மேற்கு வங்க அமைச்சர் கைது; முற்றும் அரசியல் நெருக்கடி: எதிர்கட்சிகள் இணைப்பிற்கு மீண்டும் முயலும் மம்தா

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு பின் மீண்டும் எதிர்கட்சிகள் இணைப்பிற்கு முயல்கிறார் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி. டெல்லியில் ஐந்து நாட்கள் தங்கி எதிர்கட்சிகளின் தலைவர்களான சோனியா காந்தி, சரத்பவார், மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களை சந்திக்கிறார்.

திரிணமூல் காங்கிரஸின் நிறுவனர்களில் ஒருவரும் மாநிலக் கல்வி அமைச்சருமாக இருந்தவர் பார்த்தா சட்டர்ஜி. இவர் ஆசிரியர் நியமன ஊழலால், மத்திய அமலாக்கத்துறையிடம் சிக்கினார். இதன் காரணமாக மத்திய அரசிடம் பின்னடைவிற்கு உள்ளானார் முதல்வர் மம்தா பானர்ஜி. இதையடுத்து அவர் மீண்டும் எதிர்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். இதற்காக, அடுத்த வாரம் ஆகஸ்ட் 3, புதன்கிழமை முதல் ஐந்து நாட்களுக்காக டெல்லியில் முகாமிட இருப்பதாகத் தெரிய வந்துள்ளது.

இந்த விஜயத்தின் போது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தேசியவாதக் காங்கிரஸின் சரத்பவார், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியின் சந்திரசேகர்ராவ், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஆம் ஆத்மியின் அர்விந்த் கேஜ்ரிவால் மற்றும் சமாஜ்வாதியின் அகிலேஷ் யாதவ் ஆகியோரை சந்திக்க உள்ளார். இவர்களது கட்சிகளின் எம்.பிக்கள் மக்களவையில் சுமார் 125 பேர் உள்ளனர். தமிழக முதல்வர் ஸ்டாலின் அன்றைய தினம் டெல்லி வருவாரா அல்லது அவரது கட்சியின் மூத்த தலைவர்கள் மம்தாவை சந்திப்பார்களா? என்பது இன்னும் தெளிவாகவில்லை. இவர்களுடனான சந்திப்பில் மத்திய அரசின் புலனாய்வு நிறுவனங்கள் சார்பில் எதிர்கட்சிகள் மீது நடைபெறும் சோதனைகள் பற்றி ஆலோசிக்க உள்ளார்.

கடந்த வாரம் நடைபெற்ற புதிய குடியரசு தலைவருக்கானத் தேர்தலில் எதிர்கட்சிகள் சார்பில் முன்னாள் நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா போட்டியிட்டார். இவரை முன்னிறுத்தியதில் திரிணமூல் காங்கிரஸ் தலைவரான மம்தா முக்கியப் பங்காற்றினார். இதை தொடர்ந்த குடியரசு துணைத்தலைவருக்கானத் தேர்தலில் மம்தா எதிர்கட்சிகளிடம் இருந்து விலகத் துவங்கினார். குடியரசு துணைத்தலைவர் தேர்தலை புறக்கணிப்பதாகவும் மம்தா அறிவித்திருந்தார். குடியரசு துணை தலைவராக எதிர்கட்சிகளின் வேட்பாளர் மார்கரெட் ஆல்வாவிற்கு தனது ஆதரவை மம்தா அளிக்கவில்லை.

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜிhindu கோப்பு படம்

இதனிடையே, மகராஷ்டிராவை போல், தனது கட்சியிலும் பாஜக பிளவை ஏற்படுத்த முயல்வதாகக் குற்றமும் சுமத்தி இருந்தார் மம்தா. இதை ஆமோதிப்பது போல், பாஜகவின் முக்கியத் தலைவரும் பாலிவுட் நடிகருமான மிதுன் சக்ரவர்த்தி, திரிணமூல் கட்சியின் 38 எம்எல்ஏக்கள் தங்களது தொடர்பில் இருப்பதாகக் கூறியிருந்தார். இதை மறுத்த முதல்வர் மம்தா, பாஜகவை சமாளிக்க மீண்டும் எதிர்கட்சிகள் ஒன்றிணைப்பை கையில் எடுத்திருப்பதாகத் தெரிகிறது.

இதுபோல், அரசியல் பிரச்சனைகளில் எதிர்கட்சிகள் இணைப்பை செய்து வந்த கட்சியாக காங்கிரஸ் இருந்தது. இக்கட்சிக்கு பின் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரும் இந்த இணைப்பில் இறங்கி இருந்தார். இடதுசாரிகளும் தேர்தல் சமயங்களுக்கு முன்பாக எதிர்கட்சிகள் இணைப்பிற்கு அடிகோலி வந்தன. இதில், சமீப காலமாக திரிணமூல் காங்கிரஸ் தலைவி மம்தாவும் இறங்கினார். ஆனால், மம்தாவின் இணைப்பினால் ஒருமுறை கூட எதிர்கட்சிகளுக்கு எதிர்பார்த்த பலன் கிடைத்ததாகத் தெரியவில்லை.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in