சொந்தங்களுக்காக கட்சியை மறந்த மாணிக்கராஜா!
அமமுகவின் தென்மண்டல அமைப்புச் செயலாளராக இருப்பவர் மாணிக்கராஜா. தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் பேரூராட்சியில் இவரது குடும்பமே எப்போதும் ஆதிக்கம் செலுத்தும். கயத்தார் யூனியன் சேர்மனாக இருக்கும் மாணிக்கராஜா, கடம்பூர் பேரூராட்சியையும் தனது உறவுகளின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர காய் நகர்த்தினார். இந்நிலையில்தான் கடம்பூர் பேரூராட்சித் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
இப்போது மறுதேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கலும் முடிந்துவிட்டது. இதில் ஹைலைட்டான விஷயம் என்னவென்றால் அமமுக இம்முறை இங்கு போட்டியிடவே இல்லை. மாணிக்கராஜா வேட்பாளரை இறக்காமல் வேடிக்கைப் பார்க்க காரணம் இருக்கிறது. இந்தப் பேரூராட்சியில் மூன்று சுயேச்சைகள் மட்டும் வென்றதாக அறிவிக்கப்பட்டு, மற்ற இடங்களுக்குத் தான் தேர்தல் நடக்கிறது. வென்ற சுயேச்சைகளில் மாணிக்கராஜாவின் தம்பி நாகராஜா, தம்பி மனைவி ராஜேஷ்வரி ஆகியோரும் அடக்கம். இப்போது இவர்கள் திமுகவில் இருக்கிறார்கள்.
இங்கு தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதில் தனது தம்பி மனைவியை அமர்த்துவதற்காக அமமுக சார்பில் வேட்பாளரை இறக்காமல் மெளனம் காக்கிறாராம் மாணிக்க ராஜா. அவரோடு சமாதானமாகப் போகவிரும்பும் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூவும், அதிமுக சார்பில் வேட்பாளர்களை நிறுத்தவில்லை என்பது கூடுதல் தகவல்!