
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டைக்கு இன்று நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்திருந்த விருதுநகர் எம்பி-யான மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தைப்பொங்கல் தொகுப்பு மக்களுக்கு வழங்குவதிலும் அரசியல் செய்கின்றனர். தமிழக முதல்வர் ஸ்டாலின் சர்வாதிகாரி போல செயல்படுவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறி வருகிறார். மோடியுடன் இருந்துகொண்டு சர்வாதிகாரம் குறித்து பேசும் அண்ணாமலைக்கு சர்வாதிகாரிக்கான அர்த்தம் தெரியவில்லை என நினைக்கத் தோன்றுகிறது.
ராகுல் காந்தியின் தேச ஒற்றுமை யாத்திரையை கண்டு பாஜக அஞ்சுவதால் பாதயாத்திரையை எப்படியாவது தடுக்க முயற்சிக்கிறது. இந்தியாவின் பன்முகத்தன்மை, வேற்றுமையில் ஒற்றுமையை வலியுறுத்தும் ராகுல் காந்தியின் பாதயாத்திரைக்கு நாடு முழுவதும் பெரும் வரவேற்புக் கிடைத்து வருகிறது. வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவை தோல்வியடையச் செய்வது தான் காங்கிரஸ் கட்சியின் இலக்கு. மோடி ஒன்றும் வீழ்த்த முடியாத தலைவர் இல்லை என்பதை, காங்கிரஸ் கட்சி தேர்தலில் வென்று நிரூபிக்கும்”.
இவ்வாறு மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.