'நான் குஜராத்தில் பரப்புரை செய்யக்கூடாது என்பதற்காக கைது செய்யப்படலாம்’ - மணீஷ் சிசோடியா குற்றச்சாட்டு

'நான் குஜராத்தில் பரப்புரை செய்யக்கூடாது என்பதற்காக கைது செய்யப்படலாம்’ - மணீஷ் சிசோடியா குற்றச்சாட்டு

நான் குஜராத் தேர்தலுக்காக பிரச்சாரம் செய்வதைத் தடுப்பதற்காக சிபிஐ என்னை கைது செய்யலாம் என்று டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா குற்றம் சாட்டியுள்ளார்

டெல்லி அரசின் மதுபானக் கொள்கை வழக்கில் டெல்லி துணை முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான மணீஷ் சிசோடியா சிபிஐயால் இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “நான் வரும் நாட்களில் தேர்தல் பிரச்சாரத்திற்காக குஜராத் செல்லவிருந்தேன். நான் குஜராத் செல்வதை தடுப்பதே அவர்களின் நோக்கம். குஜராத் தோல்வியை அறிந்ததால் பாஜக பயப்படுகிறது. இதனால் நான் போலி வழக்கில் கைது செய்யப்படலாம்" என்று கூறினார்.

இன்று காலை 11 மணிக்கு டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் ஆஜராகுமாறு மணீஷ் சிசோடியாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. பல கட்டங்களாக நடத்தப்படும் விசாரணைக்கான கேள்விகளின் பட்டியலை ஏஜென்சி தயாரித்துள்ளது. இதுவரை கிடைத்துள்ள ஆதாரங்கள் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வாக்குமூலங்கள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா முன்பு வைக்கப்படும்.

இன்று காலையில் மணீஷ் சிசோடியா ட்வீட் செய்த வீடியோவில், சிபிஐ அலுவலகத்திற்குச் செல்வதற்கு முன் தனது தாயின் பாதங்களைத் தொட்டு ஆசிர்வாதம் வாங்கினார். ஆம் ஆத்மி கட்சி எம்பி சஞ்சய் சிங், எம்எல்ஏக்கள் அதிஷி, சவுரப் பரத்வாஜ் உட்பட பல ஆம் ஆத்மி தலைவர்கள் அவரது வீட்டில் இருந்தனர். அதனைத் தொடர்ந்து பேசிய அவர், "முன்பு அவர்கள் என் வீட்டில் சோதனை நடத்தினர், அவர்கள் எனக்கு எதிராக எதையும் கண்டுபிடிக்கவில்லை, இன்றும் அவர்கள் எதையும் கண்டுபிடிக்க மாட்டார்கள். ஆனால், இப்போது என்னைக் கைது செய்யத் திட்டமிட்டுள்ளனர், பாஜக என்னை சிறையில் அடைத்து தேர்தலில் வெற்றி பெற முடியாது" என்று அவர் கூறினார்.

மணீஷ் சிசோடியாவுக்கு ஆதரவு தெரிவித்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், “அவர் தேர்தல் பிரச்சாரத்திற்காக குஜராத் செல்லவிருந்தார். அதனை தடுக்கும் முயற்சியில், அவர் கைது செய்யபடலாம். ஆனால் தேர்தல் பிரச்சாரம் நிறுத்தப்படாது. குஜராத்தில் உள்ள ஒவ்வொரு நபரும் இன்று ஆம் ஆத்மிக்கு பிரச்சாரம் செய்கிறார்கள்" என்று இந்தியில் ட்வீட் செய்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in