கடல் பசுவைக் கொன்று கூறு போட்டு விற்பனை!

ராமநாதபுரத்தில் மீனவர் கைது
கடல் பசுவைக் கொன்று கூறு போட்டு விற்பனை!

தொண்டி அருகே கடல் பசுவை வேட்டையாடிக் கொன்று கூறு போட்டு விற்க முயன்ற மீனவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ராமநாதபுரம் தொடங்கி தூத்துக்குடி வரையில் பரந்துவிரிந்து காணப்படும் மன்னார் வளைகுடாவில், 104 வகை பவளத் திட்டுகள், 147 வகைகடல் பாசிகள், 13 வகை கடல் புற்கள், கடல் சங்குகள், கடல் ஆமை, கடல் குதிரை, கடல் அட்டை, கடல் பசு, டால்பின்கள் போன்றவை வாழ்கின்றன. இவற்றைப் பாதுகாப்பதற்காக மன்னார் வளைகுடா உயிர்க்கோளக் காப்பகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அரிய வகை மீன்களையும், கடல்வாழ் உயிரினங்களையும் பிடிப்பவர்கள் மீது வனத்துறைச் சட்டப்படி, ஒரு புலியையோ, யானையையோ வேட்டையாடியதற்கு நிகரான தண்டனை வழங்கப்படும். இது தெரியாமல் பிடிபட்டால்கூட அவற்றை மீண்டும் கடலிலேயே விட்டுவிட வேண்டும் என்றும் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக இப்பகுதியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் சிலர் வேண்டுமென்றே சட்டவிரோதமாக இவற்றைப் பிடிப்பது தொடர்கிறது.

ராக்கப்பன்
ராக்கப்பன்

மீனவர் வலையில்

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே உள்ள நம்புதாளையைச் சேர்ந்த மீனவர்களான ராக்கப்பன் (30) மற்றும் பழனி (25) ஆகியோர் நம்புதாளை கடல் பகுதியில் மீன் பிடித்தபோது, அவர்களது வலையில் 'ஆவுளியா' என்றழைக்கப்படும் கடல் பசு சிக்கியது. வலையை இழுத்துப் பார்த்து கடலுக்குள்ளேயே இது தடை செய்யப்பட்ட கடல் பசு என்பதைத் தெரிந்தது. ஆனால், அவர்கள் வேண்டுமென்றே அதனை படகுக்கு இழுத்துக் கொன்றுள்ளனர். பின்னர் அதனைக் கடற்கரைக்கு கொண்டுவந்து, வெட்டிக் கூறுபோட்டு தெர்மாகூல் பெட்டிகளில் அடைத்து தொண்டி எம்.ஜி.ஆர். நகர் பகுதி மார்க்கெட்டில் விற்பனை செய்துள்ளனர்.

அது தடை செய்யப்பட்ட மீன் என்பதால், அங்கிருந்தவர்கள் இதுகுறித்து வனத்துறைக்குத் தகவல் கொடுத்தனர். உடனே, ராமநாதபுரம் வன உயிரின வனச்சரக அலுவலர் ஜெபஸ் தலைமையிலான வனத்துறையினர் மார்க்கெட்டுக்கு விரைந்துசென்று, ராக்கப்பனை கைது செய்தனர். தப்பி ஓடிய பழனியைத் தேடி வருகின்றனர்.

வனச்சட்டப்படி, வேட்டையாடிய விலங்கையோ, அதன் உடல் பகுதியில் ஒன்றை வைத்திருந்தாலோ குறைந்தது 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைக்கும் என்றும், சமைத்து சாப்பிட்ட மிச்ச எலும்புகள் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டால்கூட இது பொருந்தும் என்றும் வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

Related Stories

No stories found.