டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்றக் காவல் டிசம்பர் 21ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மதுபானக் கொள்கை ஊழல் தொடர்பாக டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, சிபிஐயால் கடந்த பிப்ரவரி 26-ம் தேதி கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் உள்ளார். அமலாக்கத்துறையும் தனியே வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. அவரது ஜாமீன் மனுக்கள் பலமுறை தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அவரது நீதிமன்றக் காவல் இன்றுடன் முடிந்தது.
இந்நிலையில், இந்த வழக்கின் இன்றைய விசாரணையில் மணீஷ் சிசோடியா உள்ளிட்டோரின் நீதிமன்றக் காவலை டிசம்பர் 21 ஆம் தேதி வரை நீட்டித்து தில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. மேலும் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு வழங்கிய வேண்டிய வழக்கு ஆவணங்களை அமலாக்கத்துறை இன்னும் வழங்காததற்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் தலைநகர் டெல்லியில் மாநில அரசால் புதிய மதுபான கொள்கை அமல்படுத்தப்பட்டது. இந்தக் கொள்கையில் இடம் பெற்றிருந்த வரிக் குறைப்பு உள்ளிட்ட முக்கிய சலுகைகள் குறித்த விவரங்களை முன்கூட்டியே கசிய விடப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதன் மூலம் மதுபான ஆலை அதிபர்கள் மற்றும் விற்பனையாளர்கள் பல கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்தாகவும் புகார்கள் வந்தன. இந்த விவரங்களை கசியவிட்டு ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்கள் பல கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
இதனை அடுத்து டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா, இது தொடர்பாக சிபிஐ விசாரணை மேற்கொள்ள பரிந்துரை செய்தார். அதன் விளைவாக, டெல்லி துணை முதலமைச்சராக ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் மணீஷ் சிசோடியாவின் வீடு உள்பட 31 இடங்களில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக சோதனை செய்தனர். அதன் தொடர்ச்சியாக மணீஷ் சிசோடியா உள்ளிட்ட 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது. இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி அவர் மீண்டும் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகினார். மறுநாள் அவர் சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவரை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதனை அடுத்து தனக்கு ஜாமீன் கோரி மணீஷ் சிசோடியா உச்சநீதிமன்றத்தை நாடினார். ஆனால், உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. இந்த நிலையில் அவர் தன்னுடைய துணை முதலமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்தார். அதன்பின்னர் தொடர்ந்து பலமுறை மணீஷ் சிசோடியா நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தும் அது தள்ளுபடி செய்யப்பட்டே வருகிறது.
இதையும் வாசிக்கலாமே...
ப்பா... கிளாமரில் தெறிக்க விட்ட தமன்னா
நெகிழ்ச்சி... சாவிலும் இணைபிரியாத அக்கா, தம்பி!
அடுத்த சர்ச்சை... தேசிய கீதத்தை அவமானப்படுத்திய மன்சூர் அலிகான்!
மன்சூர் அலிகான் தப்புன்னா... ரஜினி பேசுனதும் தப்பு தான்!
அடாவடி வசூல்... கழிவறை கட்டண குத்தகைதாரருக்கு ரூ.30,000 அபராதம் விதித்து தீர்ப்பு!