பாஜக முதல்வர் குறித்த ஊழல் புகார்: பதிலடியாகக் களமிறங்கும் ஆம் ஆத்மி கட்சி!

பாஜக முதல்வர் குறித்த ஊழல் புகார்: பதிலடியாகக் களமிறங்கும் ஆம் ஆத்மி கட்சி!
டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா

டெல்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் பணமோசடி வழக்கில் கைதுசெய்யப்பட்டதையடுத்து பாஜக - ஆம் ஆத்மி கட்சிகளுக்கு இடையிலான மோதல் பெரிய அளவில் வெடித்திருக்கிறது. இந்நிலையில், அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா மீது மிகப் பெரிய ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா.

பின்னணி என்ன?

2015-16-ல் கொல்கத்தாவை மையமாகக் கொண்ட நிறுவனத்துடன் ஹவாலா பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக சத்யேந்திர ஜெயின் மீது அமலாக்கத் துறை குற்றம்சாட்டியிருந்தது. மே 30-ல் அவர் கைதுசெய்யப்பட்டார்.

ஏற்கெனவே, விசாரணை அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை மத்திய அரசு துன்புறுத்திவருவதாக டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் போன்ற தலைவர்கள் விமர்சித்துவருகிறார்கள். இந்தச் சூழலில், சத்யேந்திர ஜெயின் கைதைத் தொடர்ந்து மத்திய அரசுக்கும் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கும் இடையிலான மோதல் உச்சமடைந்திருக்கிறது.

அமலாக்கத் துறையால் சத்யேந்திர ஜெயின் கைதுசெய்யப்படலாம் எனத் தனக்குத் தகவல்கள் கிடைத்ததாக ஜனவரி மாதமே கேஜ்ரிவால் கூறியிருந்தார். எதிர்பார்த்தது போலவே, சத்யேந்திர ஜெயின் கைது செய்யப்பட்டார்.

அதேபோல், மணீஷ் சிசோடியாவும் பொய் வழக்கில் கைதுசெய்யப்படலாம் எனத் தற்போது கேஜ்ரிவால் கூறிவருகிறார். “எங்கள் அனைவரையும் ஒன்றாகச் சிறையில் தள்ளுமாறு பிரதமர் மோடியைக் கேட்டுக்கொள்கிறேன்” எனக் காணொலிப் பதிவு ஒன்றில் அவர் கிண்டலாகக் கூறியிருந்தார்.

இப்படியான சூழலில், ஹிமந்த பிஸ்வ சர்மா தொடர்பாக எழுந்திருக்கும் ஊழல் புகாரை ஆம் ஆத்மி கட்சி கையில் எடுத்திருக்கிறது.

என்ன புகார்?

முந்தைய முதல்வர் சர்பானந்த சோனோவால் அரசில் சுகாதாரத் துறை அமைச்சராக ஹிமந்த பிஸ்வ சர்மா பதவிவகித்தார். அப்போது பிபிஇ கிட்ஸ் உள்ளிட்ட கரோனா தடுப்பு மருத்துவ சாதனங்களை வாங்குவதில் முறைகேடு நடந்ததாகத் தற்போது புகார்கள் எழுந்திருக்கின்றன. ஹிமந்த பிஸ்வ சர்மாவின் மனைவி ரினிகி புயான் சர்மாவுக்குச் சொந்தமான நிறுவனத்திடமிருந்து பிபிஇ கிட்கள் வாங்கியதில் மிகப் பெரிய அளவில் முறைகேடு நடந்ததாக ‘தி வயர்’ இணையச் செய்தி இதழ் இரண்டு நாட்களுக்கு முன்னர் செய்தி வெளியிட்டிருந்தது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கேட்கப்பட்ட கேள்விகளுக்குக் கிடைத்த பதில்களில் இந்தத் தகவல்கள் வெளியானதாக ‘தி வயர்’ செய்தி வெளியிட்டிருந்தது. எனினும், இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு என ஹிமந்த பிஸ்வ சர்மாவும் அவரது மனைவியும் ஆட்சேபம் தெரிவித்திருந்தனர்.

அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா
அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா

இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மணீஷ் சிசோடியா, “தனது மனைவியின் நிறுவனத்துடன் ஹிமந்த பிஸ்வ சர்மா ஒப்பந்தம் செய்திருந்தார். வேறொரு நிறுவனத்திடமிருந்து 600 ரூபாய்க்கு வாங்கப்பட்ட பிபிஇ கிட்டை 990 ரூபாய் கொடுத்து அவர் வாங்கியிருக்கிறார். இது மிகப் பெரிய குற்றம்” என்று கூறினார். அதற்கான ஆதாரங்களும் தன்னிடம் இருப்பதாகக் குறிப்பிட்டார்.

“தங்கள் கட்சியைச் சேர்ந்த தலைவர் மீது நடவடிக்கை எடுக்க பாஜகவுக்குத் துணிச்சல் இருக்குமா அல்லது ஆதாரமற்ற வழக்குகளை வைத்து தொடர்ந்து எங்களை வேட்டையாடிக் கொண்டிருக்குமா?” என்றும் அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார். இதற்கிடையே அவர் மீது மானநஷ்ட வழக்கு தொடர்ப்போவதாக ஹிமந்த பிஸ்வ சர்மாவும் அவரது மனைவியும் எச்சரித்திருக்கின்றனர்.

முன்னதாக, பாஜக தலைவர் ஒருவர் தொடர்பான ஊழலை மணீஷ் சிசோடியா அம்பலப்படுத்துவார் என கேஜ்ரிவால் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in