மணீஷ் சிசோடியா வெளிநாடு தப்பிச்செல்ல தடை: அடுத்த அதிரடியில் இறங்கியது சிபிஐ!

டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா
டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா

டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா வெளிநாடு தப்பிச்செல்வதற்கு தடை விதிக்கும் விதமாக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

டெல்லி மதுபானக் கொள்கையில் முறைகேடு தொடர்பாக சிபிஐயின் எப்ஐஆரில் குறிப்பிடப்பட்டுள்ள 15 குற்றவாளிகள் பட்டியலில் மணீஷ் சிசோடியா முதலிடத்தில் உள்ளார்.இது தொடர்பாக சிபிஐ வெளியிட்டுள்ள 11 பக்க ஆவணத்தில் ஊழல், குற்றவியல் சதி மற்றும் கணக்கு முறைகேடு உள்ளிட்ட குற்றங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மற்றும் 12 பேருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சிபிஐ அதிகாரிகள் இன்று தெரிவித்தனர். மதுபானக் கொள்கையில் ஊழல் நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், டெல்லியின் கலால் துறையை கையாளும் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் வீடு மற்றும் 31 இடங்களில் சிபிஐ வெள்ளிக்கிழமையன்று சோதனை நடத்தியது.

டெல்லியில் புதிய கலால் கொள்கையில் முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று டெல்லியின் லெப்டினட் கவர்னர் வி.கே.சக்சேனா அழைப்பு விடுத்திருந்தார். இதனைத் தொடர்ந்து மணீஷ் சிசோடியாவின் வீடு மற்றும் 30 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியது.

சோதனை நிறைவடைந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மணீஷ் சிசோடியா, “சிபிஐ குழு எனது வீட்டை சோதனை செய்து கணினி, செல்போன் மற்றும் சில கோப்புகளைக் கைப்பற்றினர். எனது குடும்பத்தினர் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளித்தனர், தொடர்ந்து ஒத்துழைப்போம். நாங்கள் எந்த ஊழலோ, தவறோ செய்யவில்லை. அதனால் நாங்கள் பயப்படவில்லை. சிபிஐ தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்பது அனைவருக்கும் தெரியும்” என தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in