கால்நடைகளின் தலைகளை பங்களா தேஷ் எல்லைக்கு அருகே எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) கைப்பற்றியது. இதில் மொண்டல் தனது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி பங்களாதேஷுக்கு கால்நடைகளை கடத்த உதவியதாக சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது. ஏற்கெனவே இரண்டு முறை சிபிஐ அவரிடம் விசாரணையும் நடத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in