திரிபுரா முதல்வராக மாணிக் சாஹா மீண்டும் பதவியேற்றார்: திப்ரா மோதா கூட்டணியில் இடம்பெறுமா?

மாணிக் சாஹா
மாணிக் சாஹா

திரிபுரா மாநில முதல்வராக மாணிக் சாஹா தொடர்ந்து இரண்டாவது முறையாக இன்று பதவியேற்றார், அவருடன் 8 அமைச்சர்களும் பதவியேற்றனர். பிப்ரவரி 16ம் தேதி நடைபெற்ற திரிபுரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அறுதி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.

திரிபுரா மாநிலம் அகர்தலாவில் இன்று நடைபெற்ற மாணிக் சாஹாவின் பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜேபி நட்டா ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்களுடன் அசாம் முதலமைச்சரும், பாஜகவின் வடகிழக்கு வெற்றிகளின் சூத்திரதாரியுமான ஹிமந்த பிஸ்வா சர்மாவும் பங்கேற்றார். மேலும், அருணாசல பிரதேச முதல்வர் பெமா கண்டு, மணிப்பூர் முதல்வர் என் பைரேன் சிங், சிக்கிம் முதல்வர் பிஎஸ் தமாங் ஆகியோரும் கலந்துகொண்டனர். மேலும் விழா மேடையில் முன்னாள் முதல்வர் பிப்லாப் தேப்பும் இருந்தார்.

மாணிக் சஹாவுடன் 8 பேர் புதிய அமைச்சர்களாக பதவியேற்றனர். கடந்த அரசாங்கத்தில் அங்கம் வகித்த ரத்தன் லால் நாத், பிரணாஜித் சிங்கா ராய், சாந்தனா சக்மா மற்றும் சுஷாந்தா சவுத்ரி ஆகியோர் மீண்டும் அமைச்சரானார்கள். பிப்லப் தேப்பின் நெருங்கிய விசுவாசியான டிங்கு ராய், பாஜக பழங்குடியினர் மோர்ச்சாவின் தலைவரான பிகாஷ் தேபர்மா மற்றும் சுதன்ஷு தாஸ் ஆகிய மூன்று பேர் புதிய அமைச்சர்ளாக பதவியேற்றனர். இந்தத் தேர்தலில் ஒரு இடத்தில் மட்டுமே வெற்றிபெற்ற பாஜகவின் கூட்டணிக் கட்சியான திரிபுரா பழங்குடி மக்கள் முன்னணியை (ஐஎப்பிடி) சேர்ந்த சுக்லா சரண் நோட்டியா அமைச்சராகப் பதவியேற்றார்.

இந்த தேர்தலில் 13 இடங்களை கைப்பற்றிய திப்ரா மோதாவுக்கு ஆளும் கட்சி மூன்று அமைச்சர் பதவிகளை ஒதுக்கி வைத்துள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த இரு கட்சிகளின் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. திப்ரா மோதா பாஜக கூட்டணியில் இடம்பெறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மத்திய அமைச்சர் பிரதிமா பௌமிக் தனது எம்.பி பதவியை தக்க வைத்துக் கொள்வார் என்றும், இந்தத் தேர்தலில் அவர் வென்ற தன்பூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து பதவி விலகுவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மாநிலத்தில் தேர்தலுக்குப் பிந்தைய வன்முறைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், எதிர்க்கட்சியான சிபிஎம் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் பதவியேற்பு விழாவை புறக்கணித்தன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in